-நடிகர் சிவகுமார்.
கலைஞரின் இறுதிக் காலத்தில் பேச்சின்றி லேசாக சில நினைவுகள் மட்டும் இருந்த நேரம். தமிழரசும், செல்வியும் என்னை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். சண்முகநாதனும் அங்கிருந்தார். நான் வந்திருப்பதாக கலைஞரிடம் சொன்னார்கள். அவரிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை.
அப்போது தான் தமிழருவி மணியன் சிவாஜியைப் பற்றி எழுதியிருந்த ‘தவப்புதல்வன்’ நூல் வெளியீட்டு விழாவில் நான் ‘மனோகரா’ படத்தில் தர்பார் ஸீனில் “புருஷோத்தமரே” என்று துவங்கும் சில நிமிடங்கள் நீளும் வசனத்தைப் பேசியிருந்தேன்.
அந்தக் காட்சியை கலைஞருக்கு முன்னிருந்த டி.வி.யில் போட்டுச் சத்தமாகக் கேட்க வைத்தோம். கேட்டுக் கொண்டிருந்தார். காட்சி முடிந்தது.
அவருடைய முகத்தைப் பார்த்தேன். ஒரு சலனமும் இல்லை. ஆனால் அவருடைய கண்களில் மட்டும் ஒரு சொட்டுக் கண்ணீர்.
அவருடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். அது தான் அவரைக் கடைசியாகப் பார்த்த அனுபவம்” – நடிகர் சிவகுமார்.