எங்கெங்கெல்லாமோ சுழன்றாடும் சுழல்!

சிங்கம் என்றால் வீரம், நரி என்றால் கயமைத்தனம், மான் என்றால் அப்பாவித்தனம் என்று விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் ஒரு வகைப்பாட்டுக்குள் அடக்குவதைப் போலவே, நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் சாதி, மத, இனவாரியாக மட்டுமல்லாமல் அவர்களின் தோற்றம், பேச்சு, பழக்கவழக்கம் சார்ந்து அடையாளப்படுத்துகிறோம்.

சில நேரங்களில் அந்த அடையாளங்கள் வெறும் முகமூடிகள் என்று புரியும்போது வெளிவரும் உண்மைகள் மரண ஓலத்தில் ஆழ்த்தும்.

அப்படிப்பட்ட ஓலங்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னாமானவர்களைப் பற்றி பேசுகிறது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ‘சுழல்’ வெப் சீரிஸ். புஷ்கர் காயத்ரி எழுதி தயாரித்துள்ள இப்படைப்பை ’மகளிர் மட்டும்’ பிரம்மாவும் ‘கிருமி’ அணுசரணும் இயக்கியுள்ளனர்.

பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, பிரேம்குமார், ஹரீஷ் உத்தமன், குமரவேல், லதாராவ், நிவேதா சதீஷ், இந்துமதி மணிகண்டன், கோபிகா, சந்தானபாரதி உட்பட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

வாழ்க்கை நீரோட்டமா..?

ஒரு சிமெண்ட் தொழிற்சாலையின் வரவால் சாம்பலூர் எனும் சிற்றூர் முற்றிலுமாக மாறுகிறது. அந்த ஆலை 90களில் தொடங்கப்பட, அப்போது கட்டட வேலை பார்க்க வந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மணி எனும் பதின்பருவச் சிறுமி காணாமல் போகிறார்.

அன்றைய தினம், அவ்வூரிலுள்ள அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழாவின் முதல்நாள் பூஜை நடந்தேறுகிறது.

25 ஆண்டுகள் கழித்து, அதேபோல அக்கோயில் மயானக்கொள்ளை திருவிழா தொடங்கும் நாள். அன்றைய தினம் பகலில் சிமெண்ட் ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி போராட்டம் நடத்துகின்றனர் சண்முகம் (பார்த்திபன்) தலைமையிலான தொழிற்சங்கத்தினர்.

அன்றிரவு, சண்முகத்தின் இளைய மகள் நிலா (கோபிகா குமார்) வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அதேநேரத்தில் ஆலையில் தீ விபத்து நிகழ்கிறது. திருவிழா கொண்டாட்டம், தீ விபத்து என்று ஊரே அல்லோகலப்பட, நிலா காணாமல்போனது அடுத்த நாள் காலையில் தெரிய வருகிறது.

நடந்த விபத்துக்கு சண்முகம்தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார் ஆலை முதலாளியின் மகன் த்ரிலோக் வாடே (ஹரீஷ் உத்தமன்). ஆனால், அக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய முடியாது என்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா (ஸ்ரேயா ரெட்டி).

இந்த சூழலில், சண்முகத்தை விபத்து நடப்பதற்கு முன் பார்த்ததாக ஒரு கான்ஸ்டபிள் சொல்ல, உடனடியாக அவர் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில், காணாமல் போன தன் மகளைக் கண்டறிய முடியாமல் தவிக்கிறார் சண்முகம்.

சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) விசாரணையில், ரெஜினாவின் மகன் அதிசயம் (பெடரிக் ஜான்) நிலாவின் பின்னால் சுற்றியது தெரிய வருகிறது. அதேபோல, ஒரு சிவப்பு நிற காரில் நிலா ஏற்றப்படுவதும் சிசிடிவியில் கிடைக்கிறது.

இதனால், தன் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட மூணார் சென்ற அதிசயம்தான் நிலாவைக் கடத்தியதாகச் சந்தேகம் எழுகிறது.

சக்கரை மேற்கொள்ளும் விசாரணைக்கு இணையாக, தன் பங்கிற்கு களத்தில் இறங்கிப் புலனாய்வு செய்யத் தொடங்குகிறார் சண்முகத்தின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்).

அதிசயத்திற்கும் நிலாவிற்கும் இடையே சுமூகமான உறவு இருந்ததா? நிலா கடத்தப்பட்டாரா இல்லையா? ஆலையில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது உட்பட பல்வேறு கேள்விகள் அடுத்தடுத்து எழ,

அதற்கான பதில் தெரியவரும்போது கதையில் திருப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இறுதியில், அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் கிடைக்கும்போது ஒட்டுமொத்தமாகப் பிரதான பாத்திரங்களின் குணாதிசயங்கள் பழுப்பும் வெளுப்புமாக நமக்குக் காணக் கிடைக்கின்றன.

அப்போது, நீரோட்டம் போல சொல்லப்படும் வாழ்வில் எத்தனை சுழல்கள் மேலெழுந்தவாறும் அமிழ்ந்தவாறும் இருக்கின்றன என்பது உணரப்படுகிறது.

நல்ல கலைஞர்களின் தேர்வு!

ஒரு அப்பாவாகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் இப்படைப்பில் தலைகாட்டியிருக்கிறார் பார்த்திபன். குறைவான காட்சிகள் என்றாலும், தனக்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது ஜோடியாக வரும் இந்துமதிக்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பார்த்திபனுக்கு இணையான முக்கியத்துவம் ‘திமிர்’ ஸ்ரேயா ரெட்டிக்கு. இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக விறைப்பாக நிற்கிறார். அவரது நடை கிண்டலுக்குரியதாக இருந்தாலும், தாய் பாசத்தை உணர்த்தும் காட்சிகளில் அசத்தியிருப்பதை மறக்க முடியாது.

அவரது கணவர் வடிவேலுவாக வரும் பிரேம்குமார், இப்படைப்பு முழுக்க அடக்கி வாசித்திருக்கிறார். அப்பாத்திரத்தினால் கதையில் பெரிதாக மாற்றம் நிகழாததால், அதன் முக்கியத்துவம் முற்றிலுமாக குறைந்துவிடுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஓபனிங் பில்டப் பெரிதாக இருந்தாலும், அவரது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைவுதான். மிக முக்கியமாக, இறுதியாக வரும் இரண்டு அத்தியாயங்களில் அவரது பாத்திரத்திற்கென்றே தனியாக காட்சிகள் வடிக்க வேண்டியது ‘மிஸ்’ ஆகியிருக்கிறது.

இவர்களைத் தாண்டி இக்கதையில் அதிகம் நிறைந்திருப்பது கதிர் மட்டுமே.

சக்கரை என்ற சக்ரவர்த்தியாக வருபவருக்கு நகைச்சுவை, கோபம், சோகம், காதல் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு.

முக்கியமாக, அவரது ஜோடியாக வரும் நிவேதிதா சதீஷ் முன்பாக ஐஸ்வர்யா ராஜேஷை காதலுடன் பார்க்கும் காட்சி அசத்தல் ரகம்.

இவர்களைத் தாண்டி ஆலை முதலாளியாக வரும் ஹரீஷ் உத்தமன், அவரது தந்தையாக நடித்தவர், இன்சூரன்ஸ் நிறுவன கண்காணிப்பாளராக வரும் சந்தானபாரதி, கான்ஸ்டபிளாக வரும் பிரசன்ன பாலச்சந்திரன்,

சாமி கொண்டாடி ஈஸ்வரனாக வருபவர், பூசாரியாக வரும் வெங்கடேசன், மலராக வரும் சவுந்தர்யா, பெடரிக் ஜான், கோபிகா, மணியாராக வரும் தேனப்பன், மறைந்த நிதிஷ் வீரா உட்பட பலரும் இதில் வந்து போயிருக்கின்றனர்.

சிலரது வரவு ஒரு சில காட்சிகளோடு முடிந்துபோவது திரைக்கதையில் அவர்களது இருப்பை ‘தேமே’வென ஆக்கியிருக்கிறது.

வெவ்வேறு அடுக்குகள் கொண்ட பாத்திரங்களாகவே இல்லாவிட்டாலும், ஒவ்வொருவரும் தமது இருப்பைப் பதிவு செய்யும்விதமாகவே நடித்திருக்கின்றனர்.

அவர்களது முகங்களையும் உணர்வுகளையும் நமது மனதில் பதியச் செய்திருக்கிறது முகேஷ்குமாரின் ஒளிப்பதிவு.

அங்காளம்மன் கோயில் திருவிழாவைக் காட்டுவதில், முதல் 5 எபிசோடுகளில் இயக்குனர் பிரம்மாவுக்கு வலதுகரமாக விளங்குகிறது அவரது உழைப்பு.

சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசையும் பாடல்களும் இப்படைப்பின் பெரும்பலம். முக்கியமான திருப்பங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் நம் மனதைத் தயார்படுத்துவதில் பின்னணி இசைக்குப் பங்கு அதிகம்.

திருவிழா காட்சிகளில் பிரமாண்டம் கூட்டும் அருண் வெஞ்சாரமூடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, இறுதியாக வரும் குகைக்காட்சிகளில் மிக எளிமையாகப் பயமுறுத்த உதவுகிறது.

அதேநேரத்தில், திரைக்கதை தடம் மாறுவதற்கேற்ப காட்சிகளை எந்த வரிசையில் சொல்வதென்பதில் திணறியிருக்கிறது ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு.

முதல் 5 எபிசோடுகளில் தென்படும் விறுவிறுப்பு அதற்கடுத்த 3 எபிசோடுகளில் இல்லை. அதேநேரத்தில், பின்பாதியில் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பிரம்மா மற்றும் அனுசரண் எனும் இரு இயக்குனர்களால் இந்த வித்தியாசம் எளிதாக கையாளப்பட்டிருக்கிறது.

ஆனாலும், ‘சுழல்’ எழுத்தாளர்களான புஷ்கர் காயத்ரியின் படைப்பாக்கத்தில் இன்னும் கொஞ்சம் நுணுக்கங்களும் பொதுச்சமூகத்தின் புத்தியுடன் இணைந்து நிற்கும் லாவகமும் கலந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவ்வாறில்லாதிருப்பது பெரும் உழைப்புக்கு பாதி வெற்றியையே தர வேண்டிய இக்கட்டான நிலைக்கு காரணமாகியிருக்கிறது.

இலக்கற்றுப்போன ‘த்ரில்’ உணர்வு!

‘சுழல்’ ஒரு த்ரில்லர் என்றாலும், மனநலம் சார்ந்த பல விஷயங்களை விவரிக்கும் வாய்ப்புகள் கதையில் இருந்தும் அவை தவறவிடப்பட்டிருக்கின்றன. இது போன்ற அம்சங்களைப் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்துகொள்வார்கள் என்று புறந்தள்ளுவது சரியான அணுகுமுறையல்ல.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்தான் கதையின் மையம் எனும்போது, அதனை நேரடியாகவோ, பூடகமாகவோ தொடக்கம் முதல் சொல்ல வேண்டியது கட்டாயம். அதனை ஒரு ‘சர்ப்ரைஸ்’ போன்று கையாண்ட உத்தி பலனளிக்கவில்லை.

தொடக்கத்திலேயே அது பற்றிய குறிப்புகள் அடிக்கோடிடப்பட்டிருந்தால், அது குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதாக இது மாறியிருக்கும். ஐஸ்வர்யாவின் பாத்திரத்தை அதற்காகப் பயன்படுத்தாமல் விட்டிருப்பது பெரும் அவலம்.

பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் போதுமான அளவுக்கு கிடைக்காத குழந்தைகளே பதின்பருவத்தில் காதலில் எளிதாக விழுகின்றனர் என்னும் எண்ணமும் இப்படைப்பில் காணக் கிடைக்கிறது.

அதற்கு மனநல ரீதியில் பல காரணங்கள் சொன்னாலும், அவை எதுவும் திரைக்கதையில் வெளிப்படவில்லை என்பதே உண்மை.

முக்கியமாக, அம்மணி என்ற பெண் பற்றிய விவரிப்பு திரைக்கதைக்கு எவ்வகையிலும் உதவவில்லை.

இதனால், திரைக்கதையில் ‘த்ரில்’ உணர்வு இலக்கற்று பாய்கிறது. குறிப்பாக, அங்காளம்மன் கோயில் திருவிழாவின் ஆன்மிகப் பின்னணியும் கதையில் நிகழும் பெண் குழந்தைகள் மீதான அத்துமீறலும் சரியான புள்ளியில் இணையவில்லை.

இதனால், அழகழகாக சொல்லப்பட்ட பல விஷயங்கள் வெறும் துண்டு தோரணங்களாகவே நின்று விடுகின்றன.

கொலையுண்ட பெண்ணின் சாம்பலை கோயில் பிரசாதமாக தருவதாகச் சொல்வதை அவலமாக காட்டிவிட்டு, அடுத்த நிமிடமே அதற்குப் பின் பொதுநலம் இருப்பதாக நியாயப்படுத்தியிருப்பது எதிர்ப்புகள் குறித்த பயத்தையே காட்டுகிறது.

ஒவ்வொரு பாத்திரத்தின் செயல்பாட்டுக்கான நியாயத்தை சொல்லியிருந்தாலே திரைக்கதையின் ஏற்ற இறக்கங்களை ஓரளவு சரிப்படுத்தியிருக்கலாம். அவ்வாறில்லாதது ’லாஜிக்’ சார்ந்த பல கேள்விகளை எழுப்புகிறது.

டைட்டிலுக்கு முன்பாக ஒரு முன்கதை அல்லது காட்சி, எபிசோடு முடிவில் ஒரு திருப்பம், திரைக்கதையில் ஆங்காங்கே கண்ணி வைத்தாற்போன்று திருப்பங்களுக்கான குறிப்புகள், ஒட்டுமொத்தமாகப் படைப்பின் முடிவில் அனைத்துக்குமான பதில்கள் என்பதே வெப்சீரிஸின் இலக்கணமாக கருதுகிறேன்.

‘மனி ஹெய்ஸ்ட்’, ‘சேக்ரட் கேம்ஸ்’, ‘லைலா’ தொட்டு பல படைப்புகள் இவ்வாறே அமைந்திருக்கின்றன. ‘சுழல்’ இந்த இலக்கணத்தைப் பின்பற்றாவிட்டாலும் மொத்தமாக சுமார் ஆறரை மணி நேரம் இடைவிடாது பார்க்கச் செய்கிறது.

அது மட்டுமே இப்படைப்பின் பலம்; அது சரிதானா என்பதை இன்னும் சில தினங்களில் இதன் வெற்றி சொல்லிவிடும்!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment