டாஸ்மாக்கில் காலி பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்!

மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசியோ செல்கின்றனர். இதனால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன.

அதேபோல் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வனவிலங்குகளை பாதிக்கின்றன. கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் வீசப்படும் மதுபாட்டில்களால் பொதுமக்கள் காயமடைவதும், விவசாய நிலங்கள் பாதிப்படைவதும் தொடர்கிறது.

இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, மது அருந்தி முடித்த பின்னர் காலி பாட்டிலை அதன் எக்சைஸ் வரி லேபிள் கொண்ட மூடியுடன் திருப்பித் தந்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி பீமகுளத்தில் ஒரு கடையிலும், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 3 கடைகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் 2 கடைகளிலும், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் ஒரு கடையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்னாமரத்தூரில் ஒரு கடையிலும் இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

Comments (0)
Add Comment