’ஒரு நல்ல ‘பீல் குட் மூவி’ வந்திருக்கிறதா’ என்று தேடும் வழக்கம் எல்லா மொழி ரசிகர்களிடமும் உண்டு. ‘லாலா…லா..’ பாடி ஒரே பாடலில் தன்னம்பிக்கை சிகரமாக உயரும் விக்ரமன் டைப் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களைக் கவரும்.
அதே நேரத்தில், சினிமாத்தனமான அம்சங்களைக் குறைத்து யதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் விதமான படைப்புகளும் கூட நம் மனதைத் தொடும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு படத்தைப் பார்த்துவிட்டு ‘நெஞ்சை நக்குற மாதிரியான கதை’ என்று சிலர் விமர்சிப்பதுண்டு.
கிட்டத்தட்ட அந்த வகையறா ‘பீல்குட்’ திரைப்படம்தான் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘777 சார்லி’. இதில், நாயகன் ரக்ஷித் வளர்க்கும் நாய் அவரை அவ்வப்போது நக்கிக்கொண்டே இருப்பது அதற்கான காரணமல்ல.
அதையும் தாண்டி, வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வரமென்று நினைத்து எதிர்கொள்ள வைத்ததன் மூலம் நம் நெஞ்சங்களில் ஈரம் கசியச் செய்கிறது இப்படைப்பு.
இது ஒரு கன்னட ‘மொழி மாற்று’ தமிழ் திரைப்படம். மலையாளம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.
எதையும் எதிர்கொள்!
வாழ்வென்பது கணிக்கவியலாத நிகழ்வுகளின் தொகுப்பு. அதில் வெற்றி பெற்றவர், தோல்வியுற்றவர் என்று வகைப்படுத்துவது பெருமிதங்களால் நிரம்பியவர்களின் வேலை.
வாழ்வை வாழ்ந்து தீர்க்க வேண்டுமென்பவர்கள் மட்டுமே அதில் திருப்தியை ருசிப்பார்கள். அப்படியொரு நிலையை அடையும் முன்பாக, நாம் துன்பங்களால் நொந்திருப்போம்; வாழ்வின் வெம்மை தாளாமல் துடித்திருப்போம்; சொல்லவியலா உணர்வுகளை வெளிக்கொட்ட முடியாமல் அலறியிருப்போம்; துணையின்றித் தவித்திருப்போம்.
சட்டென்று ஒருநாள், வழக்கமான அந்த வாழ்க்கை சொர்க்கம் போலத் தோன்றும். அந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு, இக்கதையின் நாயகன் தர்மாவுக்கு (ரக்ஷித் ஷெட்டி) கிடைக்கிறது. அந்த மாற்றமாக கீட்டன் @ சார்லி எனும் ஒரு லேப்ரடார் நாய் திகழ்கிறது.
ஆம்! ஒரு நாயின் வருகை ஒரு மனிதனின் அதுநாள்வரையிலான வெறுமையைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது.
தாய், தந்தை, தங்கையை சிறுவயதிலேயே இழந்து மனதளவில் சிறுவனாகவே உணரும் ஒரு வாலிபனுக்கு நாய் வளர்ப்பதில் எத்தகைய ஆர்வம் இருக்கும்?
அதனைப் பார்த்தாலே வெறுக்கிறான், துரத்தியடிக்கிறான், அது விபத்தில் சிக்கும்போது வேறு வழியில்லாமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்.
நாயை வளர்க்கத் தகுந்த மனிதர்கள் கிடைக்கும் வரை நீயே பார்த்துக்கொள் என்று அம்மருத்துவர் சொல்ல, அரைமனதாகச் சம்மதிக்கிறான்.
அந்த நாட்களில் அந்நாய் அம்மனிதனைப் படுத்தி எடுக்கிறது. ஆனால், மெல்ல தர்மா எனும் மனிதனின் வாழ்க்கை அர்த்தப்பூர்வமானதாகிறது. சக மனிதர்கள் படும் துயரங்கள் அவன் கண்ணுக்குத் தென்படுகிறது.
ஆலையில் லேத் டெக்னிஷியனாக இருக்கும்போது உடன் பணியாற்றுபவர்களிடம் எரிந்து விழுந்துவிட்டு, வீடு திரும்பியதும் இரண்டு இட்லி, ஒரு பாட்டில் பீர், கொஞ்சம் தூக்கம் என்றிருந்து அடுத்தநாளை எதிர்கொள்பவன் முன்னால் வேறொரு உலகம் தெரியத் தொடங்குகிறது.
குழந்தை முதலே சார்லி சாப்ளின் நகைச்சுவையை மட்டுமே ரசிக்கும் தர்மாவுக்கு, அந்த நாய் தன் வாழ்வில் புகுந்த சார்லியாகத் தோன்றுகிறது. அப்போது முதல் அந்த நாயை தன் வாழ்வில் கிடைத்த பரிசாக எண்ணுகிறான்.
அந்த நாய்க்கு புற்றுநோய் என்று தெரியவரும்போது ’இதுவும் எனக்கு துணையாக இருக்காதா’ என்று வருத்தத்தில் உழல்கிறான். அதன்பின், மீண்டும் வெறுமையில் சிக்கிச் சின்னாபின்னாமாவதற்குப் பதிலாக அவன் என்ன செய்கிறான் என்பதே ‘777 சார்லி’யின் மீதிக்கதை. இதுதான், இப்படத்தை உலகத்தரமான ‘பீல்குட்’ மூவியாக மாற்றுகிறது.
சிறந்த ‘பீல்குட்’ திரைப்படம்!
எனது நினைவில், நான் பார்த்த ஆகச்சிறந்த ‘பீல்குட்’ திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. நடக்கவியலா மாற்றுத்திறனாளியாகவும் ஆட்டிசம் பாதித்தவனாகவும் ஒரு சிறுவன் உலக சாதனைகள் பல படைத்து பெரும் கோடீஸ்வரனாக மாறுவதுதான் அப்படத்தின் கதை.
இது தவிர ‘பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்’, ‘சைடு அவேஸ்’ என்று வாழ்வின் துன்பங்களையும் இன்பங்களையும் இயல்பாக எண்ண வைக்கிற படைப்புகள் ஒவ்வொரு ரசிகருக்கும் வெவ்வேறானதாக இருக்கும்.
இந்தியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘பீகே’, ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’ போன்றவை அந்த ரகத்தில் சேரும்.
அமீர்கான் இயக்கிய ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படம், படம் பார்ப்பவர்களைப் புத்துணர்வுடன் மாறச் செய்யும். ஒரு நல்ல திரைப்படத்தின் பணியே அத்தகைய மாற்றங்களைச் சாத்தியப்படுத்துவதுதான்.
வாழ்வில் இனி ஒரு அங்குலம் கூட மாற்றமில்லை என்றிருக்கும் ஒருவன் இமாலய மாற்றங்களுக்கு உள்ளாவதை காணும்போது உருவாகும் மன எழுச்சிக்கு அளவேயில்லை. ‘777 சார்லி’யும் அப்படியொரு உணர்வையே ஏற்படுத்துகிறது.
சிறிதே வேறுபட்டு..!
தேமேவென சென்று கொண்டிருக்கும் வாழ்வில் யாரோ ஒருவர் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பது ‘பூவே பூச்சூடவா’க்கு முன்னும் பின்னுமாகப் பல படங்களில் நாம் ரசித்த கதைதான். அவற்றில் இருந்து சிறிதே வேறுபட்டு, இதில் அந்த ஒருவராக ஒரு நாய் இருக்கிறது.
நாயகன் இரண்டு இட்லி கேட்கும்போதெல்லாம் மூன்றை எடுத்து வைக்கும் கிழவன் – கிழவியாக நடித்திருக்கும் சோமசேகர் ராவ் – பார்கவி நாராயண் ஜோடியும் கூட நம் மனதில் பதிந்துவிடுகின்றனர். இப்படிப் படம் நெடுக பல பாத்திரங்கள் நம் அடிமனதைத் தீண்டுகின்றன.
பின்பாதியில் பாபி சிம்ஹாவின் இருப்பு, நாய்களின் திறனை வெளிப்படுத்தும் போட்டி, இமயமலை பனிமழை என்று பல அம்சங்கள் நம்மை ‘ரிப்ரெஷ்’ செய்கின்றன. முக்கியமாக, காதல் மனைவி தன்னை விட்டுச் சென்றதை ‘கேஷுவலாக’ சிம்ஹா சொல்லுமிடம் அருமையான கவிதை!
ஒவ்வொரு முறையும் டிவி பார்த்து சார்லி துள்ளிக் குதிப்பதை காணும் தர்மா, அது ‘ஐஸ்கிரீம்’ பார்த்து குதூகலமடையவில்லை என்று உணருமிடம் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.
அவற்றைத் தவிர, இக்கதையில் பெரிய திருப்பங்கள் என்று எதுவுமில்லை. ஆனாலும், இரண்டே முக்கால் மணி நேரம் பொறுமையாக நகர்வதை நம்மால் நெகிழ்வுடன் கடக்க முடியும்.
முதல் பாதி முழுக்க பணியாற்றுமிடம், வீடு இருக்கும் காலனி, கடை வீதி என்று நாயகன் ஒரு டஜன் மனிதர்களையாவது எதிர்கொள்கிறான். அந்த நாயும் அதில் ஒன்றாகிறது. அப்போது, அவனது உலகமே சிறியதாகத் தெரிகிறது.
இரண்டாவது பாதியில் அந்த நாயும் அவனும் பிரிக்கமுடியாத பாசப்பிணைப்பில் இணையும்போது, இருவரும் இந்தியாவையே வலம் வருகின்றனர். இது, இப்படத்தில் இருக்கும் ரசிக்கத்தக்க முரண்.
அது மட்டுமல்லாமல் ’கீட்டன்’ என்று பெயர் சூட்டப்பட்ட நாயொன்று நாயகனிடம் வந்த பிறகு ‘சார்லி’ என்று பெயர் மாற்றம் அடைவதற்கு இயக்குனர் வேறொரு விளக்கம் தரலாம். இரண்டும் மாபெரும் ஹாலிவுட் ஜாம்பவான்கள் என்பது மட்டுமே தெரிந்த நமக்கு அது ஒரு வித்தியாசமாக மட்டுமே பிடிபடுகிறது.
’விக்ரம்’ களேபரத்திற்கு நடுவே..!
ஜுன் 3ஆம் தேதியன்று வெளியாகித் தொடர்ச்சியாக வீறுநடை போடும் ‘விக்ரம்’ திரைப்படத்தால் சிறு படங்கள் பல வெளியாக முடியாத நிலை.
கடந்த வாரத்தில் இரு வேறு தியேட்டர்களுக்குச் சென்று, இரண்டு முறையும் ‘777 சார்லி’க்கு பார்வையாளர்கள் இல்லை என்று காட்சி ரத்து செய்யப்பட்டது.
அதற்குப் பதிலாக ‘விக்ரம்’ திரையிடப்பட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையின் பல தியேட்டர்களில் இத்திரைப்படம் ‘ஹவுஸ்புல்’ ஆக ஓடுவது விநோதமான விஷயம்.
எத்தனை கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பதைத் தாண்டி, இதுதான் உண்மையான ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று சொல்லும்படியாக அமைந்திருக்கிறது ‘777 சார்லி’.
காரணம், இது மனிதனின் ஆதி உணர்வான துணை தேடுதலையும் பாசம் கொட்டும் மனதின் இயல்பையும் பேசுகிறது.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றபோது, ‘வாழ்வில் அன்பு, குரோதம் என்று இரண்டு விஷயங்கள் முன்னால் இருந்தபோது, நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதுபோல எதிர்பார்ப்பற்ற அன்பின் பெருகையைச் சொல்கிறது.
இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி மட்டுமல்லாமல், மருத்துவர் பாத்திரத்தில் நடித்த ராஜ் பி ஷெட்டியும் கூட ஒரு வெற்றிகரமான இயக்குனர் தான். தேவிகா எனும் பாத்திரத்தில் நடித்த சங்கீதா சிருங்கேரி, இப்படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார்.
இதன் இயக்குனர் கிரண்ராஜ் ’முறையற்ற வகையில் நாய்கள் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகுவதை’ ஒரு தரவாக இறுதியில் முன்வைக்கிறார்.
படமும் கூட, மேலோட்டமாக தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் வேண்டுகோளாகவே தென்படுகிறது. அதைத் தாண்டி, ’கைவிடப்பட்டவர்கள் என்று இந்த உலகில் எவருமில்லை’ என்ற எண்ணத்தை விதைத்திருப்பதே ‘777 சார்லி’யின் ஆகப்பெரிய வெற்றி என்று சொல்வேன்.
இது போன்ற திரைப்படங்களின் வருகை அதிகமாவதும், பெரிதாகக் கொண்டாடுவதும் பிரம்மாண்டமான செலவில் உருவாகும் திரைப்படங்களுக்கு ஈடாக மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் ஒரு அற்புதமான வழியாக அமையும்.
அந்த ‘ராஜபாட்டை’யை நிரந்தரமாக்குவது சிறு பட்ஜெட் படங்களின் மீதான கவனக் குறைவை நிச்சயம் தடுத்து நிறுத்தும்!
-உதய் பாடகலிங்கம்