பத்திரிகையாளர்களுக்கு முதல் மரியாதை
தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம்.
அவரது 80 ஆம் ஆண்டு விழா இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில் தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.
விழாவிற்குப் பத்திரிகையாளர்களை அழைக்கும் சந்திப்பில் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர். கே. செல்வமணி, அன்புச்செழியன், காட்ரகடா பிரசாத் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவிற்கான லோகோவை வெளியிட்டனர்.
பின்னர், மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி, தேவராஜ், கலைப்பூங்கா ராவணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “திரையுலகில் பெரியளவில் பாராட்டுகளை பெறாத திறமைசாலி பஞ்சு அருணாச்சலம். நான் அவருடன் வெகுநாட்கள் பயணத்திருக்கிறேன். இவ்வளவு நாட்கள் அவரை பாராட்டாதது வருத்தம். இப்போது அது நிகழ்வது பெரிய சந்தோசம்” என்றார்.
“50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் சாதனை படைத்தவர் சரித்திரம் படைத்தவர். எழுத்தால் தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா வெற்றிகளைத் தந்தவர் பஞ்சு அருணாச்சலம் இந்த பாராட்டு விழாவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன்” என்று குறிப்பிட்டார் கலைப்புலி தாணு.
இயக்குநர் சங்கத் தலைவர் ஆர். கே. செல்வமணி, “இந்த மண்டபமே நன்றியால் நிறைந்த மண்டபமாக இருக்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என ரஜினி சார் வாழ்வை மாற்றிய படங்களைத் தந்தவர் பஞ்சு சார், அதே போல் கமல் சாரை சகலவல்லவன் போன்ற படங்கள் மூலம் மாஸாக மாற்றியவர்.
அந்த காலத்தில் பஞ்சு சார் கதையென்றால் முன்னணி நட்சத்திரங்கள் கேள்வி கேட்காமல் நடிப்பார்கள். அவருக்கு விழா எடுப்பது எழுத்தாளர்களுக்கு எடுக்கும் விழா” என்றார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன், “அண்ணன் பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் எங்கள் வாழ்வை ஆரம்பித்துவைத்தது. அண்ணன் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். இப்போது நடப்பது மகிழ்ச்சி.
எங்கள் குடும்பத்தில் நடக்கும் விழாவில் பேசுவதுபோல் உள்ளது. இளையராஜா அண்ணனைத் தூக்கிவிட்டது பஞ்சு அண்ணன்தான். அதே போல் என்னை வளர்த்துவிட்டவர் பாரதிராஜா. அவருக்கு நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன்” என்று நெகிழ்ந்து பேசினார்.
இயக்குநர் பாரதிராஜா, “பஞ்சு ஒரு மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் அவரால் வளர்ந்தவர்கள். என் அனைத்து படங்களையும் அவருக்குப் போட்டுக்காட்டுவேன்.
அவர் பரிந்துரைகளைக் கேட்டு அதில் திருத்தங்கள் செய்வேன். அது படத்திற்கு பெரும் உதவியாய் இருக்கும்.
அவர் இல்லையென்றால் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்க மாட்டார். பஞ்சு அருணாச்சலத்தின் பங்கு தமிழ் சினிமாவில் அதிகம். அவருக்கு விழா எடுப்பது நமது கடமை. அவருடைய விழாவிற்குத் தமிழ் திரையுலகம் முழுமையாக வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பா. மகிழ்மதி