எது உண்மையான வெற்றி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தாயுமானவரின் பொன்மொழிகள்:

கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை.

நல்லாருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம்.

மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள முயற்சி செய்ய வேண்டும்.

பிறருடைய குறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நல்லதை மட்டுமே எப்போதும் பேசுங்கள்.

மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன் நன்மையும் ஏற்படும்.

குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.

மனித உள்ளத்தில் தெய்வம் மனசாட்சியாய் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவோ, உதாசீனப்படுத்தவோ நம்மால் முடியாது.

நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.

பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும். ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள்.

நேர்மையாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என உணருகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.

மனம் சலிக்காமல் இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும்.

பகுத்தறிவு இல்லாதவர்களும், சுகபோகத்திற்காகவே வாழ்கின்றவர்களும் தங்கள் பிழைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.

தவறு செய்தல் மனித இயல்பு என்பர். ஆனால், பிழை என்று உணர்ந்ததும் இனிச் செய்வதில்லை என்று மன உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.

நான் தவறே செய்யாதவன் என்று யார் ஒருவனும் கூறிக் கொள்ள முடியாது. தவறு திருத்தத்திற்கு உரியது. திருத்தப்படும்போது பிழைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

தவறு செய்துவிட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வி என்பதே கிடையாது. அவமானமும் கிடையாது. அதுதான் நிஜமான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.

நம் தவறுகளை புறம்காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள். தவறுகளின் உண்மையான தன்மையை அறிய இதுவே சிறந்தவழி.

Comments (0)
Add Comment