– சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்
கடத்தல் என்றால் போதைப் பொருட்கள், தங்கம் என்று இருந்து வந்தது. இதில் ஆபத்துக்களும், தண்டனைகளும் அதிகம்.
ஆனால், தற்போது சத்தம் இல்லாமல் தனக்கென்று அடையாளம் இல்லாமல் குழந்தை கடத்தல் என்பது இப்போது மிகப் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது.
இதனைத் தடுக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 25-ம் தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு காரணமாக காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்து வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தை சேர்ந்த இட்டன் பாட்ஷா என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டது.
இட்டன் பாட்ஷின் தந்தை ஒரு புகைப்படக் கலைஞரான இவர் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்து ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து இன்று வரையிலும் மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில், வருடத்திற்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும் இதில் பெண்குழந்தைகள் 55 சதவீதம் பேரும் ஆண் குழந்தைகள் 45 சதவீதம் காணாமல் போவதாக ஆய்வறிக்கைகள் கூறுகிறது.
மேலும், இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போனதாகவும் தேசியக் குற்றப் பதிவு ஆணையம் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் ஏன் கடத்தப்படுகிறார்கள்?
மருத்துவமனையில் தொடங்கி பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ஷாப்பிங் மால், என பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறுகின்றனர்.
குறிப்பாக உடல் உறுப்பு திருடப்படுதல், பெண் பிள்ளைகள் என்றால் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துதல், பிச்சை எடுக்க வைத்தல், மூட நம்பிக்கையின் காரணமாக பலி கொடுப்பதற்கு கடத்தப்படுகிறார்கள்.
மேலும் வறுமையை பயன்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தி படிப்பு,வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி கடத்தப்படுகிறார்கள்.
இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் ஆண் குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகள் கடத்தப்படுவது இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
ஒரு சில கடத்தல் பெற்றோரிடமே சொல்லிவிட்டு கடத்தப்படுகிறது. உங்க பிள்ளைக்கு பெரிய இடத்தில் வேலை வாங்கி தருகிறேன்.
அவர்கள் நல்ல உணவு, துணி, உங்களுக்கு மாத மாதம் பணம் அனுப்பி வைப்பார் என்று அவர்களை மூளை சலவை செய்து கடத்தப்படுவது தெரியாமல் நம்பி அனுப்பி வைக்கும் சம்பவம் நடக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டும் பச்சிளம் குழந்தைகள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள்:
கடத்தப்படும் குழந்தைகள் கொத்தடிமைகளாக வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வேலைக்கு அமர்த்துதல்,போதை கடத்தலுக்கு, பாலியல் தொழில் போன்ற செயலில் ஈடு படுத்துகின்றனர்.
தடுப்பது எப்படி?
குழந்தைகள் காணாமல் போவது தனிப்பட்ட விஷயம் என்று இல்லாமல் இது சமூதாயத்தின் கடமை என்று முதலில் என்ன வேண்டும்.
ஒரு குழந்தை தனியாக அழுது கொண்டு இருந்தால் எனக்கென்ன என்று நினைக்காமல் உடனடியாக காவல் துறையில் தெரிவிக்க வேண்டும்.
சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் குழந்தையுடன் நடந்து கொண்டால் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கு வன்முறை நடக்கிறது என்றால் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பான அவசர இலவச தொலைபேசி எண் – 1098க்கு தெரிவிக்க வேண்டும்.
பெற்றோரின் கடமை
1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் எந்தப் பொருளும், உணவும் வாங்க கூடாது என்று சொல்லி கொடுக்க வேண்டும்.
2. வெளியில் செல்லும் போது பேருந்தில் பயணிக்கும் போது தெரியாத நபர்களிடம் உங்கள் குழந்தைகளை விட்டு செல்லாதீர்கள்.
3.விளையாடும் போது தெரியாத நபர் யாரேனும் வந்தால் உடனடியாக கவனியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
தெரியாத நபர் யாராவது கூப்பிட்டால் போககூடாது என்று சொல்லிக் கொடுங்கள். வந்து பேசினால் உங்களிடம் தெரிவிக்கும் மாறு கூறுங்கள்.
4.பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் உங்கள் முகவரி, தொலைபேசி எண், சொல்லிக் கொடுங்கள்.
5. உங்களைத் தவிர மற்றும் நீங்கள் அவர்களை அழைக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால் அவர்களைத் தவிர யார் கூப்பிட்டாலும் செல்லாதீர்கள் என்று சொல்லிக் கொடுங்கள்.
6. குட் டச், பேட் டச், சொல்லி கொடுத்து வளருங்கள்.
குழந்தைகள் காணாமல் போவது சமுதாயத்தின் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர வேண்டியது அவசியமாகும்.
குழந்தைகள் 15 வயது வரை பெற்றோரின் முழு கண்காணிப்பில் இருப்பது அவசியமாகும். சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது தான் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.
– யாழினி சோமு