டான் – பெற்றோரைக் கொண்டாட வந்தவன்!

’டான்’ என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த படம் தான் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அமிதாப்பின் படத்தையே ’ரீபூட்’ செய்து இரண்டு பாகங்களைத் தந்திருக்கிறது பர்ஹான் அக்தர் – ஷாரூக்கான் கூட்டணி.

இதற்கு நடுவே நாகார்ஜுனாவை வைத்து ‘டான்’ என்ற படத்தைத் தந்திருந்தார் ராகவா லாரன்ஸ். இவை அனைத்துமே ‘கேங்ஸ்டர்’ பின்னணி கொண்ட கதைகள்.

ஆனால், ‘டான்’ என்ற பெயரில் கல்லூரியைக் களத்தையும் பெற்றோரின் மனத்தையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி. அவர் சொல்வதை ரசிகர்கள் பொறுமையாக கேட்க வாகாக, சிவகார்த்திகேயன் எனும் நாயகனும் கிடைத்திருக்கிறார்.

இவ்விரண்டும் உடனடி வசூலுக்கு ‘கியாரண்டி’ என்பதே ‘டான்’ என்று நம் மனதில் தென்படுகின்றன.

புதிய கதையல்ல..!

தந்தை கணேசன் (சமுத்திரக்கனி) தன் விருப்பத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்று நம்புகிறவர் மகன் சக்ரவர்த்தி (சிவகார்த்திகேயன்). அதற்கேற்ப, அவரும் சக்கரவர்த்தியை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்.

கல்லூரியில் டீன் பூமிநாதனை (எஸ்.ஜே.சூர்யா) எதிர்த்து எவரும் சிறு துரும்பையும் கிள்ளிப்போட முடியாது என்பதே நிலைமை. இறுதியாண்டை நெருங்குகையில் இந்நிலையை தலைகீழாக மாற்றுகிறார் சக்ரவர்த்தி.

இதனால், ஓராண்டுக்கு வெளிநாட்டு கல்லூரியொன்றில் பணியாற்ற வேண்டிய சூழலை எதிர்கொள்கிறார் பூமிநாதன்.

மீண்டும் அவர் அக்கல்லூரிக்கு திரும்பிய பிறகு சக்ரவர்த்தியை என்ன பாடு படுத்துகிறார், பதிலுக்கு சக்ரவர்த்தி என்னவெல்லாம் செய்கிறார் என்பதே மீதிக் கதை. இதுவே, இது ரொம்பவும் புதிய கதையல்ல என்பதைப் புடம் போட்டு விளக்கிவிடும்.

முழுக்க ஒரு கல்லூரி பேராசிரியருக்கும் சாதாரண மாணவனுக்கும் இடையிலான ‘டக் ஆஃப் வார்’ தான் படம் முழுக்க நிறைந்திருக்கிறது. இதனிடையே தந்தையைச் சரிவரப் புரிந்துகொள்ளாத மகன் குறித்த ஆற்றாமையைப் பொதித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

அது ஆங்காங்கே திரைக்கதையில் வெளிப்படாமல், மொத்தமாக கிளைமேக்ஸில் மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையான ‘டான்’!

இக்கதையில் ‘டான்’ ஆக இருந்திருக்க வேண்டியவர் சமுத்திரக்கனி. ஆனால், அவரது பிம்பத்தை கடைசியில்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் முன்பாதியில் தேவைக்கும் குறைவாகவே அவருக்கு இடம் தரப்பட்டிருக்கிறது.

பெரும்பகுதி கதை ஆசிரியர்களின் கண்டிப்பைப் புரிந்துகொள்ளாத மாணவர்கள் என்பதாகவே தோற்றமளிக்கிறது. அதைத் தாண்டிச் சென்று தந்தை பற்றி மகன் புரிந்துகொண்டது என்னவென்று சொல்வதற்குள் கொட்டாவிகள் குவிகின்றன.

இதனால், சக்ரவர்த்தியிடம் தந்தை பற்றிய உண்மைகளை தாய் சொல்லும் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாகத் தெரிகிறது.

படம் முழுக்க ‘டான்’ என்ற வார்த்தை கிண்டலாகவே பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப சிவகார்த்திகேயன் ஆங்காங்கே தன்னைத்தானே கிண்டலடித்து அவ்வார்த்தையை ‘ஸ்பூஃப்’ ஆக மாற்ற முயற்சித்திருக்கிறார்.

அதே வேலையை எஸ்.ஜே.சூர்யாவும் செய்து மிகப்பெரிய அளவில் ‘ஸ்கோர்’ செய்திருக்கிறார்.

வெறுமனே கேலி ஜாலியாக கூத்தடிப்பது மட்டுமே பள்ளி கல்லூரி வாழ்வாக அமைந்துவிடக் கூடாது என்பதோடு, பெற்றோர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடுங்கள் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது ‘டான்’.

ஒரு பொழுதுபோக்கு சித்திரத்தில் இதனை உரக்கச் சொல்லத் துணிந்த சிவகார்த்திகேயன் உண்மையில் ’டான்’ தான்.

காரணம், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல மெசேஜ் சொல்ல முயற்சிக்கப் பெரும் தைரியம் வேண்டும்.

பார்த்த ஞாபகம் இல்லையோ!

ஏற்கனவே ‘எம்டன் மகன்’, ‘திருடன் போலீஸ்’ உட்பட சில படங்களில் பார்த்த தந்தை – மகன் பாசம்தான் ‘டான்’ கதைக்கரு.

ஆனால் ‘பிடித்ததை மாணவர்கள் படிக்க வேண்டும்’, ’கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்றால் அட்ராசிட்டியில் ஈடுபடுபவர்கள்’, ‘கல்லூரியில் ஒழுங்கு கட்டுப்பாட்டை தளர்த்தினால் மாணவர்கள் பெரியளவில் சாதிப்பார்கள்’ என்று சில நியதிகளுக்குப் பின்னால் திரைக்கதை சுற்றுவதால் முக்கியமான விஷயம் கோட்டை விடப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக, இரண்டாம் பாதி திரைக்கதை கடந்த பத்தாண்டுகளில் வந்த அரை டஜன் திரைப்படங்களை நினைவூட்டி ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்று நம்மிடம் கேள்வியை எழுப்புகிறது.

வெறுமனே காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன், பஞ்ச் டயலாக் என்பதோடு நின்றுவிடாமல் அழுது கதறி நடித்து தானும் ஒரு ‘மாஸ் ஆக்டர்’ என்று முதல் வரிசை ரசிகனின் வாயால் சொல்ல வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் அவருக்கு இணையாக கைத்தட்டல்களையும் ஆரவாரத்தையும் பெற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

நாயகனை ஏன் காதலிக்கிறோம் என்று தெரியாத கோமாளி சிண்ட்ரல்லா’வாக இல்லாமல், நாயகி பிரியங்கா அருள்மோகனுக்கு நல்லதொரு பாத்திரம் கிடைத்திருக்கிறது.

வசனக் காட்சிகளில் கொஞ்சம் மெச்சூர்டாக உணர வைப்பவர், பாடல் காட்சிகளில் சிவகார்த்திகேயனோடு ஆடும்போது மட்டும் ‘ஜோடி நம்பர் 1’ சீனியர் வெர்சஸ் ஜூனியர் என்பது போலத் தோன்றக் காரணம் என்னவோ?!

சமுத்திரக்கனிக்கு இன்னும் கொஞ்சம் இடம் தந்திருக்கலாமோ என்றளவுக்கு இருக்கிறது ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’.

சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் ஆர்ஜே விஜய், பாலசரவணன், சிவாங்கி மற்றும் சக மாணவராக வரும் ராஜு, பெருசுவாக வரும் சூரி, நாடக நடிகராக வரும் சிங்கம்புலி, ஆசிரியர்களாக வரும் முனீஸ்காந்த், காளி வெங்கட் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான முக்கியத்துவத்தை நிரூபித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயனுக்குப் பிறகு இப்படத்திற்குப் பார்வையாளர்களை அதிகரிக்கும் இன்னொரு காரணி இசையமைப்பாளர் அனிருத்.

’பே’, ‘ஜலபுலஜங்கு’, ‘பிரைவேட் பார்ட்டி’ பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில் சிவகார்த்திகேயன் அண்ட் கோ நடனமாடும் ‘காலேஜ் கல்ச்சுரல்ஸ்’ பாடல் தொகுப்பை அற்புதமாகத் தந்திருக்கிறார்.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, காட்சிகளுக்கேற்ற உணர்வை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.

கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவு பெரும்பாலான இடங்களில் கலர்புல்லாகவும் மிகப்பிரமாண்டமாகவும் எண்ண வைக்கிறது.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் சில காட்சிகளை தூக்கி கடாசுவதற்கு தயங்கியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.

அதையும் மீறி, சூரியும் சமுத்திரக்கனியும் சிவகார்த்திகேயனின் தந்தையாக கல்லூரிக்குள் நுழையும் காட்சியில் கலக்கியிருப்பதற்கு ஒரு பூங்கொத்தை தனியாகத் தர வேண்டும்.

போலவே பிரபுதேவாவின் கொரியோகிராபியை பிரதியெடுத்தது போலவே ஒவ்வொரு பாடலையும் நுணுக்கமாகச் செதுக்கியிருக்கும் 4 டான்ஸ் மாஸ்டர்களுக்கும் தனித்தனி பாராட்டுகள்!

படத்தைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்தால் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியைப் பாராட்டித் தீர்க்கவே தோன்றும். ஆனால், இருக்கையை விட்டு எழாமல் சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் பார்த்தேயாக வேண்டிய கட்டாயம் நேரும்போது, இயக்குனர் எந்த இலக்கை நோக்கி நம்மை அழைத்துப் போகிறார் என்ற கேள்வி பெரிதாகிறது.

பலமும் பலவீனமும்..!

இத்திரைப்படத்தின் பலமும் பலவீனமுமாக இருப்பது திரைக்கதை மட்டுமே. முதல் பாதியில் வகுப்பறையையே காட்டாமல் கல்லூரி வாழ்க்கையை காட்டினாலும், அக்காட்சிகளில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் நகைச்சுவை சலிப்படையாமல் காப்பாற்றுகிறது.

பின்பாதியில், நாயகனின் லட்சியத் தேடல், குறும்படம் எடுப்பது எப்படி என்று திரைக்கதை வளைந்து நெளியும்போது நாமும் சோர்வடைகிறோம்.

அதுவும் எஸ்.ஜே.சூர்யா முன்னால் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை நீட்டியபிறகு உருவான களேபர உணர்வைத் தக்கவைக்காமல் ‘அப்பா செண்டிமெண்ட்’ மட்டும் தனித்தீவாக தெரிவது படத்தின் மைனஸ்களில் ஒன்று.

இதனால், எந்த இளைஞர்கள் அப்பகுதியை பார்த்து ரசிக்க வேண்டுமென்று இயக்குனர் எதிர்பார்க்கிறாரோ அது நடவாமல் போகிறது.

குறிப்பாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ பாணியில் மிக சீரியசாக நிகழ்கால கதையுடன் பிளாஷ்பேக்கை சொல்லும் உத்தி இறுதியில் எதிர்பார்த்த அளவுக்கு நகைச்சுவையை உருவாக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மற்றபடி பிரியங்காவுக்கு சிவகார்த்திகேயன் மீது மீண்டும் காதல் பிறப்பது, இருவருக்கும் இடையே பிரிவு வர சமுத்திரக்கனி காரணமாக இருப்பது போன்ற காட்சிகள் கொஞ்சம் ‘ப்ரெஷ்’ஷாக இருக்கின்றன.

ஏற்கனவே பார்த்த உணர்வைத் தந்தாலும் இறுதி பதினைந்து நிமிடங்கள் நம்மை கண்ணீரில் நனைய வைத்திருப்பதே ‘டான்’ பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி.

வெறுமனே உருவ கேலி, பெண்கள் மற்றும் டாஸ்மாக் பற்றிய கமெண்ட்கள், மாணவர்களின் தேவையற்ற பந்தாவை முன்னிலைப்படுத்த வாய்ப்பிருந்தும், அவற்றைத் தவிர்த்து குடும்பத்துடன் ரசிக்கும் ஒரு ‘யு’ சான்றிதழ் படத்தை தந்திருக்கிறது ‘டான்’ குழு.

இன்றைய சூழலில், இப்படியொரு மெனக்கெடலுக்கு தனியாக ‘வந்தனம்’ சொல்ல வேண்டியிருக்கிறது படத்தில் நிறைந்திருக்கும் பிடிக்காத பல விஷயங்களை மீறி..!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment