‘சினிமாவில் ஈகோ மோதல்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் நடிகைகளிடம் இந்த மோதல் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஒரே படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் நடித்தால் கேட்கவே வேண்டாம்’ என்கிறார்கள் சில சினிமாக்காரர்கள்.
அப்படி நடந்த பெயருக்கான மோதலில்தான் ஒரு புதுமையான டிரெண்டே உருவாகி இருக்கிறது, அந்தக் காலக்கட்டத்தில்!
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி, சரோஜாதேவி, சாவித்திரி, கமல்ஹாசன் உட்பட பலர் நடித்த படம் ‘பார்த்தால் பசி தீரும்’.
இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர், அவள் அளித்த வாழ்வு. ஏ.சி.திருலோகச்சந்தர் கதையான இதை பீம்சிங் இயக்கி இருந்தார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
கண்ணதாசன் வரிகளில், அன்று ஊமை பெண்ணல்லோ, பார்த்தால் பசி தீரும், கொடி அசைந்ததும், யாருக்கு மாப்பிள்ளை, பிள்ளைக்கு தந்தை ஒருவன், உள்ளம் என்பது ஆமை என்பது உட்பட அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.
1962 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் பவித்ர பிரேமா (Pavithra Prema) என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. இதன் ஷூட்டிங் முடிந்த பிறகு புதுவிதமான பிரச்சனை ஏற்பட்டது. யார் பெயரை முதலில் போடுவது என்பதில்தான் பிரச்சனை.
நடிகை சாவித்ரி, ‘நான் தான் சீனியர், என் பெயரைதான் முதலில் போட வேண்டும். அதற்குப் பிறகுதான் சரோஜாதேவி பெயரை போட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார், இயக்குநரிடம்.
சரோஜாதேவியும் தனது பெயரை முதலில் போடுங்க என்று சொல்ல, அடுத்து சவுகார் ஜானகியும் இதையே சொன்னார். பெரும் குழப்பமாகி விட்டது, இயக்குநருக்கும் ஏ.வி.எம் நிறுவனத்துக்கும்.
இதையடுத்து இயக்குநர் பீம்சிங் புதுமையாக ஒரு முடிவெடுத்தார். அதாவது ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள்’ என்று டைட்டில் கார்டில் போட்டுவிட்டு, நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை வைத்துவிட்டார்.
இதில் இருந்துதான், ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள்’ என்று போடும் வழக்கம் தமிழ் சினிமாவில் உருவானது.
இந்தப் பெயருக்கான பிரச்சனை குறித்து, நடிகை சாவித்ரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
– அலாவுதீன்