கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளிகளா நம்முடையவை?

சமகால கல்விச் சிந்தனைகள்: 3  / உமா மகேஸ்வரி

குழந்தையைத் தெரிந்து கொள்ளாதவர் ஆசிரியராக விளங்க முடியாது என்கிறார்  உக்ரேனிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தகைமை மிக்க ஆசிரியரான வசீலி சுகம்லீன்ஸ்கி.

ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் குழந்தைகளுடன் அன்றாடம் ஏற்படுத்திக் கொள்ளும் உயிரோட்டமுள்ள நேரடியான தொடர்புகள் தான், கற்பித்தல் சார்ந்த சிந்தனைகளை செழுமைப்படுத்துவதற்கும் கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டு வரவும் உந்து சக்தியாக அமைகிறது.

அறிவுசார் திறப்புகளாகவும் பரஸ்பர மனித உறவுகளோடு உறவாடும் உலகமாகவும் அமையும் பள்ளிகளில் அடியெடுத்து வைக்கும் உயிருள்ள குட்டி மனிதர்களே மாணவர்கள்.

அவர்களை நமது பள்ளிகள் எவ்வாறு அணுகுகின்றன? இவர்களை அணுகுவதில் ஆசிரியர்களின் பார்வையை எத்தகைய வழிகளில் கல்வித்துறை செழுமைப் படுத்தியுள்ளது என்பது குறித்தெல்லாம் விவாதங்களை ஏற்படுத்த வேண்டியுள்ள காலகட்டம் இது.

ஏனெனில் முழுக்க முழுக்க நமது பள்ளிகள் வேலைக்கான ஆட்களை உருவாக்கும்  தளவாடப் பட்டறைகளாக மாறி இருக்கின்றன.

அதோடு திட்டங்களை செயல்படுத்தக் கூடிய சந்தைகளாக மாற்றம் பெற்று வருகின்றன. எனில் அங்கு வியாபாரம் தானே பிரதானமாக தலை தூக்கும்?

கற்க கற்பிக்க மகிழ்ச்சியான சூழல் எப்படி உருவாகும் என்பதை கவலையுடன் சிந்திக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழக்கூடிய நடத்தை மாற்றங்கள் உருவாக வேண்டிய இடங்களில் இன்று திட்டங்கள் கோலோச்சுகின்றன.

கல்வித்துறை அலுவலர்களும் கல்விப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களும் என அனைவருமே ஒவ்வொரு பக்கமும் சிதறல்களாக குழந்தைகளுடைய அறிவுசார் திறப்புகளையும் உறவு சார்ந்த மானுடப் பண்பு சார்ந்த கல்வி கற்றலையும் சிதைக்கும் வேலையை செய்யப் பழகியிருக்கின்றனர்.

ஆகவே குழந்தைகளின் கற்றல் தடைபடுவதோடு அவர்களின் மகிழ்ச்சி என்று எதுவுமே இல்லாமல் இன்று பூஜ்ஜியமாக மாறிவிட்டிருக்கிறது. பதிலாக கற்றலும் கற்பித்தலும் சுமையாக மாறி திசை மாறிவிட்டது அவலம்.

இங்கு ஆசிரியராக ஒருவர் பணியாற்றுவதற்கு அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுவது பாடப் பொருளில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கல்வி மட்டுமே.

ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் அரசு, தனியார் என்று பாகுபடுத்திப் பார்க்காமல் பொதுவான கல்வி முறையில் சம்பிரதாய அணுகு முறைகளையே பின்பற்றுகின்றன.

மேல்நிலைக் கல்வி, இளநிலை, முதுகலைப் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பயிற்சி பட்டயங்கள், பட்டங்கள் பெற்றால் போதும், ஒரு ஆசிரியராவதற்குரிய முழுத் தகுதியையும் பெற்று விட்டதாக முடிவு செய்யப்பட்டு பணியமர்த்த அடுத்தடுத்த நகர்வுகள்.

அதிலும் அடிக்கடி போலிச் சான்றிதழ் வைத்து பணி செய்பவர்களையும் செய்திகளின் வழியே அறிகிறோம்.

ஒரு ஆசிரியருக்கு தன்னிடம் தரப்பட்டுள்ள ஒரு மாணவரது வயதிற்கு ஏற்ப அவர்களைக் கையாளும் திறன் என்பது எவ்விதத்தில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது? இங்கு நடைமுறையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை.

மாணவரது படைப்பாற்றல் திறன் என்பதையும் இங்கு தவறாகவே வரையறுத்துள்ளோம்.

ஒன்று போல வகுப்பு முழுவதும் படங்கள் வரைய வைப்பதே பெரும்பாலும் படைப்பாற்றல் திறனாகிவிடுகிறது.

அவர்களது உலகத்தை அடையாளம் காணும் வகுப்பறைகள் பெரும்பாலும் இல்லை என்பதே நிதர்சனம்.

இன்டிஜிவாலிட்டி எனப்படும் தனித்தன்மைக்கு இங்கு பெரியளவில் வழிகாட்டுதலோ மதிப்போ கிடையாது. ஒட்டுமொத்த ஓட்டப் பந்தயத்தில் யாரெல்லாம் முதலிடம் பெறப் போகின்றனர் என்பதே இலக்கு.

இங்கு ஒட்டு மொத்த ஓட்டப் பந்தயம் என்பது பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களின்  படிப்பும் இறுதியில் தேர்வுகள் எழுதி மதிப்பெண்கள் பெறுவதுமாக என வைத்துக் கொள்ளலாம்.

40 குழந்தைகளையும் ஒரே இடத்தில் அமர வைத்து அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நாம் தயாரித்துக் கொடுத்துள்ள பாடப் புத்தகங்களில் நிரம்பியிருக்கும் பக்கங்களை அவர்களுக்குத் திணித்து விடுவதில் ஆசிரியர்கள் காட்டும் வேகம் அளப்பரியது. காரணம் துறையின் ஆணைகள்.

இதில் எங்கே குழந்தைகள் மகிழ வாய்ப்பு? ஆசிரியரும் குழந்தைக்கும் மனம் விட்டு சிரிக்க ஏதாவது மணித் துளிகள் உண்டா? சிந்தித்து சிந்தித்து பார்த்தாலும் கண்களுக்கும் மனதுக்கும் தெரியாது.

ஒரு அட்டவணை போட்டு வேலை செய்வதல்ல ஆசிரியர் பணி என்பதை உணரவோ புரிந்து கொள்ளவோ இங்கு நேரமோ சூழலோ மனிதர்களுக்கு இல்லை.

ஆகவே தான் திரும்பத் திரும்ப நமது கல்வி முறையில் உள்ளார்ந்த மாற்றங்களைக் கொண்டு வருவதில் தோல்விகள் ஏற்படுகின்றன.

குழந்தைகளுக்கு இதயத்தைத் தருகிறோமா என்பது ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

குழந்தைகளின் உலகமே வேறு, அங்கு கதைகள் உருவாக்கப்படும், தேவதைகளும் பேய்களும் விலங்குகளும் பறவைகளும் நிறைந்த மகிழ்ச்சியான உலகில் குழந்தைகள் தங்கள் கற்பனைகளால் சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளின் கற்பனைகளை வளர்க்க வேண்டிய பள்ளிகளும் வகுப்பறைகளும் கற்பனைத் திறன்களைக் கருக்கி மூடுவிழா செய்யும் இடங்களே என்பதாக இன்றைய வகுப்பறைகள்  உருப்பெற்று விட்டது சாபக்கேடு.

பாடப் புத்தகத்தைத் திறந்து எழுத்துக்களைக் கூட்டிப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் முன்னர், அவர்களுக்கு இயற்கையைக் காட்டி கற்பிக்க, இயற்கையின் நடுவே காதால் கேட்பதற்கும் கண்ணால் காண்பதற்கும் உடலால் உணர்வதற்கும் வாய்ப்புகளை வழங்கும் கல்வியை நாம் வழங்கினால் தான் ரசனை என்ற கற்றல் திறனை  அவர்களிடத்தில் உருவாக்க முடியும்.

ஆனால் இங்கு பறவையை வானத்தில் காட்டி சொல்லித் தரும் வாய்ப்பான திறந்த வானம் இருந்தாலும் அதை விடுத்து, கரும்பலகையில் பறவை என்று எழுதிக் கற்பிக்கும் நடைமுறையே காலம் காலமாக பின்பற்றப்படுகிறது.

உமா

தற்காலத்தில் சில பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறையில் பறவையைத் திரையில் காட்டும் வசதி செய்து கொண்டுள்ளனர்.

அதே போல் செடி, மரம் இவற்றை அறிய வைக்க வகுப்பறையை விட்டு வெளியே வந்தாலே தொட்டு உணர்ந்து கற்றுக் கொள்ளலாம், அந்த வாய்ப்பைக் குழந்தைகளுக்குத் தருகிறோமா? கரும்பலகையில் செடியை வரைந்து பாகங்களைக் குறிக்கும் கற்பித்தல் அல்லவா நடக்கிறது.

இப்படியாக ஒரு சலிப்படைந்த வறண்ட கல்வி முறையைக் குழந்தைகள் விரும்புவதில்லை என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?

கற்க, கற்பிக்க மகிழ்ச்சியான பள்ளிகளை நமது கல்வி முறை எப்போது வடிவமைக்கப் போகிறது?

தொடர்ந்து உரையாடுவோம்…

Comments (0)
Add Comment