ஆதிதிராவிடர்களுக்கு வீடுவாங்க வட்டியில்லா கடன்:
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் ஆகியோர் எல்லோருக்கும் இணையாக நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தீவிர அக்கறை செலுத்தி வந்தார்.
அவரது ஆட்சி காலத்தில் அவர்களுக்காக பல சலுகைகளை செய்து சாதனை படைத்துள்ளார்.
1984-85ம் ஆண்டு வரை கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், ஆதி திராவிடர் அல்லாதோர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. கொடுக்கப்படும் மொத்தக் கடன் தொகை ரூ.4,500-ல் ஆதிதிராவிடர் பயனீட்டாளர்களுக்கு ரூ.1000 முதலீட்டு மானியமாகவும் மீதி ரூ.3500 கடனாகவும் கொடுக்கப்பட்டது.
இது தவிர ஆதி திராவிடர்கள் தாங்கள் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியது இல்லை. வட்டியை நிதி நிறுவனங்களுக்கு அரசே செலுத்தியது.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகம், தேசிய கிராமிய வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் கிராமிய நிலமற்றோர் வேலை வாய்ப்பு ஈட்டுறுதித் திட்டம் இவைகளின் மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாக வீடுகட்டித் தருவதால் 1985-86-ஆம் ஆண்டிலிருந்து ஆதி திராவிடரல்லாத பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்பட்டது.
ஆனால் ஆதி திராவிடர்களுக்கு ஏற்கனவே வட்டி மானியம் வரை வழங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி மானியம் மட்டும் அரசு தொடர்ந்து வழங்கி கடனைத் தீர்த்தது.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதிச்சங்கம் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து நிதியுதவியினைப் பெற்று நகரியக் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்ளுக்கு அவைகளின் உறுப்பினர்களுக்குக் கடன் வழங்க நிதியுதவி அளித்தது.
கிராமப் பஞ்சாயத்தில் உள்ளவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு ரூபாய் 25,000 முதல் ரூ.80,000 வரையும் உறுப்பினர்களின் திருப்பி செலுத்தும் சக்திக்கேற்றவாறு கடன்கள் வழங்கப்பட்டன.
ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள்:
1976-77 முதல் 1986 – மார்ச் 31வரை தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கம் மூலம் 65,855 வீடுகள் கட்ட ரூபாய். 159,32 கோடி வீடுகட்ட நிதியுதவி பெறப்பட்டது.
நகரிய வீட்டுவசதி திட்டத்தின் கீழும் இதுவரை அடைந்துள்ள சாதனை மிகவும் போற்றத்தக்கதாகும். ஆனால் கடந்த சுமார் பத்தாண்டுகளில் அதாவது 1976- 77 முதல் 31.3.87 வரை 65.855 வீடுகள் கட்ட ரூபாய் 169.32 கோடி கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1959-ம் ஆண்டிலிருந்து (அதாவது தமிழ்நாடு வீட்டுவசதிச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து) 1976ம் ஆண்டு வரை அதாவது சுமார் பதினேழு ஆண்டுகாலத்தில் 22501 வீடுகள் கட்ட ரூபாய் 29.91 கோடிதான் கடனாகக் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கணக்கெடுப்பு புள்ளிவிபரம்:
1981 -ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக்கின் படி, தமிழ் நாட்டின் மொத்த மக்கள்தொகை 484 இலட்சமாகும். இதில் ஆதிதிராவிடர் 88.81 இலட்சம் பேர், இது மொத்த மக்கட்தொகையில் 18.35 விழுக்காடு ஆகும்.
பழங்குடியினர் 5.20 இலட்சம் பேர், இம்மாநிலத்தில் மொத்த மக்கட் தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் தொகை 46.76 விழுக்காடு ஆகும்.
ஆதிதிராவிடர்களில் 29.67 விழுக்காடும் பழங்குடியினரில் 20.45 விழுக்காடும் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தில் பல்வேறு பணிகள் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கல்லூரி படிப்பு இலவசம்:
தமிழ்நாட்டில் 12வது வகுப்புவரை எல்லோருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முதுநிலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
பள்ளிக்குச் செல்லும் வயதுடைய 25 இலட்சம் ஆதிதிராவிடர் குழந்தைகளில் 19.56 இலட்சம் பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1985-86ஆம் ஆண்டுகளிலிருந்து முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் எல்லா மாணவ மாணவியருக்கும் இலவசமாக பாடப் புத்தங்கள் கல்வித்துறையால் வழங்கப்படுகின்றன.
மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய படிப்புப் பயில்கின்ற தங்கிப் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கட்கும் அவர்களது பெற்றோர்களின் வருட வருமானம் ரூ. 6,000த்திற்கு அதிகப் படாமல் உள்ளவர்கட்கு உதவித்தொகை வழங்கப் பட்டது.
தற்பொழுது ஆண்டொன்றுக்கு ஒரு மாணவருக்கு உதவித்தொகை பெறுபவர் ஆணா. பெண்ணா என்பதைப் பொறுத்தும் படிக்கின்ற படிப்பின் தன்மையைப் பொறுத்தும் உணவு மற்றும் உறைவிடச் செலவுக்கு ரூ.250லிருந்து ரூ.350 வரை வழங்கப்படுகிறது.
முதுநிலைப் பட்டப்படிப்பு வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
விடுதியில் தங்கிப் பயிலாத மாணவர்கள் மற்றும் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் எந்த பாலினர் மற்றும் எந்த படிப்புப் பயிலுகின்றனர் என்பதைக் கணக்கில் கொண்டு பராமரிப்பு உதவித் தொகை மாதத்திற்கு முறையே ரூ.50லிருந்து ரூ.120 மற்றும் ரூ.75லிருந்து ரூ.200 வரை தற்போது தரப்படுகிறது.
மாநிலத் திட்டத்தின் கீழ் இவ்வுதவித் தொகை மாதத்திற்கு ரூ.50 லிருந்து ரூ. 75 வரை கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட இவ்விரு திட்டங்களின் கீழ், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 62,000 ஆதிதிராவிட மாணவர்களும் 300 பழங்குடி வகுப்பு மாணவர்களும் பயனடைகிறார்கள்.
புத்தகம் வைக்க அலமாரி இலவசம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களில் 7 மாணவர்களுக்கு ஒரு ஜதைப் புத்தகம் என்ற விதத்தில் ரூ.2,300 பெறுமான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதோடு அலமாரி வாங்குவதற்கு 5 ஜதைப் புத்தகங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ரூ.1,000, இதர செலவுக்காக ரூ.100 வழங்கப்பட்டன.
1982-83ஆம் அண்டில் இது 4 ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஒரு ஜதை என்ற விகித்தில் ரூ.5000 என்று உயர்த்தப்பட்டது.
அது மேலும் 3 மாணவர்களுக்கு ஒரு ஜதை என்ற விகிதத்தில் ரூ. 5000 என்று 1985-86 லிருந்து மாற்றப்பட்டது. 1985-86-ல் இதற்காக ரூ.28.75 இலட்சம் செலவிடப்பட்டது.
இலவசமாக 728 தங்கும் விடுதிகள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டுவரை உள்ள வகுப்புகளில் பயிலும் எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக இரண்டு ஜதைச் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
பழங்குடியினர் மாணவர்களின் பயன் கருதி அரசு 170 உண்டி, உறைவிடப் பள்ளிகளை நடத்தி வருகிறது. இப்பள்ளிகளில் 10,795 பழங்குடியினர் மாணவர்களுக்கு உணவு மற்றும் உறைவிட வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இப்பள்ளிகளில் முதல்வரின் சத்துணவுத் திட்டமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கல்வி பயில ஆதி திராவிடர்களுக்கு 728 விடுதிகளும், பழங்குடியினர்களுக்கு 22 விடுதிகளும் அரசால் நடத்தப்படுகின்றன.
இவ்விடுதிகளில் 51,924 ஆதிதிராவிடர் மற்றும் பிற மாணவர்கள் தங்கிக் கல்வியைத் தொடருகிறார்கள்.
தங்கிப் படிப்பவர்களுக்காக எல்லா வசதிகளையும் கொண்ட விடுதிகள் படிப்படியாக கட்டப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காகச் செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டில் 50 விழுக்காடுகளுக்கு மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்விக்கெனச் செலவிடப்படுகிறது.
(தொடரும்…)
நன்றி: சைதை சா. துரைசாமியின் ‘புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.