காற்றைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம்!

ஜூன் 15 – உலகக் காற்று தினம்

‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை…’

உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் துவங்கி குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை பல வகைகளில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது காற்று.

உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம். உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரிய மில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

அதே வேளையில் உயிரினங்கள், பிராணவாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. உயிரினங்களின் இன்றியமையா தேவையான காற்று, இன்று பல வழிகளிலும் மாசு அடைந்திருக்கிறது.

காற்றின் தேவையை அறிந்து கொள்ளவும், அதனை மாசு இல்லாமல் பாதுகாக்கப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக காற்று தினமாக ஜூன் 15 கொண்டாடப்படுகிறது.

வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கு வாடை எனவும், தெற்கில் இருந்து வீசும் காற்றுக்கு சோழகம் (தென்றல்) எனவும், கிழக்கில் இருந்து வீசும் காற்றுக்கு கொண்டல் என்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றுக்கு கச்சான் எனவும் வீசும் காற்றுக்கும் கூட பெயர் வைத்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்.

காற்றுக்கு சூரியக் காற்று, கோள் காற்று, வன் காற்று, சூறாவளி காற்று என அறிவியல் ரீதியான பெயர்களும் உள்ளன.

சூரியனில் இருந்து வெளியேறும் வளிமங்கள் சூரியக் காற்று எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்கள் வெளியேற்றத்தை கோள் காற்று எனவும், குறைந்த நேரத்தில் மிக வேகமாக வீசும் காற்று வன் காற்று எனவும், நீண்ட நேரம் நீடிக்கும் பலமான காற்று சூறாவளி எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலம் 79% நைட்ரஜனாலும், 20% ஆக்சிஜனாலும், 3% கரியமில வாயுவாலும், எஞ்சியவை இதர வாயுக்களாலும் நிறைந்துள்ளது.

கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றும் மரங்கள் காற்றின் தோழன். அந்த தோழனை வேரறுப்பதால் நச்சு வாயுக்கள் காற்று மண்டலத்தில் பரவுகின்றன.

மேலும் பெருகிவரும் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றில் கலப்பதால் நச்சுப் படலத்தை ஏற்படுத்துகிறது.

இதன் மூலம் நல்ல காற்று மாசடைந்து நச்சுக் காற்றாக மாறுகிறது. இதை சுவாசிப்பதன் மூலம் காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல் காசநோய், ஆஸ்துமா, நுரையீரல் புற்று, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் உருவாகின்றன.

இது மட்டுமின்றி பூமியில் உள்ள நீர் நிலைகள், தாவரங்கள், புராதன நினைவுச் சின்னங்கள், கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதற்கு உதாரணமாக தாஜ்மஹாலை சொல்லலாம். பளிங்கு கல் மாளிகையாக ஜொலித்த தாஜ்மஹால் மாசுக் காற்றின் விளைவால் மஞ்சள் மஹாலாக மாறி வருகிறது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியான தொழிற்சாலைகள் வெளியேற்றும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றால் மண்ணில் அமில மழை பெய்வதன் மூலம் மண் எல்லாம் மலட்டுத் தன்மையை கொண்டதாக மாறி வருகிறது.

அதிவேக விமானங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் ஆக்ஸைடும், குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் வாயுக்களாலும் ஓசோன் படலம் இன்று ஓட்டையாகிப் போனது.

இந்த நிலை நீடித்தால் மண்ணில் உயிரினங்கள் வாழ்வது பெரும் சிக்கலாகிப் போகும். இதனை மாற்ற நாமும் இயன்றதை முயலலாம்.

குப்பைகளையும், நெகிழிப் பொருட்களையும் எரிப்பதை தவிர்ப்பது, தனிநபர் வாகன பயன் பாட்டை குறைத்து கொண்டு பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவது,

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, தூசிகளை காற்றில் கலக்காதவாறு சுத்திகரிப்பு செய்வது, சொகுசு சாதனங்களின் தேவைகளை குறைப்பது போன்றவற்றினை மேற்கொண்டு அதன்மூலம் நல்ல காற்றை தக்கவைத்துக் கொள்ளலாம்.

நம் பூமியையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்க, நம் அடுத்த தலைமுறை சுத்தமான காற்றை சுவாசிக்க இன்றே உறுதி ஏற்போம்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment