சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் சுர்லா வினோத். வெள்ளை வண்ண தூரிகையை நாவில் வைத்துக்கொண்டு மிக அழகிய ஓவியமாக மாற்றுகிறார் அந்த 18 வயது இளைஞர்.
கலைகளில் சாதிக்க நினைக்கும் அனைவரும் ஊடக வெளிச்சம் பெறுவதில்லை. சிலர் மட்டுமே மக்களிடம் பிரபலமாகின்றனர். அப்படி ஒருவர்தான் ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள பாலி காட்டம் கிராமத்தைச் சேர்ந்த சுர்லா வினோத்.
தனது நாவினையே தூரிகையாக மாற்றி காகிதம், சுவர், கேன்வாஸ், என அனைத்திலும் பல வகையான ஓவியங்களை வரைந்துவருகிறார்.
தன் ஓவியத் திறமைக்காகப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். ஓவியம் வரையும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவருகின்றன.
பள்ளியில் படிக்கும்போதே வினோத் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டார். ஆசிரியர்களைத் தாண்டி கிராம மக்கள், உறவினர்களிடம் பாராட்டுகள் கிடைத்தன.
ஒருமுறை யூ டியூப்பில் பார்த்த வீடியோதான் அவருக்கான பாதையைக் காட்டியது. அன்று முதல் தன் நாவைப் பயன்படுத்தி ஓவியம் தீட்டத் தொடங்கிவிட்டார் வினோத்.
ஓவியத்தில் புதிய அணுகுமுறை அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அழகிய ஓவியங்களாக வரைந்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற பல ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள வினோத், ஐதராபாத் நகரில் நடந்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார்.
பா.மகிழ்மதி