61 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் விசைப்படகு மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது தொழிலை இழந்தனர்.

மீன்பிடி தடைக் காலத்தால் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், கோடிக்கணக்கில் அன்னிய செலாவணி இழப்பும் ஏற்பட்டது.

இந்தத் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று  நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்தது.

இதையொட்டி மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி, மீன் பிடிக்கத் தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை மீன்வளத்துறை அதிகாரிகளால் விசைப் படகுகளுக்கு மீன்பிடி டோக்கன் வழங்கப்பட்டதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

Comments (0)
Add Comment