கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.

நூல் அறிமுகம்:

கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்’ நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன்.

கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’யைப் போல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் ஒருவரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான இராம. அரங்கண்ணல் (கே.பாலசந்தர் இயக்கிய புகழ் பெற்ற அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா படங்களின் தயாரிப்பாளர்.

இவருக்கு மட்டும் அல்ல… இவரின் பட நிறுவனங்கள் ஆண்டாள் ஃபிலிம்ஸ், அருள் ஃபிலிம்ஸ் ஆகியவற்றுக்கும் பெயர் சூட்டியவர் என் தந்தையே!) எழுதிய சுய வரலாற்று நூல் ‘நினைவுகள்!’ திராவிட இயக்க நூல்களில் முக்கியமானது.

நீண்ட காலம் மறுபதிப்பு வராமலிருந்த அந்த நூல் இப்போது சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

திருவாரூர் பள்ளி வாழ்க்கை தொடங்கி திராவிட இயக்க செயல் வீரராக கலைஞர் வளரத் தொடங்கிய இளமைக் காலத்தில் அவருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் என் தந்தையார் தமிழறிஞர், கவிஞர் வயலூர் சண்முகம் என்ற வ. கோ. சண்முகம்.

அப்போது திருவாரூரில் அந்த எழுச்சிமிகு இளைஞர்களிடையே தோன்றிய தமிழ்ப் பெயர் சூட்டு இயக்கத்தில் சண்முகம் என்ற தன் பெயருக்கு அப்பா வைத்துக்கொண்ட தமிழ்ப் பெயர்தான் ‘மாவெண்கோ’.

ரங்கசாமி என்ற பெயரை இராம‌. அரங்கண்ணல் என்று தமிழ்ப் படுத்தியவரும் அப்பாதான்.

கலைஞர், இராம அரங்கண்ணல், சுரதா, அண்ணல் தங்கோ, வழக்கறிஞர் வெங்கடாஜலம், வசனகர்த்தா ஆரூர்தாஸ், அரசியல் விமர்சகர் சின்னக் குத்தூசி ஆகியோர் அப்பாவின் முக்கியமான கலை, இலக்கிய, அரசியல் நட்பாளுமைகள்!

‘நினைவுகள்’ நூலில் அப்பாவைக் குறிப்பிட்டு இராம அரங்கண்ணல் எழுதியிருக்கும் சில பகுதிகள் இவை…

கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கும் எனது கோமல் கிராமத்துக்கும் நான்கு மைல் தொலைவு. வ. கோ. சண்முகம் ஊரான வயலூருக்கும் என் ஊருக்கும் நான்கைந்து மைல்கள் இருக்கும்.

சண்முகம் வயலூர் பெரிய பண்ணைத் தம்பி! நானும் கோமல் தம்பி! 1942-43 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் படித்தார்.

நான் வ.கோ.ச. போன்றோர் பாஸாகி பத்தாம் வகுப்புக்கு சென்றோம். நான் திருவாரூரில் சீனிவாசய்யர் என்ற ஆசிரியரின் வீட்டில் தங்கிப் படித்தேன்.

வ.கோ.சண்முகம் விஜயபுரத்தில் இருந்து மாறி திருவாரூர் காரைக்காட்டுத் தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, சமையற்காரர் ஒருவரை வைத்துக்கொண்டு தங்கி படிக்கலானார்.

அவருடைய வீடு வசதியானது என்பதால் நண்பர்கள் நாங்கள் பள்ளிக்கூடம் விட்டதும் அங்குதான் முகாமிடுவோம்.

கட்டுரைகள் எழுதுவதில் எனக்கும் என்னோடு படித்த வ.கோ.சண்முகத்துக்கும் எப்போதும் போட்டி இருக்கும்.

எங்களுக்கு ஒரு வகுப்பு மூத்த மாணவரான கலைஞர் தமிழில் நன்றாக பேசுகிறார். நன்றாக எழுதுகிறார் என்று ஆசிரியர்கள் பாராட்டும் அளவுக்கு புகழ் பெற்றதைக் கண்டு எங்களுக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டது. அந்த வயதில் அது இயல்பானதுதானே?

அப்போது கருணாநிதி ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பிரதியை எழுதி எல்லா மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் காட்டினார். நாங்கள் விடுவோமா? ‘மாணவர் முரசு’ என்ற கையெழுத்துப் பிரதியை நானும் வ.கோ. சண்முகமும் எழுதிக் காட்டினோம்.

சிறிது காலம் கழித்து மாணவர் முரசு என்கிற கையெழுத்து ஏட்டுக்கு பதில் ‘மாணவர் உலகம்’ என்ற பத்திரிக்கை வரலாயிற்று.

இலக்கியத்தில் எனக்கும் வ.கோ.ச.வுக்கும் அவ்வளவு ஆர்வம். அவர் அப்போதே கவிதை எழுதுவதில் பைத்தியம் கொள்ளலானார். அவருக்கு நான் ரசிகன்! எனக்கு அவர் ரசிகன்!

ஒரு நாள் மாலை வ.கோ.ச. வீட்டுக்கு ஒரு நோட்டுப் புத்தகத்தோடு கருணாநிதி வந்தார். பாரதிதாசன் கவிதையைப் படிக்கத் தடை போட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கூட்டம் போடப்போவதாகவும் நாங்கள் எல்லாம் நன்கொடை தர வேண்டும் என்றும் கேட்டார்.

அப்போதெல்லாம் நன்கொடை என்றால் நாலணா எட்டணா தானே! நாங்களும் உற்சாகம் கொண்டு கொடுத்தோம்! எங்கள் கவனம் கருணாநிதியின் பக்கம் சென்றது.

வ.கோ.ச. வீட்டுக்கும் எங்கள் கிராமங்களுக்கும் அருகிலுள்ள சூரமங்கலம் என்ற ஊரில் இருந்து ஒருவர் ஒரு தடவை வந்தார். தான், பாரதிதாசனோடு தங்கியிருந்ததாகச் சொன்னார்.

பெருங்கவிஞரோடு இருந்த ஒருவரைப் பார்ப்பது எவ்வளவு பெருமை! சிக்கலுக்கு அருகில் பழையனூர் தன் சொந்த ஊர் என்றார். திருவாரூர் வரும்போது சண்முகம் வீட்டில் தங்குவதாகவும் சொன்னார்.

வசதியான சமையற்காரரை வைத்து சாப்பாடு போடும் வீடல்லவா?! அந்த உயரமான மனிதர் தன் பெயர் சுரதா என்றார். அதாவது சுப்புரத்தினதாசன்! அவரும் அன்று முதல் எங்கள் கூட்டத்தோடு இணைந்தார்.

அப்போது கருணாநிதியின் பெயர் எம்.கே.. என் பெயர் கே.ஆர்.ரங்கசாமி. அப்போதுதான் துவங்கியது தமிழ்ப் பெயர் மாற்ற இயக்கம்.

“இனி நம் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றுவோம். ‘மாணவர் உலகம்’ அடுத்த அட்டையை அந்த பெயர்களோடு கொண்டுவருவோம். சமஸ்கிருத பெயர் கூடாது.

சண்முகம் என்கிற என் பெயருக்கு பதில் மாவெண்கோ என்ற தமிழ்ப் பெயரை பெயரை வைத்துக் கொள்ளப் போகிறேன் என்றார்” சண்முகம் முதற்கட்டமாக!

அதன்பிறகு சாமிநாதன் என்பவர் செம்மல் தங்கோ ஆனார்‌. அரங்கசாமி ஆக இருந்த நான் இராம.அரங்கண்ணல் ஆக்கப் பட்டேன். ‌

இந்தப் பெயர் மாற்ற இயக்கத்துக்கு துணையாக இருந்தவர் வேலூரில் தமிழாசிரியராக இருந்த அண்ணல் தங்கோ அவர்கள்.

எம்.கே.வாக இருந்த கருணாநிதியும் தமது பெயரை ‘அருட்செல்வம்’ என்று மாணவ நேசன் இதழ் மூலம் மாற்றிக்கொண்டு உலவினார்.

பிற்பாடு அருளையும் செல்வத்தையும் பெருகிய தோழர்களுக்கு விட்டு விட்டு கருணாநிதியாகவே உலவலானார்!

தமிழ்ப் பற்று, தேசியப் பற்று இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தது அப்போது. கருணாநிதி அவர்கள் சில மாணவர்களின் ஒத்துழைப்போடு ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

நாங்கள் எல்லாம் அதில் இணைந்தோம்.

இப்படி எண்ணற்ற நினைவுகள் என் நெஞ்சில் அலை மோதுகின்றன.

இது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்கள் இந்த நூலில் குவிந்து கிடக்கின்றன. வாசித்துப் பாருங்கள்!

*****

நினைவுகள்.
ஆசிரியர்: இராம.அரங்கண்ணல்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
பக்கங்கள்: 324
விலை: ரூபாய் 325/-

தொடர்புக்கு: 044 24896979

Comments (0)
Add Comment