பிரதமரின் தமிழக வருகையும் முதல்வர் உரையும்!

தமிழகத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ தமிழக முதல்வர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு  முன் உரையாற்றியிருக்கிறார்கள்.

அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சென்னையில் திரண்டிருந்த கூட்டம் ஓர் ஆச்சர்யம். பா.ஜ.க.வினரும் வந்திருந்தார்கள். தி.மு.க.வினரும் வந்திருந்தார்கள். திரளாகக் கூடியிருந்த கூட்டம் ஸ்டாலின் பேச்சுக்கும் கை தட்டியது. மோடி பேச்சுக்கும் கை தட்டியது.

வித்தியாசமான கலவையான கூட்டம் தான்.

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது தமிழ்நாட்டின் கோரிக்கைகளைப் பட்டியலிட்டார். நீட் தேர்வு துவங்கி, கச்சத்தீவு, ஜி.எஸ்.டி வரி பாக்கி என்று நீண்ட பட்டியலிட்டவர், அதைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தினார்.

திராவிட மாடல், ஒன்றிய அரசு என்ற சொல்லாக்கங்களையும் பயன்படுத்தினார். மிகையான எந்தச் சொல்லும் அவருடைய உரையில் இடம் பெறவில்லை.

பிரதமருக்கு முன்னால் வெளிப்படைத் தன்மையுடன் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை அதற்குரிய கண்ணியத்துடன் முன் வைத்தார்.

அதன் பிறகே பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஏற்னவே தயாரிக்கப்பட்ட பேச்சையே பேசினார். வழக்கம் போலத் தமிழர் பெருமை பற்றிப் பேசினார்.

செம்மொழி நிறுவனத்திற்குப் புத்துயிர் கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். இலங்கைக்கு உதவியது பற்றியும், தமிழகத்திற்கான வளர்ச்சித்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டவர் பாரதியின் பாடல் வரிகளையும் நினைவுபடுத்தினார்.

சில ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் துவக்கி வைத்திருப்பதன் மூலமாக தமிழகத்தின் உள்கட்டுமானம் கால மாற்றத்திற்கேற்ப மாறும் என்பதெல்லாம் உண்மை தான் என்றாலும்,

ஏற்கனவே டெல்லியில் பிரதமரை ஸ்டாலின் சந்தித்தபோது முன் வைத்த கோரிக்கைகள் குறித்தோ,

அதே மேடையில் அவருக்கு முன்பு ஸ்டாலின் நேரடியாக முன்வைத்த கோரிக்கைகள் குறித்தோ எந்தக் குறிப்பும் பிரதமரின் பேச்சில் இல்லை.

குறைந்த பட்சம் தமிழகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை பற்றிக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

தமிழகத்திற்கு உடனடியான தேவை – நாளைக்கான திட்டங்கள் மட்டுமல்ல, இன்றைக்கான உடனடியான நிதியுதவிகள் தான்.

நிதியை வசூலித்துக் கொடுக்கிற மாநிலம் தனக்கான பங்கைப் பெற்ற எத்தனை முறை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்?

ஒன்றிய அரசு இது குறித்து யோசிக்க வேண்டாமா?

  • யூகி
Comments (0)
Add Comment