நாம் ஏன் வாழ வேண்டும்?

கலை விமர்சகர் இந்திரன் பார்வை

கலை விமர்சகர் இந்திரன், ‘என்னைக் கவர்ந்த புத்தகம்’ என்ற தலைப்பில் தான் படித்த மிகச் சிறந்த நூல்களைப் பற்றிய குறிப்புகளை பேஸ்புக் பக்கத்தில் எழுதிவருகிறார். முதல் நூலாக

VICTOR E FRANKL  எழுதிய ”MAN’S SEARCH FOR MEANING” நூலைப் பற்றி பதிவிட்டுள்ளார். மனித இனத்திற்கு வாழ்வதற்கான பெரும் நம்பிக்கையளிக்கும் உலகின் சிறந்த படைப்புகளில் அதுவும் ஒன்று.

ஹிட்லரின் வதை முகாமில் இருந்த விக்டர் ஈ ஃபிராங்கிள், ஓர் உளவியல் மருத்துவர். வதைமுகாம் துன்பங்களைத் தாங்கி கடைசியாக விடுதலை அடைந்தார். 92 வயது வரை வாழ்ந்தார். இவர் எழுதிய MAN’S SEARCH FOR MEANING புத்தகம் 10 மில்லியன் பிரதிகள், 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு என்று மாபெரும் வாசிப்பை அடைந்தது.

பகுதி1 : வதைமுகாம் அனுபவங்கள் குறித்த உளவியல் ஆய்வு

இந்திரன்

பகுதி 2: துயரமான வாழ்க்கை, மரணம் எதன் முன்னாலும் அதற்கு ஒரு ஒரு அர்த்தம் தேடுவது மனதை உற்சாகப்படுத்தும் எனும் அவரது லொகோதெரபி (logotherapy) பற்றிய விளக்கம்.

இந்நூலின் சாரம்:

உள்முகமான சுதந்திரம்:  பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று நம்மை வெளியிலிருப்பவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.

அவர்களின் நிர்ப்பந்ததிற்கு அடிபணிய வேண்டியதில்லை என்கிற நிலை ஏற்படுமானால் அதுவே மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய சுதந்திரம்.

உன் செயலை நீயே முடிவு செய்: மற்றவர்களின் செயலினால் நீ குலைந்து போகிறாய் என்றால் மற்றவர்கள் உன்மேல் ஆதிக்கம் செலுத்த நீ அனுமதிக்கிறாய் என்று அர்த்தம்.

மற்றவர்களின் செயல் உன்னை பாதிக்காத அளவுக்கு உன் மனநிலையைச் வைத்துக்கொள்ள நீ பழகவேண்டும்.

நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது.

ஆனால் அப்படி நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு நீ இப்படித்தான் எதிர்வினை ஆற்ற வேண்டுமென்று முடிவு செய்யும் சுதந்திரம் நம் கையில் இருக்கிறது.

உன் எதிர்வினையின் காரணமாக உன் சூழ்நிலையின்மீது நீ அதிகாரம் செலுத்த முடியும்.

உன் உணர்ச்சிகளை நீயே தேர்ந்தெடு: நீ எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாய் என்று நீ முடிவு செய்து விட்டால் உன்னை யாரும் துக்கப்பட வைக்க முடியாது.

எதையும் நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்பதுதான் வாழ்க்கையில் முக்கியம்.

நாம் ஏன் வாழ்கிறோம்? :  இந்த கேள்விக்கு ஒரு பதிலை நாம் கண்டு பிடிக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாமில் இருந்த பலருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. தன் குழந்தைக்காக வாழ வேண்டும்.

தன்னுடைய நிறைவேறாத ஒரு ஆசைக்காக நாம் வாழ வேண்டும். இப்படி வாழ்க்கையில் ஒரு உன்னதமான குறிக்கோளை வைத்திருந்தால் அதன் பொருட்டு நாம் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற சக்தியை அது கொடுத்து விடும்.

நாம் ஏன் வாழ வேண்டும்? : இந்த கேள்விக்கு ஒரு நல்ல பதிலை வைத்திருப்பவர்கள் எந்த கஷ்டத்தையும் எளிதாகத் தாங்கி விடுகிறார்கள்.

நான் வாழ்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றும், தாங்கமுடியாத துன்பத்தைத் நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைப்பவர்கள்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்திருப்பவர்கள் வாழ்வின் துன்பங்களை எளிதாக கடந்து விடுகிறார்கள்.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொகுப்பு – மகிழ்மதி

Comments (0)
Add Comment