பரண் :
பாசிஸ்டுகளில் ஹிட்லரைப் பற்றியும், முசோலினியைப் பற்றியும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிற நூல் ‘பேசிஸ்ட் ஜடாமுனி’.
முதலில் முசோலினியின் வாழ்க்கை, அடுத்து ஹிட்லரின் சுருக்கமான வரலாறு. லாவகமான சிறுகதை மாதிரி துள்ளலான நடை.
நூலில் தெரிந்த ஓர் ஆச்சர்யம் – முசோலினி, ஹிட்லர் இருவரும் சுத்த சைவர்கள். (உணவைத் தீர்மானிக்க முயற்சிக்கிறவர்கள் கவனிக்கவும்) முசோலினி பழங்களை மட்டும் விரும்பிச் சாப்பிடுகிறவர். நீட்சேயின் சிந்தனைகளில் பரிச்சயம் கொண்டவர்.
ஹிட்லரோ பெண்கள் விஷயத்தில் மிகக் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர். அவருக்கு காம இச்சைகள் அறவே அடக்கப்பட்டு, பிரசங்கத்திறமையாக, தேச வெறியாகப் பரிணமித்திருக்கிறது.
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் அவர்களிடம் ஏற்பட்ட மாற்றம், அதிகார வெறியின் உச்சிக்கு விறுவிறுவென்று நகர்ந்த விதம் எல்லாமே அதிர வைக்கின்றன.
நாடோடியாகத் திரியும்போது முசோலினி கலகக்காரனாக அலைந்திருக்கிறார். பத்திரிகையாளனாகவும் இருந்திருக்கிறார். பதவி ஏற்கும்போது தொழில் என்கிற இடத்தில் தன்னைப் பத்திரிகையாளன் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போது அவர் தன் அறைக் கதவில் தொங்க விட்டிருந்த பலகையில் இருந்த வாசகம்:
‘’உள்ளே வருகிறவர்கள் என்னைக் கௌரவிக்கிறார்கள். வராமல் இருக்கிறவர்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள்’’
பதவிக்கு வந்ததும் தனக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் கொடூரமாகத் தீர்த்துக் கட்டுகிறார். பலரைச் சிறையில் அடைக்கிறார்.
பலர் கொலை செய்யப்படுகிறார்கள். பலர் மன நோயாளிகள் ஆகிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் – யுத்த வெறி. மனதில் உருத்திரண்டிருந்த வன்முறை.
இதை விமர்சித்தார் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரோமன் ரோலண்டு.
‘’ஒருவனுடைய அசட்டுத்தனம் மற்ற எல்லோருடைய விதிகளையும் நாசப்படுத்துகிறது. கொலைகளில் எல்லாம் பெருங்கொலை சுதந்திரத்தை வதைப்பது தான்.
சுதந்திரத்தைக் கொலை செய்கிறவனே பெருங்குற்றவாளி. ஆனால் சிறைக் கூட்டங்களுக்குள்ளே தான் புதிய லட்சியப் பயிர் உண்டாகும். அப்பயிரை யாராலும் அழிக்க முடியாது.’’