அகந்தையில்லாத உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர், நடிகைகள்? எவ்வளவு அற்புதமான நகைச்சுவை நட்சத்திரங்கள்?

எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா வரிசையில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் சாவித்ரியின் தந்தையாக, கமலின் தாத்தாவாக, ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் உணர்ச்சிக்கவி பாரதியாக, ‘பாகப்பிரிவினை’யில் பாசமான சகோதரனாக, ‘காவல் தெய்வம்’ படத்தில் கர்ம சிரத்தையான சிறைக் காவலராக,  ‘அரங்கேற்றம்’ படத்தில் பிரமிளாவுக்கு அப்பாவாக – இப்படி அநேகப் பாத்திரங்களில் அவருடைய நடிப்பு யதார்த்தமான அளவில் வெளிப்பட்டிருக்கும்.

இறுதியாக ‘இதயக்கனி’ படத்தில் “நீங்க நல்லாயிருக்கணும்’’ பாடலில் சீர்காழியின் குரலுக்கு வாயசைத்து நடித்திருப்பார்.

கமல் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவராக எஸ்.வி.சுப்பையாவும் இருந்திருக்கிறார்.

சுப்பையாவுடன் நடித்திருக்கிறவரான நடிகர் சிவகுமார் படப்பிடிப்புத் தளத்தில் நடிக்கிறபோது, பாத்திரமாக ஒன்றி நடிக்கிறபோது எந்த அளவுக்குச் சென்றிருக்கிறார் என்பதை விவரித்திருக்கிறார்.

அதைவிட, சிவகுமார் எழுதியுள்ள ‘இது ராஜபாட்டை அல்ல’ நூலில் எஸ்.வி. சுப்பையாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் நெகிழ்வானது.

எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’. இதில் பனையேறும் தொழிலாளியாக வந்து அசத்தியிருப்பார் சிவாஜி.

அந்தப் படம் வெளிவந்து வணிக ரீதியான வெற்றியைப் பெற்றபிறகு சுப்பையாவின் வீட்டில் நடந்த திருமணம்.

சாப்பாட்டுப் பந்தி நடந்து கொண்டிருக்கிறது. கடைசிப்பந்தி. சமைத்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது “படம் தயாரிச்சதால் எனக்கு எந்தக் கர்வமும் வந்துவிடக் கூடாது’’ என்று சிவகுமாரிடம் சொல்லிவிட்டு, எஸ்.வி.சுப்பையா சாப்பாட்டுப் பந்தியில் மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை வரிசையாக எடுத்து அவரே குப்பைக் கூடையில் போட்டிருக்கிறார்.

உடல்மொழியிலும், பேச்சிலும் அகந்தையையும், கொரோனா இல்லாமலேயே இடைவெளியை அனுசரிக்கிறவர்கள் அதிகமும் நிறைந்த சினிமாவுலகில், அகந்தையை மூளையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது என்கிற தன்முனைப்புடன் மூத்த கலைஞரான எஸ்.வி.சுப்பையா இருந்திருப்பதே வியப்பு தான்!

– யூகி

Comments (0)
Add Comment