தமிழர்கள் எதில் குறைந்துபோய் விட்டார்கள்?

தமிழ் – தமிழர் – தமிழ்நாடு – மூன்றையும் மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி!

கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை என்று அகழாய்வு நடந்த இடங்களில் எல்லாம் வெளித்தெரிவது நமது தமிழினத்தின் தொன்மை, கூடவே தமிழின் தொன்மையும்.

அவ்வளவு கல்வெட்டுகள், பாறை எழுத்துக்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் எந்த மொழியின் பழமைக்கும் குறையாத விதத்தில் கிடைத்திருக்கின்றன.

நம் மொழி மற்றும் இனத்தின் தொன்மையை உணர்த்தக்கூட ஆங்கிலேயர் வேண்டியிருந்தது.

காலத்திற்கேற்றபடி மாற்றம் செய்யப்பட்டுத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் தமிழ் மொழி தவறவில்லை.

இந்தியாவில் மற்ற மொழிகளை விட, அச்சு வடிவத்திற்கு முதலில் சென்ற மொழிகளில் ஒன்று – தமிழ். 1557 ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் ‘தம்பிரான் வணக்கம்’. மொழியாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார்.

முதலில் தமிழ்மொழி அச்சு வடிவத்திற்கு மாறிய நாள் 20.10.1578.

கொல்லத்தில் அச்சு வடிவம் பெற்று வெளியாகி இருக்கிறது ‘தம்பிரான் வணக்கம்’.

மத நோக்கம் பின்னணியில் இருந்தாலும், அச்சு வடிவம் என்ற நவீனத் தொழில் நுட்பத்திற்கு மாறியிருக்கிற மொழி தமிழாக இருந்திருப்பதை ஆதாரத்துடன் முன்வைக்கிறது  தமிழ்நாடன் எழுதியுள்ள “தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்” என்ற நூல்.

1812 ஆம் ஆண்டிலேயே  திருக்குறள் – மூல பாடம் என்கிற தலைப்பில் அச்சு வடிவம்  பெற்றிருக்கிறது.

அடுத்தடுத்து இப்படிப் பல நூல்கள். ஏடுகளில் இருந்ததைச் சேகரித்து அச்சு வடிவத்திற்கு மாற்றியதில் தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள தமிழறிஞர்களுக்குப் பெரும் பங்குண்டு.

நீர்ப்பாசனத் துறையில் தமிழரின் அன்றைய கட்டுமானத்திற்கு உதாரணமாக கல்லணையும், நுணுக்கமான கட்டுமானத்திற்கு தஞ்சைக் கோவிலும் இப்போதும் சாட்சியமாக நிற்கின்றன.

பெரும் செழுமையான மரபு நமக்குப் பின்னால் பெருமையுடன் உயர்ந்து நிற்கிறது.

ஆனால் – அதே தமிழர்கள் தற்காலத்தில் எப்படி இருக்கிறோம்?

அயல்நாடுகளுக்குப் பிழைக்கப் போனாம். அகதிகளாக நடத்தப்பட்டோம். போராட்டம் நடத்தி உரிமைகளை நிலை நாட்டினோம்.

இலங்கையில் பெரும் இன அழிப்பைக் கொடுமையாக எதிர்கொண்டோம். சர்வதேசச் சதிவலையில் தமிழினம் சிக்கித் தவித்து, உலக நாடுகளுக்கெல்லாம் சிதறிப் பரவியது.  இன்றும் கனத்த மௌனம் காக்கும் உலக நாடுகளிடம் நீதி கேட்டுக் கொண்டிருக்கிறோம்

நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறார்கள் எம் தமிழர்கள். தமிழும் பரவியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் மொழிகளில் ஒன்றாகத் தமிழை மாற்றியிருக்கிறார்கள் எம் தமிழர்கள்.

அச்சு வடிவத்திற்கு மாறி நவீனப்பட்ட மாதிரி, வலைத்தள உலகிலும் நவீனப்பட்டிருக்கிறது நம் மொழி.

இந்தித் திணிப்புக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடந்து, பல உயிர்கள் பறிபோன அதே தமிழ்நாட்டில் இன்றும் தமிழை  முழுவதுமாக ஆட்சிமொழியாக்கப் பாடுபட வேண்டியிருக்கிறது.

கல்விக்கூடங்களில் கட்டயாப்படுத்தித் திணிக்க வேண்டியிருக்கிறது. கோவில் கருவறைக்குள் வழிபாட்டு மொழியாக்க இன்னும் திணற வேண்டியிருக்கிறது. பொதுவெளியில் தமிழில் உரையாடத் தயங்கும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.

வந்தாரை வரவேற்கும் இயல்பு கொண்ட தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகையும், எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. தொழில், வேலை வாய்ப்புகளில் வட இந்திய முகங்கள் அதிகப்பட்டிருக்கின்றன.

ஏன் தமிழர்கள் உழைப்பதில் பின் தங்கிப் போனார்கள்?

பல்லாண்டுகால உழைப்பிலிருந்து ஏன் அந்நியப்பட்டுப் போனார்கள் தமிழர்கள்? எங்கும் நிறைந்திருக்கிற ‘இலவசங்களா’? டாஸ்மாக் ஆதிக்கமா? தொலைக்காட்சி மற்றும் அலைபேசிகளில் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்களா?

இப்படி நமக்கு முன்னால் பல கேள்விகள் இருக்கின்றன உயிர்ப்போடு.

பாரதி சொன்ன “தமிழச் சாதி” எப்போது விழிப்புடன் தன்னுணர்வு பெறும்?

இந்த நூலின் மையமும் அம்மாதிரியான விழிப்பு நோக்கித்தான்.

அன்புடன்

மணா

பக்கங்கள்: 150
விலை-ரூ.150/-
வெளியீடு: பரிதி பதிப்பகம்
ஜோலார்ப்பேட்டை.
அலைபேசி – 72006 93200

Comments (0)
Add Comment