உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நீதிபதிகள்:
உத்தரப்பிரதேசத்தில் அடிப்படை உரிமைகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் 12 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், உத்தரபிரதேசத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை உடனடியாக ஒழுங்குபடுத்த, தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக, மாநில காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகளின் உயர்நிலை அதிகாரப் போக்கு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை ஆகியவற்றை உள்ளடக்கி அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய நபர்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகம் அனுமதித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கண்டனத்திற்குரியது.
ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய கொடூரமான அடக்குமுறையானது, குடிமக்களின் உரிமைகளை மீறுவதாக உள்ளது. அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கும் விதமாக உள்ளது. இது, சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆளும் நிர்வாகத்தின் கீழ்த்தரமான அணுகுமுறை” என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.