ஜெய்சங்கர் ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’டான படம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்ட பறந்த காலகட்டத்தில், சினிமாவில் தனித் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர்.

எம்.ஜி.ஆர், சிவாஜியை போல ஜெய்சங்கருக்கும் ஏராளமான ரசிகர்கள் மன்றங்கள் அப்போது இருந்திருக்கின்றன.

அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்ததால், அவரை ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்று அழைப்பது வழக்கம். அவருக்கு அந்தப் பெயரை பெற்றுத் தந்தப் படம் ‘வல்லவன் ஒருவன்’.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை ஆர்.சுந்தரம் இயக்கினார். ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர், ஷீலா உட்பட பலர் நடித்த அதிரடியான ஆக்‌ஷன் படம் இது.

வேதா இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களில், ‘இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?’, ‘பளிகிங்கினால் ஒரு மாளிகை’ பாடல்கள் சூப்பர் ஹிட் அந்தக் காலத்தில்.

இந்தப் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். எல்.ஆர். ஈஸ்வரியின் இழுக்கும் குரலில் உருவான, ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலை இப்போது கேட்டாலும் அதே ரசனை கிடைக்கும்.

இந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலாக இருப்பார் ஜெய்சங்கர். படமே ரிச்சாக இருக்கும். ஹாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட படம் அப்படித்தானே இருக்கும்.

ஜெய்சங்கருக்காகவும், நாயகிக்காகவும், உடைகள் அனைத்தும் ஸ்டைலாகவும், மார்ட்னாகவும் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் இது ஆச்சரியமாகப் பேசப்பட்டது.

பிரெஞ்ச் திரைப்படமான, ஷேடோவ் ஆப் எவில், சீன் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் படமான ஃபிரம் ரஷ்யா வித் லவ், டாக்டர்.நோ ஆகிய படங்களின் பாதிப்பில் கலவையான உருவான த்ரில்லர் படம், ‘வல்லவன் ஒருவன்’.

பல காட்சிகளில் ஹாலிவுட் படங்களின் பிரதிபலிப்பும் அப்பட்டமாகவே தெரியும்.
சிஐடி அதிகாரி ஒருவர் கொல்லப்பட, அவரைக் கொன்றது யார் என்ற தேடலில் இறங்கும் இன்னொரு சிஐடி அதிகாரி சங்கர், அந்தக் கொலைக்கு பின் இருக்கும் அதிர்ச்சியை கண்டுபிடிக்கிறார். பிறகு கொலையாளிகளை கைது செய்கிறார் என்பதுதான் கதை.

1966 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் அதில் ஜெய்சங்கரின் நடிப்புக்காக பாராட்டப்பட்டது.
இதையடுத்தே ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்ற பெயர் ஜெய்சங்கருக்கு கிடைத்தது. மற்றப் படங்களில் அவருக்கு ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்று டைட்டிலில் போட ஆரம்பித்தார்கள்.

இந்தப் படத்தின் அடுத்த பாகமான ‘சிஐடி சங்கர்’ (1970) ஆம் ஆண்டு உருவானது. இதிலும் ஜெய்சங்கர்தான் ஹீரோ. இது பிரெஞ்ச் படம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

– அலாவுதீன்

Comments (0)
Add Comment