ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் நிரம்பியிருக்கும் கதை கிடைப்பது மிக அரிது.
அதற்காக வெறுமனே திரைப்பிரச்சாரமாக இல்லாமல் நிகழ்கால சமூகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதைச் சொல்வது இன்னும் அரிது.
அப்படியொரு திரைப்படம் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கிய ‘ஆர்ட்டிகிள் 15’.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இக்கதையை தமிழ்நாட்டுக்கு பொருத்திப் பார்க்க முடியுமா?
இக்கேள்விக்குப் பதிலாக ‘நெஞ்சுக்கு நீதி’யைத் தந்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
ரீமேக் படம் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டின் கடந்த கால, நிகழ்கால சமூகத்தின் நிஜ முகத்தைக் காட்ட முற்பட்டு தனித்துத்தை வெளிப்படுத்தியிருக்கிறது ‘நெஞ்சுக்கு நீதி’.
ஒடுக்கப்பட்டவர்களின் வலி!
பத்திரிகையாளராக இருக்கும் மனைவியை (தான்யா) சென்னையில் விட்டுவிட்டு பொள்ளாச்சி சரகத்திற்கு துணை கண்காணிப்பாளராக மாற்றலாகி வருகிறார்.
அவர் பணியில் சேர்ந்த அடுத்த நாளே இரண்டு தலித் சிறுமிகள் தூக்கிலிடப்பட்டு இறந்த விவகாரம் பெரிதாகிறது. இரு பெண்களின் பெற்றோரும் அவர்களை அடித்து ஆணவக் கொலை செய்ததாக வழக்கு பதிவாகிறது.
அவ்விரு பெண்களுடன் இருந்த இன்னொரு சிறுமி காணாமல் போனதை விசாரிக்கத் தொடங்குகிறார் விஜயராகவன். அப்போது சமூகத்தில் மட்டுமல்லாமல் காவல் துறையிலும் சாதீய ஆதிக்கம் அதிகமிருப்பதைக் கண்கூடாக காண்கிறார்.
தான் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை மீறி, அவ்வழக்கில் விஜயராகவன் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்தாரா? காணாமல் போன சிறுமியைக் கண்டறிந்தாரா என்பது மீதிக்கதை.
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளும் வேதனைகளும் பெரும்பான்மைச் சமூகம் அறியாதது. இதனை உரக்கப் பேசும் ‘நெஞ்சுக்கு நீதி’, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் நாம் நன்கறிந்த வார்த்தைகளை மீண்டுமொருமுறை மனதில் பதிய வைக்கிறது.
அனல் தெறிக்கும் வசனம்!
‘ஆர்ட்டிகிள் 15’ பார்த்தவர்களுக்கு இப்படம் புதிதாக இராது. ஆனாலும், அக்கதை தமிழ்நாட்டுடன் எப்படிப் பொருந்தும் என்பதை அறியும் ஆவல் கொண்டவர்களுக்கு இப்படம் அந்நியமாகத் தென்படாது.
காரணம், மூலப்படத்தின் ஆன்மா அப்படியே இதிலிருக்கிறது; கூடுதலாக, தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு ஆங்காங்கே ‘மாண்டேஜ்’ மூலமாகவும் வசனங்கள் மூலமாகவும் தமிழ்நாட்டின் சமகால அவலங்கள் படத்தில் நிறைக்கப்பட்டிருக்கின்றன.
‘நீங்க கொட்ட கொட்ட நாங்க அள்ளனுமா’ என்று படத்தின் இறுதியில் இளவரசு பேசும் வசனம் இதற்கொரு உதாரணம்.
காரணம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் காவல் துறையில் உயரதிகாரிகளின் சொற்களை மீறிச் செயல்படாதவாறே அவரது கதாபாத்திரம் படம் முழுக்க வந்து போகும்.
’எல்லாரும் இங்க சமம்னா அப்போ யாருதான் சார் ராஜா’ என்று கேட்கும் மயில்சாமி மனம் திருந்திப் பேசும் காட்சி இன்னொரு உதாரணம்.
போலவே, ரவுடியாக சித்தரிக்கப்படும் ஆரி அர்ஜுனன் தான் அப்படி ஆனதற்கு காரணம் என்னவென்று சொல்லும் இடத்தில் கூர்மை பாய்ச்சுகிறது தமிழரசன் பச்சமுத்துவின் வசனம்.
இயக்குனரின் சமூக அக்கறை!
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஒரிஜினல் படம் பார்த்த அதே உணர்வை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அடுத்தடுத்து பல்வேறு ஷாட்களை பார்க்கிறோம் என்பதை உணர வைத்து, மாபெரும் உழைப்பு படத்தில் கொட்டப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.
ரூபனின் படத்தொகுப்பு திரைக்கதையில் எந்தவொரு கண்ணியும் விட்டுப்போகாமல் கவனமாக கோர்த்திருக்கிறது.
இடைவேளைக்குப் பிறகு தென்படும் தொய்வு திரைக்கதையில் தவிர்க்க முடியாது என்பதால் அதனை விட்டு வைத்திருக்கிறது.
நாயகனின் அதிரடியை தெரிய வைப்பதிலும், அடுத்தடுத்த திருப்பங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது திபு நிணன் தாமஸின் பின்னணி இசை.
’செவக்காட்டு சீமையெல்லாம்’ பாடல் அப்பட்டமாக தமிழ் மணம் பரப்புவதுடன் திரைக்கதை நிகழ்வுகளையும் தமிழ்நாட்டின் சமூக நிலைமையையும் ஒரே கோட்டில் இணைக்கிறது.
தனக்கு சமூக அக்கறை உண்டு என்பதை ‘கனா’ படத்திலேயே நிரூபித்த அருண்ராஜா காமராஜ், வெகுநேர்த்தியாக அமைந்த ‘ஆர்ட்டிகிள் 15’யை இரண்டாம் படமாகத் தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய சவால்.
ஒரிஜினலுக்கு நியாயம் செய்ததோடு தமிழ் சூழலுக்கும் அது அந்நியமாகத் தெரியாதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அம்பேத்கரின் சிலைக்கு கூண்டு இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து ஊருக்கு வெளியே இருக்கிறோமா ஊருக்குள் இருக்கிறோமா என்பதைச் சொல்லும் இடம் அவரது சமூகப் புரிதலுக்கு ஒரு சோறு பதம்.
தூய்மைப்பணியாளர்கள் தங்களது ஒத்துழையாமையை கைவிட்டு காவல் நிலைய வளாகத்தைச் சுத்தம் செய்தபிறகு அதனையொட்டிய சாலையில் போலீஸ் ஜீப் செல்வதாக காட்டப்படும்.
அதனுடன் சேர்த்து வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைப்பதாக அந்த ஷாட் முடிவடையும். எல்லோரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு சமூகம் சீராக இயங்கும் என்பதை சில மைக்ரோ நொடிகளில் சொல்லிச் செல்கிறது.
அதே நேரத்தில், சாக்கடையைச் சுத்தம் செய்ய எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன என்று சொல்லி, ஒரிஜினல் படத்திலுள்ள காட்சியை தமிழ்நாட்டுக்கு தகுந்தவாறு மாற்றியிருப்பது அருமை.
இதையெல்லாம் மீறி குணசேகரனாக வரும் ஆரி அர்ஜுன்ன் பாத்திரத்திற்கு திரையில் பெரிதாக இடம் இல்லாதது, சிரித்த முகத்துடன் பார்க்கும் அனைவரிடமும் சாதி என்னவென்று கேட்கும் நாயகனின் இயல்பை இதில் தவறவிட்டிருப்பது போன்றவை மூலத்திலிருந்து கொஞ்சமாக வேறுபடுகின்றன.
இதனால், இடைவேளைக்குப்பிறகு திரைக்கதையில் சுணக்கம் ஏற்படுவதாகத் தோன்றுகிறது.
உதயநிதிக்கு வெற்றி!
நாயகியாக வரும் தான்யாவுக்கு நாயகன் உதயநிதியுடன் சேர்ந்திருக்கும் காட்சி ஒன்றுதான். அதிலும் மூன்றாவதாக ஒரு சிறுமிக்குதான் முதன்மை தரப்பட்டிருக்கிறது.
காவலர்களாக வரும் மயில்சாமி, சரவணன், எஸ்ஐயாக வரும் இளவரசு, வெங்கட்டாக வரும் திலக் என்று பலரும் அசல் முகங்களைக் கண்ட உணர்வைத் தருகின்றனர்.
காணாமல் போன சிறுமியின் சகோதரியாக வரும் ஷிவானி ராஜசேகர் ஏதோ ஒருவகையில் திரையில் அந்நியமாகத் தெரிகிறார். படிய வாரிய அவரது முகம் செயற்கையாகத் தென்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு இதில் மிகப்பெரிய பாத்திரம். ரசிகர்களிடம் ‘கெட்ட பெயர்’ வாங்கும் அளவுக்கு அருமையாக நடித்திருக்கிறார்.
இவர்களையெல்லாம் மீறி ‘விஜய ராகவன்’ பாத்திரத்தில் தோன்றி மிகச்சில காட்சிகளில் கைத்தட்டல்களை அள்ளுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
‘என்னைப் பொறுத்தவரைக்கும் நியுட்ரல்ங்கறது நடுவுல நிக்கறதில்ல நியாயத்தின் பக்கம் நிக்கறது’ என்று அவர் பேசும் வசனத்திற்கு கைத்தட்டல்கள் விழாமல் போனால் ஆச்சர்யம்தான்.
தொடக்கத்தில் சமூக நிலைமை குறித்த அறியாமை தென்பட்டாலும், பெரும்பாலான காட்சிகளில் ரொம்பவும் இறுக்கத்துடன் இருப்பது போலவே வந்து போகிறார். இதனால், மிகச்சில இடங்களில் திரைக்கதையின் ஏற்ற இறக்கம் சட்டென்று புலனாகாமல் போகிறது.
அதனைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்து சமூக நீதி பேசும் படமொன்றை தந்து ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதைச் சாதித்திருக்கிறார்.
தொடர்ச்சியாக இது போல இயங்கினால், இது போன்ற கதைகள் தமிழில் அதிகம் காணக் கிடைக்கும்.
அந்த வகையில், ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் வடிவம் எடுக்க காரணாமானதற்காகவே உதயநிதியை பாராட்டலாம். ‘நெஞ்சுக்கு நீதி’யையும் பார்த்து ரசிக்கலாம்!
-உதய் பாடகலிங்கம்