இனியாவது காங்கிரஸ் பலப்படுமா?

“மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’

– என்று காங்கிரசைப் பற்றிய சுய விமர்சனத்தோடு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி.

அதே சமயம் பா.ஜ.க பொதுமக்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்தியிருக்கிறார். கட்சியில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரசில் மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு இது.

இந்த முடிவை முன்பே எடுத்திருந்திருந்தால் சோனியா குடும்பத்தில் அவரும், ராகுலும், பிரியங்காவும் பதவிகளுக்குப் போட்டியிடுகிற நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். அந்தக் குடும்பத்தில் ஒரே நபர் சிக்கல் இல்லாமல் முன்னிறுத்தப்பட்ட வாய்ப்பிருந்திருக்கும்.

தமிழகத்தில் ப.சிதம்பரத்திற்கும், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் பதவிகள் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இனி காங்கிரசில் இருக்கிற பல மூத்த குடும்பங்கள் தங்களுக்குள் முட்டி மோதி யாருக்குப் பதவி என்பதில் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருக்கும்.

இதே மாதிரி தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராக இருந்த போது ‘கே’ பிளான் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதென்ன கே பிளான்?

காங்கிரசில் உள்ள மூத்த உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை விட்டுவிட்டுக் கட்சிப் பொறுப்புக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்த காமராஜர் தானே அதற்கு முன்னுதாரணமாகவும் இருந்தார்!

தான் வகித்த தமிழ்நாடு முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்றார்.

முதல்வர் பொறுப்பை காமராஜர் துறக்க முடிவு எடுத்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருக்குத் தந்தி அனுப்பியவர் பெரியார்.

ஆனாலும் காங்கிரசில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சியின் நலனுக்காகச் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதே மாதிரி தான் இப்போது எடுக்கப்பட்டிருக்கிற முடிவும்.

அதோடு காங்கிரசில் 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சீட் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டைக் கடந்த பரந்துபட்ட அனுபவமுள்ள காங்கிரஸ் தற்போதுள்ள மாதிரி இதற்கு முன் சரிவைச் சந்தித்ததில்லை.

தனிப்பெரும்பலத்துடன் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்குக் காங்கிரஸ் முதலில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல் மட்டும் இருக்கட்டும். அவர்களையே தொடர்ந்து களத்தில் இறக்கி விடும் செயலைத் தொடர்ந்து செய்யக்கூடாது.

2024 மக்களவைத் தேர்தல் வருவதற்குள் தன்னையும், கூட்டணியையும் பலப்படுத்தினால் மட்டுமே மக்கள் காங்கிரசை நம்ப முடியும். அதற்குப் பல மாநிலங்களில் பலம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகளின் ஒத்துழைப்பு அதற்கு அத்தியாவசியத் தேவை.

மாநிலக்கட்சிகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியோ, குறைத்து மதிப்பிடுவதையோ காங்கிரஸ் செய்து வந்தால், அது எதிரில் இருக்கிற பா.ஜ.க.வை வலுப்படுத்தவே உதவும்.

இன்றைக்கும் காங்கிரஸ் தன் பலவீனத்தின் மூலமே பா.ஜ.க.வைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மதவாதம், இந்துத்துவாக் குரல்கள் வலுப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டை எழுப்பும் காங்கிரசே அதற்குக் காரணமாகவும் இருக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தான் கொஞ்சமாவது யோசிக்கத் துவங்கியிருக்கிறது காங்கிரஸ். முதலில் காங்கிரஸ் தங்களுக்குள் கலந்தாலோசித்து நம்பகத்தன்மை கொண்ட தலைமையை முடிவு செய்ய வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை எப்படிக் குறுகிய காலத்தில் பெற்று பா.ஜ.க தன்னைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் பலவீனங்களை உணர்ந்து தங்களைச் சரிப்படுத்திக் கொள்ளாத வரையில், பா.ஜ.க. வளர இந்தக் கட்சிகளும் வலுவான காரணமாகவே இருந்து கொண்டிருக்கும்.

– யூகி

Comments (0)
Add Comment