மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?

சமகால கல்விச் சிந்தனைகள்: 1 / கல்வியாளர் உமா

*****

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் ஏற்படும் பிரச்னைகளை கருணையுடன் அணுகி, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கல்வியாளர்களில் உமா மிக முக்கியமானவர்.

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் அவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி தொடர்ந்து அச்சு ஊடகங்களில் எழுதியும் காட்சி ஊடகங்களில் பேசியும் வருகிறார்.

கல்விச் சிக்கல்கள், இன்றைய சூழலில் கல்வி ஆகிய இரு நூல்களின் ஆசிரியர். தாய் இணையதள வாசகர்களுக்காக இந்த தொடரை எழுத முன்வந்துள்ளார்.

தமிழகமெங்கும் பள்ளிக் கல்வியில் தற்போது நடந்துவரும் பொதுத்தேர்வுகளை எழுதாத 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை 1.17 லட்சம் என தகவல்கள் வருகின்றன.

இதை வெறும் எண்ணிக்கையாகப் பார்ப்பதைவிட இடைநிற்றலோடு தொடர்புப்படுத்தி பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உமா

ஒரு குறிப்பிட்ட மீச்சிறு எண்ணிக்கையிலான மாணவர்களே உடல் நலமின்மையால் வராத நிலையில் இருப்பர். மற்றபடி இடைநிற்றலே அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதுதான் எதார்த்தம்.

மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது எவ்வாறு?

மாணவர்களின் இடைநிற்றல் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுவது.

ஆகையால் முதலில் காரணத்தை ஆய்வு செய்து நாம் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும்.

காரணத்தை அடிப்படையாக வைத்து அதற்கான தீர்வுகளை நோக்கி நகரவேண்டும்.

குழந்தைகள் பெற்றோர்கள் கட்டாயத்தினால் வேலைக்குச் செல்கின்றனர் அல்லது அவர்களாகவே விருப்பப்பட்டு வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.

பெற்றோரின் கட்டாயத்தால் இப்படி செய்தால் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி அல்லது அரசு மற்ற துறைகளின் வழியாக குழந்தைகளை கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். மேலும் பெற்றோர்களை அறிவுறுத்தியும் அல்லது கண்டித்து முயற்சி எடுக்கலாம்.

மற்றொன்று அவர்களாகவே விரும்பி வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதோடு, எதிர்கால நலன் கருதி அவர்கள் எதற்காக கல்வி கற்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கி கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உரையாடல்கள் அவசியம். அதற்கு ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் அல்லது குழந்தைகள் நல செயல்பாட்டாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழந்தைகளை அணுக வேண்டும்.

சில குழந்தைகளுக்கு பள்ளிகள் பிடிப்பதில்லை. பள்ளிச்சூழல், பாடங்களின் அழுத்தம், தேர்வுகள் போன்ற பிரச்னைகள் இருக்கும்.

ஏனென்றால் அவர்களுக்கு அடிப்படைக் கல்வியே சரியாக அமைவதில்லை. வாசிப்பதற்கு தெரிவதில்லை. கணக்குப் பாடத்தில் அடிப்படை செயல்பாடுகள் தெரிவதில்லை.

அதன் நீட்சியாக, மேல் வகுப்புகள் செல்ல செல்ல அதிக பாடங்களை படிக்க நேரும்போது பயமாகவும் மன அழுத்தத்தின் காரணமாகவும் படிப்பே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற குழந்தைகளுக்கு ஓரளவு அடிப்படையான கல்வியை கொடுப்பதற்கு மட்டும் உறுதிசெய்வது முக்கியம்.

அடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்து பள்ளிச் சூழலை அவர்களுக்குப் பிடித்த சில விஷயங்களில் ஈடுபடுத்த முயற்சியெடுக்க வேண்டும்.

உதாரணமாக பாட்டு, விளையாட்டு, கலை முதலான வகுப்புகள்.

என்எஸ்எஸ், என்சிசி, ஜே.ஆர்.சி, சாலைப் பாதுகாப்பு அமைப்பு, மரம் வளர்த்தல், சுற்றுப்புறச் சூழலில் ஆர்வம் என எது பிடிக்கிறதோ, அதில் ஈடுபடுத்த அவர்களை நாம் உத்வேகப்படுத்தி, அதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

கிராமப்புறப் பகுதிகளில் படிக்கும்போதே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் அதிக நாட்டம் கொள்கின்றனர்.

பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வையும் கல்வியின் தேவையையும் உணர்த்தவேண்டும்.

சிலவேளைகளில் பெற்றோர்களை கண்டிக்கவும் அல்லது குழந்தைகள் பாதுகாப்புத் துறை வழியாக அவர்களுக்கு உரிய தண்டனைக்கான விபரங்களை அறிவுறுத்தவும் வேண்டும். அப்போது மற்ற பெற்றோர்களுக்கும் ஒரு பயம் ஏற்படும்.

ஆகவே பெண் குழந்தைகளை திருமணம் செய்வதிலிருந்து காப்பாற்றுவதும் இடைநிற்றலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு வழியாகும்.

சில குழந்தைகளுக்கு பள்ளிகளில் நண்பர்கள் வழியாக அச்சுறுத்தலும் ஆசிரியர்கள் வழியாக பிரச்சனைகளும் வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு இருக்கும்.

அவற்றை கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டு அவர்களிடம் உரையாடி, அதற்கான தீர்வை நோக்கி நாம் நகரவேண்டும்.

குறிப்பாக பாலியல் ரீதியான பிரச்சினைகளும் ஒருசில இடங்களில் நடப்பதனால் மனநல ஆலோசகர் நியமனம் மிகவும் முக்கியம்.

அங்கு அவரிடம் குழந்தைகள் வெளிப்படையாக பேசி, தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து, அதன் வழியாக அவர்களுக்கு பள்ளி குறித்த பயத்தை நீக்கி பள்ளிக்குள் மீண்டும் கொண்டு வரவைப்பது ஒரு உத்தி.

சில குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகள், போதை மருந்துகள் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைகளாகி பள்ளிக்கு வருவதில் இருந்து தப்பிக்கின்றனர். இப்படியான செயல்கள் கொரோனாவிற்குப் பிறகு தொடர்ந்து அதிகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த வகை குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அதற்கான மையங்களில் சேர்த்து சிகிச்சை எடுக்க வைக்கவேண்டும். சிகிச்சைக்குப் பின்னர் அவர்களைக் கல்வி கற்க நாம் உள்ளே கொண்டுவரலாம்.

சில குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தால், கதைகளைக் கூறினால், கதை எழுதுதல், ஓவியம் வரைதல் என அவர்களின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் தந்தால் பள்ளிக்கு விருப்பமாக வருவார்கள். ஆகவே அதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

வாசிப்புக்காக பள்ளி நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தால், இப்படியான குழந்தைகள் வகுப்பில் அமர்ந்து பாடங்களை கேட்பதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு வாசிப்பை நோக்கி வரும்போது நிச்சயமாக பள்ளிக்கு வருவார்கள்.

விளையாட்டில் நிறைய குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கும். அவர்களைத் தேர்ந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதில் பள்ளிகள் ஈடுபட ஆரம்பித்தால், அவர்கள் இடைநிற்றல் இல்லாமல் வருவார்கள்.

இப்படியாக கல்வித்துறையும் குழந்தைகள் நலத்துறை மற்றும் பாதுகாப்புத்துறைகளும் இணைந்து செயல்பட்டால் இடைநிற்றல் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

(தொடரும்…)

Comments (0)
Add Comment