நடிகா் திலகம் சிவாஜிகணேசன் பெருமிதம்
அபிபுல்லா ரோடில் ஓர் அழகான கலையரங்கம்.
“25 வருஷங்களுக்கு முன்னாலே இந்த இடம் காடாக இருந்தது. நடிகர் சங்கத்துக்காக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
1957 ஆம் வருஷம் எம்.ஜி.ஆர், சிவாஜி, பாலையா – இவங்க மூணு பேரும் தான் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இந்த இடத்தை வாங்கினாங்க” என்று சொன்னார் பழம் பெரும் நடிகர் சிவதாணு.
“சிவாஜி தலைவராக வந்த பிறகு, கோயம்புத்தூர்லே ‘தங்கப் பதக்கம்’ நாடகம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரி. ஸ்டார் நைட் புரொக்ராமெல்லாம் வெச்சு ஒரு லட்ச ரூபாய் வசூல் பண்ணினோம்.
அதுக்குப் பிறகு பெங்களூர்லே ஒரு லட்ச ரூபாய் கிடைச்சது. அந்த ரெண்டு லட்சம் ரூபாயை மூலதனமாக வைச்சுத் தான் இந்த நடிகர் சங்க டிரஸ்டை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்றார் நடிகர் சங்கக் காரியதரிசியான மேஜர் சுந்தர் ராஜன்.
“ஆரம்பத்திலிருந்தே நடிகர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர் நமது முதல்வர் எம்.ஜி.ஆர் தான். தென்னிந்திய துணை நடிகர் சங்கம்னு இருந்ததை ‘நடிகர் சங்கம்’ என்று மாத்தினவரே அவர் தான்.
சங்கம் ஆரம்பிச்ச நாளிலிருந்து இன்னிக்கு வரைக்கும் அவர் எல்லா உதவிகளையும் செஞ்சுக்கிட்டு வர்றார்.
நாங்கள் டிரஸ்டை அமைத்த பிறகு ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி செஞ்சிருக்கார்.
இந்த ஆண்டு நடிகர் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டாக இருப்பதும், கலை உலகைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருப்பதும், கலை அரங்கை அவர் திறக்க இசைந்திருப்பதும் நாங்கள் பெற்ற பெருமை” என்று பூரிக்கிறார்கள் சிவாஜியும், மேஜரும்.
நன்றி : 19.08.1979 அன்று வெளியான ‘ஆனந்த விகடன்’ இதழிலிருந்து ஒரு பகுதி…