அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 7
‘ஆசை’ படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த டைரக்டர் வசந்த் சாய், ஒரு டிவி விளம்பரத்தில் அஜித்தை பார்த்துவிட்டு தன் அலுவலகம் வரச்சொல்கிறார். முதல் முதலாக அஜித்தை சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர் தொடர்ந்து விவரிக்கிறார்:
‘‘அஜித்தை முதல் முதலா பார்த்தபோதே என் மனசுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. இந்தப் பையன் தான் நம்ம ஹீரோனு மனசுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துட்டேன். காரணம், எல்லோரும் கதை தான் ஹீரோனு சொல்லுவாங்க. ஆனா என் படத்துல ஹீரோ தான் கதையே. மற்ற விஷயங்கள் பேசணும் என்பதால் அதை நான் வெளிப்படுத்திக்கல.
கதை சொன்னேன். ஆர்வமா கேட்டார். ரொம்ப பாஸிடிவ்வா பேசினார். எதுக்கும் ஒரு போட்டோ ஷூட் எடுத்து பார்த்துடலாமேனு தயாரிப்பு தரப்புல சிலர் அபிப்ராயப்பட்டாங்க. அவரை வச்சு விதவிதமா போட்டோஸ் எடுத்தோம்.
ஆனா என் மனசு மாறல. இருந்தாலும் சொல்றவங்க வார்த்தையையும் நான் கணக்குல எடுத்தாகணும். எனக்கும் அந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தாக வேண்டிய நிர்பந்தம்.
என்ன செய்வது? என ஒரு த்ரில்லர் மூவியின் கதையை விவரிப்பதைப் போல சஸ்பென்சில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் மௌனமாக கண்களைமூடி யோசித்தவர் தொடர்ந்தார்.
‘‘அஜித் நடிச்ச ‘பவித்ரா’ பட ஷூட்டிங் முடிஞ்சு ரஷ் காப்பி ரெடியா இருக்கு. அதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்னு சிலர் சொன்னாங்க. அதையும் போய் பார்த்தோம். அப்பவும் என் மனசுல எந்த மாற்றமும் இல்ல.
என் படத்துக்கு இந்தப் பையன் தான் ஹீரோனு நான் என் மனசுக்குள்ள கமிட் ஆகிட்டேன். அன்னைக்கு நான் பார்த்த அந்தப் படத்துலயே அவரோட லுக் தெறிக்கவிட்டது. அதை மைண்ட்ல வச்சுதான் ‘ஆசை’யில அவருக்கு ஒரு ஓபனிங் சீன் வச்சிருந்தேன்.
அஜித் நடந்து வருவார். அங்க ஒரு குளத்துல சில பசங்க உட்கார்ந்துகிட்டு இருப்பாங்க. அதுல ஒரு குட்டிப் பொண்ணு, ‘நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா’னு அஜித்தைப் பார்த்து கேட்பா.
அதுக்கு அஜித் ‘ஏன்?’னு கேட்பார். உடனே அவ ‘ஏன்னா நீ கொஞ்சூண்டு அழகா இருக்கே’னு சொல்லுவா. அந்தளவுக்கு அழகனா என் கண்ணுக்கு அன்னைக்கே தெரிஞ்சவர் அஜித்.
குறிப்பா அவரோட ஸ்மைல்ல ஒரு எனர்ஜிடிக் பவர் இருக்கும். யாரையும் லேசில் சாய்த்துவிடும் ஒரு அப்பாவித்தனமான புன்னகைன்னு அதைச் சொல்வேன்.
ஆங்கிலத்தில் ‘Gullibility’ன்னு ஒரு வார்த்தை இருக்கு. அந்த வார்த்தைக்கு சரியான பொருளா அஜித்தோட புன்னகையைச் சொல்வேன். அந்தளவுக்கு வசீகரமான, மிக எளிமையான புன்னகை அது’’ என்று அஜித்தின் புன்னகையின் பவரை சிலாகித்தார் இயக்குநர் வசந்த் சாய்.
இந்தப் படத்தில் ஒரு ஹீரோவாக மட்டும் நடித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரைப் போலவும் அஜித் வேலைப் பார்த்தார் என்று சொல்வார்கள்.
அதுபற்றிக் கேட்டபோது, ‘‘கரெக்ட்தான். ஷூட்டிங்போது எனக்கு நிறைய உதவி செய்வார் அஜித். அவரோட காட்சிகள் இல்லைன்னாகூட ஸ்பாட்ல இருந்து சின்னச் சின்ன வேலைகளை அவரே இழுத்துப்போட்டு செய்வார்.
ஹீரோயின் சுவலட்சுமி கம்ப்யூட்டர் சென்டரில் படிப்பதைப்போல சீன் வச்சிருந்தேன். இப்ப மாதிரி அப்ப நிறைய கம்ப்யூட்டர் சென்ட்டரெல்லாம் வரல. அஜித்துக்கு கம்ப்யூட்டர் பற்றி அப்பவே நிறைய நாலெட்ஜ் இருந்தது. ஸோ… கம்ப்யூட்டர் கிளாஸ் சம்மந்தப்பட்ட காட்சிகள்ல நிறையவே ஹெல்ப் பண்ணார்.
டெல்லியில நிறைய காட்சிகள் ஷூட் பண்ண வேண்டி இருந்துச்சு. எனக்கு சுத்தமா இந்தி தெரியாது. அஜித் ரொம்ப நல்லா இந்தி பேசுவார். டெல்லி படப்பிடிப்பில் அவர் என் கூடவே இருந்தது ரொம்ப உதவியா இருந்துச்சு.
குலுமனாலி ஷூட்டிங்கின் போது நான், பிரகாஷ்ராஜ், அஜித் எல்லாரும் ஒரே ரூம்ல தான் தங்கி இருந்தோம். அவ்வளவு ஃப்ரெண்ட்லியான மனிதர் அவர்’’ என்று ‘ஆசை’ நாட்களில் மூழ்கிப்போனார் டைரக்டர் வசந்த் சாய்.
‘ஆசை’ படப்பிடிப்பு முடிந்து ரஷ் பார்த்தபோது டைரக்டர் செய்திருந்த ஒரு விஷயம் அஜித்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாம். அதை எப்படிப் பண்ணீங்க என்று திரும்பத் திரும்ப டைரக்டரிடம் கேட்டுக்கேட்டு ஆச்சரியப்பட்டாராம். அப்படி என்ன சீன் அது?
(இன்னும் தெறிக்கும்…)
– அருண் சுவாமிநாதன்