நம்பிக்கை – வார்த்தை அல்ல வாழ்க்கை!

வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்து விட்டால் சுவாரஸ்யம் என்பது இல்லாமலே போய்விடும். நம்மை நாம் அறிந்து கொள்ள சில தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றம், அவமானம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்வு முழுமை அடைய முடியும்.

பொதுவாக எல்லோரும் தனது வாழ்க்கையில் இவைகளை கடந்து தான் வந்திருப்போம், வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இவைகளை கடந்து வாழ்கிறோம் என்றால் அது உண்மையில் ஒற்றைச் சொல்லில் மட்டுமே அடங்கியுள்ளது. இதுதான் ஒவ்வொரு மனிதனையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் மந்திரச்சொல் தன்னம்பிக்கை.

சூழ்நிலைகளை காரணம் காட்டி நம்மை நாமே முடக்கி கொள்ளாமல் தைரியத்துடன் செயல்பட வைப்பது அதுதான் தன்னம்பிக்கை. தளராத உள்ளம் படைத்தவர்களுக்கே உலகம் வசப்படும்.

நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நம்பிக்கை என்பது நமக்கு பிடித்தமான நபர்களிடம் வருவது.

அம்மா மீது அப்பா வைத்துள்ள நம்பிக்கை நண்பர்கள் மீது, ஆசிரியரிடம் மாணவர்கள், அக்கம் பக்கத்து வீட்டார் மீது வரும் நம்பிக்கை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தன் நம்பிக்கை என்பது நம்மை துவண்டு விடாமல் பார்த்துக் கொள்வது.

தன்னம்பிக்கை எப்படி தோன்றுகிறது?

பிறந்து சில நிமிடங்கள் ஆனதும் அழ தொடங்கிவிடும் குழந்தை தனக்கு பசிக்கிறது என்பதை அழுகையின் மூலம் உணர்த்தி கத்தினால் பால் கிடைக்கும் என்று தனது முயற்சியில் பால் குடிக்க தொடங்கிறதே அதில் ஒளிந்துள்ளது தன்னம்பிக்கை.

விலங்குகள் காடுகளில் ஈன்றெடுக்கும் குட்டிகள் பால் குடிப்பதற்கு மண்ணோடு முட்டி மோதி உருண்டு, புரண்டு யாருடைய தயவும் இன்றி தட்டி தடுமாறி தாயின் மார்பு காம்பு பிடித்து தனது பசியை போக்கிக் கொள்வது போராட்டத்துடன் துளிர்க்கிறது தன்னம்பிக்கை.

ஒருவன் நம்பிக்கையை யார் வேண்டுமானாலும் தோற்கடிக்க முடியும். ஆனால் அவனால் தோன்றிய தன்னம்பிக்கையை யாராலும் தோற்கடிக்க முடியாது இதுவே உண்மை.

தன்னம்பிக்கையின் அவசியம் என்ன?

நாம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் தன்னம்பிக்கை அவசியமாகும். உயிராய் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கும் சவால்களும், போராட்டங்களும் இயற்கையாக படைக்கப்பட்டது. இதனுடன் தான் பயணிக்க வேண்டும்.

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம், துரோகம், தோல்வி, அவமானம், ஏமாற்றம் இவதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தன்னம்பிக்கை துளிர்விட தோல்விகள், துரோகங்கள், அவமானம் இவைகளே அதற்கு தூண்டுகோலாய் அமைகிறது.

வாழ்வில் வெற்றி வேண்டும் என்றால் ஒரு முறையேனும் இவைகளை கடந்து வந்தால் மட்டுமே சாத்தியம். தன்னால் முடியும் என்பதால் மட்டுமே விதைகள் மண்ணை துளைத்து வெளியே வர முடிகிறது.

ஒவ்வொரு தோல்வியிலும் அவமானத்திலும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது தன்னம்பிக்கையை மட்டுமே என்பதை உணர வேண்டும். சாதிக்க வேண்டும் என்றால் முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக… சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி. திருநங்கையான இவர் இன்று தமிழக காவல் துறையில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

அவர் கடந்து வந்த பாதையை கேட்கும் போது விழியோரம் கண்ணீர் துளிகள் நம்மை அறியாமல் எட்டிப் பார்க்கத் தான் செய்கிறது.

ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாற அவர் பட்ட துயரங்கள் மருத்துவர்கள் நடந்து கொண்டதை வலிகளுடன் பகிர்ந்திருக்கிறார் ஒரு பேட்டியில். தமிழக காவல் துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தார்.

ஆனால் இவர் திருநங்கை என்ற காரணத்துக்காக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா யாஷினி.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்தத் தேர்வில் பிரத்திகா யாஷினி கலந்துகொண்டு தேர்ச்சியும் பெற்றார்.

அடுத்த சவால் அவருக்காக காத்திருந்தது.

உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி கால தாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகா யாஷினியை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் பிரித்திகா. கடைசியில் வெற்றியும் பெற்றார். ஆணாக இருந்து பெண்ணாக மாறி சமுதாயத்தின் வசைச் சொற்கள், தீண்டாமை, ஒதுக்கப்படுவது இதையெல்லாம் கடந்து சாதித்துக் காட்டியுள்ளார் பிரித்திகா.

அவரை வெற்றி அடைய வைத்தது படிப்போ, நீதிமன்றமோ இல்லை. இவரது தளராத தன்னம்பிக்கை மட்டுமே… அவமானத்தை கடந்து தனக்குள் தோன்றிய தன்னம்பிக்கையை தளர விடாமல் போராடி வென்றுள்ளார் பிரித்திகா.

ஆகவே யாராக இருந்தாலும் ஒருவரின் தோல்வியில் இருந்து மீண்டு வருவதும், மீட்டுத் தருவதும் அவர்களின் தன்னம்பிக்கையால் மட்டுமே முடியும்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment