குழந்தைகளைக் கட்டுப்படுத்து பெற்றோர்களா, செல்போன்களா? – தலைப்பைப் பார்த்தால் ஏதோ பட்டிமன்றத் தலைப்பு போலத் தோன்றலாம். காரணம் இருக்கிறது.
இன்று சர்வதேசப் பெற்றோர் தினம்.
சம்பிரதாயமாகத் திணிக்கப்பட்ட தினத்தில் பெற்றோர்கள் – அதுவும் கொரோனாக் காலத்தில் எப்படி இருக்கிறார்கள்?
வசதியான குடும்பங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என்ன தான் கொரோனாவின் பெயரால் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அவர்கள் அந்தக் கட்டுப்பாடுகளை மீறவே முயற்சிக்கிறார்கள்.
மீறும்போது பல குடும்பங்களில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் பல சிக்கல்கள் உருவாகின்றன.
நடுத்தரக் குடும்பங்களில் குழந்தைகள் பெரும்பாலும் செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்தினால் பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார்கள். கடுமையானபடி பேசுகிறார்கள்.
பல குழந்தைகளிடமிருந்து குழந்தைமைத் தனம் கொரோனா காலத்தில் காய்ந்த இலையைப் போல உதிர்ந்திருக்கிறது.
பெற்றோர்களை விட, நவீனத் தொழில் நுட்பச் சாதனங்களே தங்களுடைய குழந்தைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதை பெருமூச்சுகளுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.
அடித்தட்டில் உள்ள குழந்தைகளும் எப்படியாவது நவீன செல்போனை வாங்குவதில் பிடிவாதமாய் இருக்கிறார்கள். வாழ்நிலை அல்லது தங்கள் குடும்பப் பொருளாதாரத்தை விட, அவை முக்கியமாகப் படுகின்றன.
இன்று அதிகப்படியாகத் திருடப்படும் பொருட்களில் செல்போன்கள் முக்கியமான ஒன்றாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
அந்த அளவுக்கு நவீனத் தொழில்நுட்பம் போதையை ஏற்படுத்தியிருக்கிறது. அது தான் பல குழந்தைகளுக்கு வெளிப்புற மூளையாகவும் இருக்கிறது.
உடல்ரீதியாக அருகில் இருந்தாலும், குழந்தைகளைப் பெற்றவர்களிடம் இருந்து விலக்கித் தூரத்தில் வைத்திருக்கின்றன நவீனத் தொழில்நுட்பச் சாதனங்கள்.
கொரோனாக் காலத்தில் கல்வி விலகி, வாசிப்பும் தூரத்திற்குப் போன நிலையில் மந்த கதியில் பெரும்பாலான குழந்தைகள் இருக்கையில், சர்வ தேசப் பெற்றோர் தினம் ஒரு சடங்கைப் போல இன்னொரு தினமாக நம்மைக் கடந்து செல்கிறது.
– அகில்