நட்பின் சுகமான தருணங்கள்!

  • மணா

வாசிப்பின் சுகந்தம்:

உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது.

அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில் பின்னகர்ந்து பார்த்தால், அதில் மினுங்கித் தெரிவது நண்பர்களின் நெருக்கம் மட்டுமல்ல, நம்முடைய அந்த நாளைய பிம்பமும் தான்.

இம்மாதிரியான கனிந்த அனுபவத்தைத் தருகிறது கி.ராஜ நாராயணனின் “நண்பர்களோடு நான்’’.

இடைசெவல் என்ற இவருடைய சொந்தக் கிராமத்தில் பிறந்து, ரசனையையும், அந்தரங்கத்தையும் பகிர்ந்து கொண்டு, கி.ரா எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த செல்லையா என்கிற கு.அழகிரிசாமியிலிருந்து ஜெயகாந்தன், தி.க.சி, சுந்தர ராமசாமி, நா.வானமாமலை, மீரா, பாவாடை ராமமூர்த்தி என்று பத்து நண்பர்களுடனான அனுபவப் பகிர்வு தான் இந்தத் தொகுப்பு.

நட்பின் தளத்தில் ஒருவர் எந்த அளவுக்கு மனம் திறக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவருடன் பழகும் நண்பர்களும் மனம் திறக்கிறார்கள். அறிமுகம் பழக்கமாகி, அடர்ந்து நட்பாகி நெருக்கம் கூடுகிறது.

கு.அழகிரிசாமியைப் பற்றி எழுதும்போது அதில் நட்பின் வாஞ்சை தெரிகிறது. கூடுதலாகவே அவருடைய கதைகளுக்கும், வாழ்க்கைக்கும் இடையில் விழுந்த முடிச்சுகளைக் கூட கி.ரா.வால் இனம் காண முடிகிறது.

இசையிலும், ஓவியத்திலும், கவிதைகளிலும், பெரும் லயிப்புக் கொண்டிருந்த அழகிரிசாமியின் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களை, ஏதோ தோளில் விழுந்த கையணைப்போடு, மென்மையான குரலில் முகபாவங்களுடன் சொல்லிக் கொண்டு வந்த மாதிரியும் இருக்கிறது.

சுந்தர ராமசாமியின் துவக்க கால வாழ்க்கையைப் பற்றி அவரே சொல்கிற மாதிரி, கி.ரா தந்திருப்பது நல்ல அனுபவம். இன்னொரு புத்தக வெளியீட்டு நிறுவனத்திடம் சண்டை சச்சரவாகி.

கறாரான விதிமுறைகளுடன் மீராவுடன் தொடங்கிய நட்பு போகப் போக நெகிழ்ந்து, மீரா மறையும் வரை நீடித்ததைப் பற்றிச் சொல்லிவிட்டு இறுதியில் இப்படி எழுதுகிறார்.
“புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் – ஒரு புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம் – புத்தகமாகவே ஆனாய் நண்பனே’’

தி.க.சியிடம் இயல்பாக இருந்த கறாரான சில இயல்புகளைக் குறிப்பிட்டு அவரை ‘சுக்குக்கு’ ஒப்பிடுகிறார்.

“நாக்குக்குத் தான் சுக்கு காரம்; குடலுக்கு ரொம்ப இதம்’’ என்று ரசிகமணி சொல்வதை நினைவூட்டி நிறைவு பெறுகிறது தி.க.சி.யைப் பற்றிய கட்டுரை.

ஜெயகாந்தனை மதுரை மேலக் கோபுர வீதியில் சந்தித்து, மதுரைக்குள்ளேயே அவருடன் ஒரு நடை போய்விட்டு வந்து, இருட்டுகிற வரை பேசிக் கொண்டிருந்த அனுபவத்தை ஒரு கதை சொல்லியின் லாவகமான தொனியில் கி.ரா சொல்லிக் கொண்டு வரும்போது ரசமாக இருக்கிறது.

பிறகு இடுப்பில் வேட்டியும், துண்டுமாக ஜெயகாந்தனுடன் ரயிலில் பயணப்பட்டு, திரைப்படம் பார்த்ததை எல்லாம் விவரித்து விட்டு, “இசை உலகின் அந்தத் தோற்றங்களை எல்லாம் உடைத்தவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை’’ என்றால், தமிழ் எழுத்து உலகில் நம்ம ஜெயகாந்தன் என்று சொல்ல வேண்டும்’’ என்கிறார் கி.ரா.

ஜெயகாந்தனின் சேத்துப்பட்டு வீட்டிற்குப் போனபோது, இசைத் தட்டுகளால் விரிந்த நெகிழ்வான அனுபவம் என்று நட்பின் நெருக்கம் நிரம்பிக் கிடக்கிறது இந்த நூல் முழுக்கவும்.

கி.ரா.வை அறிந்தவர்கள் இந்த நூலை வாசிக்கிறபோது, இடையிடையே கசிந்த சிரிப்புடன் அவர் நம்முடன் உரையாடுகிற ‘சொகத்தை’ உணர முடியும்.

நூல்: நண்பர்களோடு நான்
ஆசிரியர். கி.ராஜ நாராயணன்
வெளியீடு: அகரம்
எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்- 6310007.
பக்கங்கள் : 176

Comments (0)
Add Comment