சென்னை கொடுங்கையூரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற செங்குன்றம் ராஜசேகர் (33) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், ராஜசேகரைக் கைது செய்தவர்கள், இரவில் காவல் நிலையத்தில் அவரை தங்க வைத்தவர்கள் எனப் பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதன்மை காவலர்களான ஜெயசேகரன், மணிவண்ணன் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். காவல் நிலையத்தில் ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்களிடமும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.