22வது முறையாக கிராண்ட் ஸ்லாமை குறி வைக்கும் நடால்!

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரபேல் நடால் (Rafael Nadal). இதுவரை 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், 22-வது பட்டத்துக்காக நாளை பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் களம் காண்கிறார்.

பிரெஞ்சு ஓபனுக்கும் ரபேல் நடாலுக்கும் இடையிலான காதல் ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர் வென்ற 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் 13-ஐ பிரெஞ்சு ஓபன் பட்டங்கள்தாம்.

இந்த வருடம் 14-வது பிரெஞ்சு ஓபன் பட்டத்துக்காக காஸ்பர் ரூட்டை (Casper Ruud) எதிர்த்து அவர் ஆடவுள்ளார். இதுவரை பிரெஞ்சு ஓபனில் அவர் ஆடிய 13 இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை குறிவைத்து நடால் ஆடவுள்ள நிலையில் அவரைப் பற்றிய 22 விஷயங்களை தெரிந்துகொள்வோம்…

1.ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்காதான் ரபேல் நடாலின் சொந்த ஊர். டென்னிஸ் போட்டி இல்லாத நாட்களில் மலோர்காவில் நடாலைப் பார்க்கலாம்.

2. இடதுகை டென்னிஸ் வீரராக இருந்தாலும், மற்ற பல விஷயங்களில் வலது கைப் பழக்கம் கொண்டவர் நடால்.

3. நடாலின் மாமா டோனி, புகழ்பெற்ற கால்பந்து வீரர். பார்சிலோனா எஃப்சி அணிக்காக அவர் கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளார்

4. மாமா வழியில் ஆரம்பத்தில் கால்பந்தில் கவனம் செலுத்தியுள்ளார் நடால். 12-வது வயது முதல்தான் கால்பந்தை விட்டு டென்னிஸில் அவர் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

5.டென்னிஸ் ராக்கெட்டில் சிறிய வகை கிரிப்பை பயன்படுத்துவது நடாலின் வழக்கம்.

6. தனது 15 வயதிலேயே பிரபல டென்னிஸ் வீரரான பாட் கேஷை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடால்.

7.சாம்பியன் பட்டம் வெல்லும்போதெல்லாம் வெற்றிக் கோப்பையைக் கடித்து போஸ் கொடுப்பது ரபேல் நடாலின் வழக்கம்.

8. நடாலுக்கும், ரோஜர் பெடரருக்கும் இடையிலான டென்னிஸ் போட்டிகள் மிகவும் பரபரப்பானவை. இதுவரை இவர்களுக்குள் நடந்த 40 போட்டிகளில் நடால் 24-ல் வென்றுள்ளார்.

9.போட்டிகளின்போது தண்ணீர் பாட்டில்களை வரிசைப்படுத்தி வைத்தால், எதிராளியை வெல்ல முடியும் என்பது நடாலின் நம்பிக்கை.

10.நடால் பயன்படுத்தும் ரிச்சர்ட் மில் வகை கைக்கடிகாரம் 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் விலைமதிப்பு கொண்டது.

11.ஸ்பெயின் நாடு 4 முறை டேவிஸ் கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்துள்ளார் ரபேல் நடால்.

12. 2003-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கலம் ஒன்றுக்கு நடாலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

13.கால்பந்து ரசிகரான நடாலுக்கு பிடித்த கால்பந்து அணி ரியல் மாட்ரிட்.

14. டென்னிஸைத் தவிர கோல்ஃப், போக்கர் ஆகிய ஆட்டங்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார் நடால்.

15. டேவிஸ் கோப்பையை மிக இளம் வயதில் (18) வென்ற வீரர் என்ற பெருமையும் நடாலுக்கு உண்டு.

16. டென்னிஸ் மைதானத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் நடால், செய்தியாளர்களைச் சந்திக்க மிகவும் கூச்சப்படுவார்.

17. ‘கிளாடியேட்டர்’, டைட்டானிக் ஆகியவை நடாலுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள்.

18. நடாலின் மனைவியின் பெயர் மரியா பிரான்சிஸ்கா. குழந்தைகளுக்காக நடால் செய்யும் அறக்கட்டளை பணிகளுக்கு வழிகாட்டியாக அவர் இருக்கிறார்.

19. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூரில், ‘நடால் எஜுகேஷனல் அண்ட் டென்னிஸ் ஸ்கூல்’ என்ற பள்ளியை 2010-ம் ஆண்டில் நடால் தொடங்கியுள்ளார். 90 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இப்போது 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

20. ‘களிமண் தரையின் ராஜா’ என்பது ரபேல் நடாலின் பட்டப்பெயராக உள்ளது.

21. ஒலிம்பிக்கில் 2008-ம் ஆண்டு ஒற்றையர் பிரிவிலும், 2016-ம் ஆண்டு இரட்டையர் பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ரபேல் நடால்.

22.முன்னாள் டென்னிஸ் வீரரான கார்லச் மோயா, நடாலின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

– சுதிர். பி.எம்

நன்றி: வாவ் தமிழா இணையப் பக்கம்

Comments (0)
Add Comment