ரத்த தானம் வழங்குவதில் இருக்கும் அறியாமை!

சர்வதேச இரத்த தான தினம்: ஜூன் – 14

இரத்த தானம் வழங்குவோரைச் சிறப்பிக்கும் முகமாக ஜூன்-14 ஆம் தேதியை சர்வதேச குருதிக் கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் நாளே வருடா வருடம் உலகக் குருதிக் கொடையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் கடந்த-2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

உயிர் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும், நோயாளிகளுக்குத் தரமான, பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தம் சார் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யத் தொடர்ந்தும் இரத்ததானம் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களே ஆரோக்கியமான குருதிக் கொடையாளர்கள் ஆவர்.

ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் (10 லட்சம்) லிட்டர் இரத்தம் கொடையளிக்கப்படுகிறது.

ஒரு அலகு இரத்தம் பல சார் பொருட்களாகப் பலருக்குப் பயன்படும். எனினும், இரத்த மாற்றுத் தேவைப்படும் பல நோயாளிகளுக்கு இரத்தமும், இரத்தப் பொருட்களும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை.

கொடையளிக்கப்பட்ட குருதியை 35-42 நாட்களே பாதுகாத்து வைக்க முடியும்.

ஆகவே, இரத்த வங்கிகளில் புதுக் குருதி தொடர்ந்து இருப்பிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

கொடையளிக்கப்பட்ட இரத்தம் எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி பி, சி மற்றும் மேகநோய்த் தொற்றுச் சோதனைகள் செய்த பின்னரே மாற்றுச் சிகிச்சைக்கு வழங்கப்பட வேண்டும்.

தேவையற்ற இரத்த மாற்றுக் காரணமாக எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி போன்ற உயிர்க் கொல்லி நோய்களுக்கு நோயாளிகள் ஆளாக்கப்படுகின்றனர். எனவே, இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையும், அவதானிப்பும் அவசியமானது.

இரத்ததானம் செய்வதால் நமது உடலுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் எனப் பலர் சொல்வது அவர்களின் அறியாமையும், ஒருவகையில் மூடத்தனமுமே.

உயிர்காக்கும் உன்னதமான இரத்ததானம் மூலமாக எமது உடலுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்பது ஆய்வுகள் மூலமும், குருதிக் கொடையாளர்களின் அனுபவப் பகிர்வுகள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி இன்னொரு உயிர் காக்க நமது இரத்தம் பயன்படுகிறதே என்ற எண்ணம் நிச்சயம் நமது மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆண்டுக்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது இரத்ததானம் செய்வோம். உயிர் காக்கும் உன்னத இரத்ததானம் செய்ய எம் உற்றவர்களையும், நண்பர்களையும் ஊக்குவிப்போம்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment