அரசியல் விளம்பரக் கம்பெனி!

.பழனித்துரை

தொழில் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு உதவிட வந்ததுதான் விளம்பர நிறுவனங்கள்.

தொழில்நுட்பம் கூர்மையடைந்தபோது இதன் வீச்சு அதிகரித்து இன்று விளம்பரம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலைக்கு சூழல் உருவாகிவிட்டது.

இதுவரை யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு வணிகத்தை நம் அரசியலில் கட்டமைத்துவிட்டது அரசியல் விளம்பரக் கம்பெனிகள்.

எப்படி சந்தையில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு ஒரு பொருளை மற்றொரு பொருள் விற்பனையில் பின்னுக்குத்தள்ளி விற்பனையில் மேலோங்குகிறதோ அதேபோல் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்த யுக்தியின் மூலம் வெற்றி வாய்ப்பைத் தேடித்தர முடியும் என இன்றைய தலைவர்களை நம்ப வைத்து, அரசியல் கட்சிகளையும் கட்சியின் தலைவர்களையும் பலவீனப்படுத்திவிட்டன இந்தக் கம்பெனிகள்.

இது தலைவர்களையும், கட்சிகளையும் மட்டும் பலவீனப்படுத்தவில்லை, மக்களாட்சியையே பலவீனப்படுத்திவிட்டது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

நம் அரசியல் கட்சிகள் அதன் தாழ்நிலைக்கு தங்களின் செயல்பாடுகளினாலே சென்று திக்கற்று நிற்கும் சூழலில் இந்த விளம்பரக் கம்பெனிகள் கடைவிரிந்தன.

அதை நம் கட்சித் தலைவர்கள் பலவீனமாக இருந்த நிலையில் இந்தக் கம்பெனிகளைப் பற்றிக் கொண்டனர்.

பொதுவாக மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசியல் கட்சிகள் தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவோம் என்பதை தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்திடும்.

தேர்தல் பரப்புரையின் போது தலைவர்கள் வாக்குறுதிகளைத் தருவது உண்டு.

ஆட்சியில் உள்ள கட்சிகள் தங்கள் சாதனைகளைப் பட்டியலிட்டு தாங்கள் ஆட்சியில் மக்களுக்காக என்னவெல்லாம் செய்தோம் என்று சாதனைப் பட்டியலை வெளியிட்டு அந்தச் சாதனைகள் தொடர தங்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்பார்கள்.

எதிரணியில் உள்ள கட்சிகள் ஆட்சியின் அவலங்களை அலசுவார்கள் பட்டியல் போட்டு விளக்கிடுவார்கள். ஆட்சியில் நடந்த குளறுபடிகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி இந்த ஆட்சி தொடர அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துவர். இந்தப் பணிகளை கட்சித் தலைவர்கள் செய்வார்கள்.

கட்சிக்காக தேர்தல் செலவிற்கு மக்களை அணுகுவார்கள், உண்டியல் குலுக்குவார்கள். பொதுமக்களின் நிதியும் கட்சிக்காரர்களின் நிதியும்தான் கட்சிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும். கட்சிக்கான அனைத்துப் பணிகளையும் கட்சிக்காரர்களே செய்வார்கள்.

அது கொடி நடுவதாக இருந்தாலும் நோட்டீஸ் ஒட்டுவதாக இருந்தாலும், கட்சியின் ஊழியர்கள்தான் செய்வார்கள்.

அந்தச் செயல்பாடுகள்தான் தொண்டர்களுக்கும் தலைவருக்கும் ஒருவித உணர்வுப் பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. சாதாரண கட்சித் தொண்டர்கள் கூட கட்சியில் லட்சியங்கள் கொள்கைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்.

அந்த அளவுக்கு கட்சி உறுப்பினர் கட்சியின் செயல்பாட்டில் ஒன்றற கலந்து இருந்துள்ளனர். அரசியல் கட்சிகள் சாதாரண ஏழ்மையில் வாழும் மனிதர்கள்கூட மிக எளிதில் தன் கட்சிப் பணிகளினால் கட்சியின் எந்தப் பதவியையும் பிடிக்க முடியும் என்ற நிலை இருந்தது ஒரு காலத்தில்.

கட்சிகள் எளிமையிலிருந்து விடுபட்டு வசதி வாய்ப்புக்களை உருவாக்கி அதன் கட்டமைப்புக்களை பெரிதாக்கி கட்சிகளுக்கு தொடர்ந்து முதலீட்டுகின்ற பண்பை வளர்த்து ஒரு பன்னாட்டு கம்பெனி அளவுக்கு கட்சிகளை வளர்த்தெடுத்துவிட்டனர்.

கட்சிகள் வருமானத்தை தலைமைக்கு மட்டும் ஈட்டிக் கொள்ளவில்லை, மாவட்டங்கள்தோறும் உருவாக்கப்பட்ட கிளைகளுக்கும் முதலீடு என சொத்துக்கள் குவித்து செயல்பட ஆரம்பித்தபோது தொண்டர்களின் உடல் உழைப்பு தேவையற்றதாக ஆகிவிட்டது அரசியல் கட்சிகளுக்கு.

எனவே அரசியல் கட்சிகளின் அனைத்து கட்சிச் செயல்பாடுகளுக்கும் கூலி நிர்ணயம் செய்யப்பட்டு கூலிக்காக கட்சிப்பணிகள் செய்திடும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல எல்லாச் செயல்பாடுகளையும் சந்தைச் செயல்பாடுகளாக மாற்றி விட்டனர் கட்சித் தலைவர்கள்.

கட்சியின் எந்தச் செயல்பாட்டிற்கும் பணம் கொடுத்தால்தான் நடைபெறும் என்ற சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு விட்டன. இதன் விளைவு அரசியல் செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் பணச் செலவு செய்ய வேண்டி வந்துவிட்டது.

இதன் நீட்சியாக தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கும் பணம் தர வேண்டிய சூழல் ஏற்பட்டு, ஒட்டுமொத்த அரசியலை சந்தைக்குள் கொண்டு வந்துவிட்டனர். அரசியலில் அனைத்தும் விற்று வாங்கும் பொருள்களாக மாற்றப்பட்டு விட்டன.

இவ்வளவு செயல்பாடுகளுக்கும் பணம் கொடுக்க கட்சிகளுக்கு எங்கேயிருந்து பணம் வரும்? மிக எளிதாக அனைவரும் கூறிடுவர். சந்தையிலிருந்துதான் நிதி வருகிறது கட்சி நடத்த என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி எழுகின்றது. அரசியலில் வணிகச் சூழல் என்பது, சந்தை பணம் கட்சிகளுக்கு அளித்ததனால் வந்ததா அல்லது, கட்சிப்பணிக்கு அதிக நிதி தேவை என்றபோது கார்ப்பரேட் நிறுவனங்களை தலைவர்கள் அணுகினார்களா?

இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. கார்ப்பரேட் கம்பெனிகள் கட்சிகளுக்கு பணம் தந்ததால் கட்சிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகின்றன.

பெரிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பணம் தருகின்றன. ஆனால், சிறிய கட்சிகள் பணத்திற்கு எங்கே செல்வது என்ற சூழலில், பெரிய கட்சிகளின் ஆதரவை சிறிய கட்சிகள் நாடுகின்றன. பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சிறிய கட்சிகளால் வாழ முடியாது.

இதனால் சிறிய கட்சிகள் அனைத்தும் பெரும் கட்சிகளின் நிழலில் அண்டி வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

பணம் கொண்டு வந்து கட்சிக்குக் கொடுப்போர்தான் கட்சியில் அனுமதி பெற்று தேர்தலில் பங்கேற்று பெருமளவில் நிதி செலவு செய்து பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினராக முடியும்.

தேர்தலுக்கு செலவிட பணம் இருப்பவர்கள் மட்டுமே கட்சியில் போட்டியிட சீட் கேட்க முடியும் என்ற நிலை உருவாகி அரசியல் என்பது பெரும் மூலதனம் உள்ளவர்களுக்கு என்றாகிவிட்டது.

இந்த மாற்றத்தில் பெருமளவு கொள்கை பற்றி, கோட்பாடுகள் பற்றி அரசியல் பற்றி தெரியாத ஒரு பெரும் கூட்டம் பணத்துடன் கட்சிகளுக்குள் பிரவேசித்துவிட்டது.

கொள்கை கோட்பாடுகளில் தோய்ந்து போனவர்கள் பின் தள்ளப்பட்டு கட்சி என்பது மூலதனம் போட்டு பெரும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியதுதான் நம் மக்களாட்சியின் சாபக்கேடு

அரசியல் வணிகமயச் செயல்பாடுகள் அனைத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தியதால் வந்த தாக்கங்கள் என்பது பலர் அறியாத ஒன்று.

கடந்த 30 ஆண்டுகாலத்தில் அரசியல் கட்சிகள் தாங்கள் செய்ய வேண்டிய மேம்பாட்டு அரசியலைப் புறக்கணித்து கட்சி அரசியலையே முன்னெடுத்து, அந்த அரசியலையும் குறுகிய சாதிய, பிராந்திய, கலாச்சார, மத அடையாளங்களில் வைத்து அரசியல்சாசன அடிப்படை குறிக்கோளுக்கு நேர் எதிர் திசையில் பயணித்து இன்று ஒரு தேக்க நிலைக்கு அரசியலை கொண்டு வந்து விட்டனர்.

இந்த நிலையில் தான் கட்சித் தலைவர்களாலோ, கொள்கைகளாலோ, மக்களை ஈர்க்க முடியாத சூழலில் பொருள் விற்க விளம்பரம் செய்வதுபோல் அரசியலிலும் தலைவரையும், கட்சியையும் மக்களிடம் பிம்பம் கட்ட அரசியல் விளம்பரக் கம்பெனியை நாட வேண்டிய சூழலுக்கு கட்சிகள் தள்ளப்பட்டு விட்டன.

இதற்கு மிக முக்கியக் காரணம் கட்சிகள் நம் அரசியல் மக்களிடமிருந்து தூரத்தில் இருந்து செயல்பட ஆரம்பித்ததில் விளைவு என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், நம் கட்சித் தலைவர்கள் தங்களின் பிம்பத்திற்குள் நிற்க ஆசைப்படுகின்றனர்.

ஆகையால்தான் பல ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி அந்த கூட்டத்தில் பேச தயாராக இருக்கின்றார்கள். முன்புபோல் கிராமங்களுக்குள் சென்று மக்களைச் சந்தித்துப் பேச எவரும் தயாராக இல்லை.

அந்தக் கூட்டங்களிலும் மக்களிடம் கொள்கை கோட்பாடு என்பதிலிருந்து மக்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டங்கள் பற்றி மக்களை மகிழ்ச்சிப்படுத்த பேசுகின்றார்கள். இதன் விளைவு மக்கள் மத்தியில் எந்த அரசியல் சிந்தனையும் அற்று செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமல்ல கட்சித் தலைவர்களும் சரி, இரண்டாம் கட்ட தலைவர்களும் சரி, சுகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து பழகியதால் போராட்டக்கள அரசியலை முன்னெடுக்க விரும்பவில்லை.

அதற்குப் பதிலாக அறிக்கைகளிலும், சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவதிலும் மிஞ்சிப்போனால் ஓர் ஆர்ப்பாட்டம் செய்வதற்குமேல் எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்க விரும்பவில்லை. கடந்த 30 ஆண்டுகாலமாக அரசியல் கல்வி என்பது எந்தக் கட்சியின் செயல்பாடுகளிலும் கிடையாது.

அதற்குப் பதிலாக வளர்ச்சி, முதல் மாநிலமாக, வல்லரசு நாடாக வரவேண்டும் என்று வீராவசனத்தில் அரசியலை செலுத்தி காலத்தைக் கழித்ததின் விளைவு, ஒரு தலைமுறை அரசியல் புரிதலற்று நுகர்வில் மயங்கிக் கிடக்கிறது.

இந்த இளைஞர் கையில் தவழும் கைபேசியின் மூலம் இந்த இளைஞர்களை கவர்ந்திழுக்க சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றன இந்த அரசியல் விளம்பரக் கம்பெனிகள்.

இந்த சமூக ஊடகங்கள் தருகின்ற செய்திகளையும், அந்தச் செய்திகளைத் தரும் மொழியையும் கூர்ந்து ஆய்வு செய்து பார்த்தால் இவைகள் அனைத்தும் எப்படி சமூக ஊடகங்களாக இருக்க முடியும் என்றுதான் சிந்திக்கத் தோன்றுகிறது.

அந்த அளவிற்கு பொய்யும் புனைவுகளும், தரம் தாழ்ந்த நடையில் செய்திகளைத் தந்து தமிழின் உன்னதத்தையே குறைத்து விட்டனர்.

மக்கள் மொழியில் எழுதுவதாக நினைத்தை தமிழ் மொழியையே சிதைக்கின்றனர் என்பதுதான் அடுத்த சோக நிகழ்வு. என்று இந்த விளம்பரக் கம்பெனிகள் களத்தில் இறங்கி பணி செய்ய ஆரம்பித்ததோ அன்றே கட்சிக்காரர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு,

விளம்பரக் கம்பெனி கூறும் அறிவுரைகளை கேட்டு அவைகள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது,

அந்த அளவுக்கு கட்சித் தலைவர்களை தன் தலைமை மேலும், தன் கட்சிக்காரர்கள் மேலும் நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டன இந்த அரசியல் விளம்பரக் கம்பெனிகள்.

இந்தச் சூழல் கூறும் செய்தி ஒன்றே ஒன்றுதான். உங்கள் கட்சியால் நீங்கள் வெற்றிபெற இயலாது. உங்களின் கட்சிக்கும், உங்கள் கட்சித் தலைமைக்கும் வேறு ஒரு பிம்பம் உருவாக்கி ஒரே நேரத்தில் அழுத்தமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அது ஒரு புதுப்பிம்பம், தேவையான பிம்பம், அதைத்தான் நாங்கள் செய்வோம் என கட்டளை இட்டு அந்தப் பணிகளை வல்லுனர்களை வைத்து செய்கின்றோம். அந்தப்பணி என்பது நிபுணத்துவத்துடன் செய்ய வேண்டிய பணி.

களத்தில் ஆய்வு செய்து, மக்கள் மன ஓட்டத்தைப் புரிந்து அதற்குத் தகுந்தாற்போல் பிம்பம் கட்ட வேண்டும். எனவே ஆராய்ச்சியும், பிம்பம் உருவாக்கி மக்கள் மனதுக்குள் சென்று சேரும் வகையில் பிம்பக் கூறுகளை உருவாக்கிச் செயல்பட வேண்டும்.

இதற்கான செலவுகளை கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நிதி என்பது மிகப் பெரும் தொகை, அதை கட்சிகள்தான் தரவேண்டும். இந்தத் தொகை எங்கே இருந்து வரும் என்றால், கம்பெனிகளிடமிருந்து வந்துவிடும்.

உங்கள் கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைக்கு வரும்போது, கம்பெனிகள் உங்கள் கட்சிக்கு நிதியை அள்ளித்தர தயாராக இருக்கின்றன என்ற போதனையை வலுவாக கட்சித் தலைமையிடம் அரசியல் விளம்பரக் கம்பெனி கொண்டு சென்று விடுகிறது.

அந்தக் கம்பெனிகள் ஏன் இவ்வளவு நிதி தர வேண்டும். ஆட்சிக்கு வந்துவிடும் இந்தக் கட்சி, இல்லை என்றாலும் எதிர்க் கட்சியாகவாவது வந்துவிடும்.

இந்தக் கட்சிகள் ஆளும் கட்சியாகவோ எதிர் கட்சியாகவோ வந்து விட்டால் அரசாங்கத்தில் தாங்கள் பெரும் சலுகைகள் பற்றி பொது விவாதத்திற்குக் கொண்டு வராமல், தங்களுக்கு அரசு சாதகமான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்பட உதவிடும் என்ற அடிப்படையில்தான் இவ்வளவு நிதியையும் நன்கொடையாக கட்சிகளுக்குத் தருகின்றன.

ஒரு காலத்தில் கையூட்டு வாங்குவது ஊழலாகச் சித்தரிக்கப்பட்டன. இன்று கொள்கை ஊழல் தலைவிரித்தாடுகின்றன மக்களாட்சி நாடுகளில் என்று ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கள் உலகளவில் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்துகின்றன.

எனவே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பெற்றுக் கொண்டு அந்த நிதியினை இந்த விளம்பரக் கம்பெனிகளுக்கு பகிர்ந்தளிக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சிகள் யாருக்கு சேவை செய்யும்.

சந்தைக்காக (அதாவது கம்பெனிகளுக்காக வேலை செய்யுமா) அல்லது மக்களுக்காக வேலை செய்யுமா? பணம் வாங்கிக் கொண்டு வாக்குகள் அளிக்கும் வாக்காளர்மேல், மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன மரியாதை இருக்கும்?

அதேபோல் பணம் வாங்கிக் கொண்டு வாக்குகள் அளித்த மக்கள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து என்ன தார்மீக கடமையை எதிர்பார்க்க முடியும்.

எனவே இது ஒரு சந்தைக்கான அரசியலாக மாற்றிவிட்டோம். இது சமூகத்திற்கான அரசியலாக செயல்படுவது போல் தெரிந்தாலும், பிரதானமாக ஆளுகை மற்றும் நிர்வாகம் சந்தையின் மேம்பாட்டில்தான் சமூகத்தின் மேம்பாடு இருப்பதாக எண்ணி சந்தைக்காகவே செயல்படுகின்றன.

இந்த வணிக அரசியலில், கடைநிலையில் இருப்போர் ஏழை எளிய வாக்காளர்கள். மற்றவர்கள் அனைவரும் எதாவது ஒருவகையில் அரசாங்கத்தை தனக்காக செயல்பட வைத்து விடுகின்றனர்.

இதன் விளைவுதான் 7% வளர்ச்சி பொருளாதாரத்தில் நம் நாடு அடைந்தாலும், ஏழைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்குக் கிடைப்பது ஒரு சில பயன்கள் மட்டுமே. அந்த பயன்களால் மட்டுமே அவர்கள் வாழ்க்கைச் சூழல் மாறுவதில்லை.

இதிலிருந்து விடுபட மக்களுக்கு விழிப்புணர்வும், அதிகாரமும் வேண்டும். தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள.

எனவே மக்களாட்சியை மாண்புற வைக்க சந்தையிலிருந்து அரசியலை வெளியில் எடுக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

03.06.2022  10 : 50 P.M

Comments (0)
Add Comment