பாற்கடல் அமுதமாக தயாராகும் கருப்பட்டி!

மிக அற்புதமான தகவல்களும் அனுபவங்களும் பேஸ்புக் பக்கங்களில் கிடைக்கின்றன. பனை மரங்கள், கருப்பட்டி தயாரிப்பு, கலப்பட கருப்பட்டி பற்றிய பயண அனுபவத்தை  ஸ்டாலின் பாலுசாமி என்பவர் எழுதியிருக்கிறார்.

அதற்கு பனை வாழ்வு என்று தலைப்பிட்டுள்ளார்.

உங்களுக்காக இதோ அந்த பதிவு…

பனை மரங்கள் பார்த்தாலே மனதுக்குள் இனம்புரியாத ஒரு உணர்வு தோன்றுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஊத்தங்கரைக்கு அருகில் ஒரு கிராமத்திற்கு முத்து அழைத்து சென்றார்.

அதிகாலை சூரிய உதயம் பார்த்து விட்டு நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றோம். அவர்தான் எங்களை பனை தோப்புக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தார்கள்.

எதுவும் சாப்பிடாமல் போகக்கூடாது என்று கருப்பட்டி காபி கொடுத்தார்கள். வெறும் கருப்பட்டி மட்டும் போட்டு காய்ச்சி கொடுத்தார்கள்.

சூடான பதநீர் போல அவ்வளவு ருசியாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்த இரு பிள்ளைகளும் குளித்துவிட்டு பள்ளிக்கு தயாரானார்கள்.

என்னோட அண்ணன் பசங்களான ஆதவன், அனன்யா நினைவுதான் வந்தது.

அவர்கள் வீட்டில் நாட்டுக்கோழி, சண்டை சேவல்கள் எல்லாம் வளர்த்து வருகிறார்கள். பார்த்துவிட்டு பனங்காட்டிற்கு அழைத்துச் சென்றார் அந்த நண்பரும் அவரின் அப்பாவும் உடன் வந்தார்கள்.

மாந்தோப்பிற்குள் முழுக்க பனை மரங்கள் நிறைந்து இருந்தது. செல்லும் வழியில் அடிபட்ட புறா ஒன்றை ராகுல் கையேந்தி கொள்ள அதனுடன் தான் சென்று அந்த பனையேறும் குடும்பத்தினரை பார்த்தோம்.

நல்ல செவக்காடு. ஆடு, மாடு, புறா, கோழி, நாய் என அத்தனை ஜீவராசிகளும் வரவேற்றன.

பனை மட்டையில் சீவி பதநீர் இறக்குவது நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த கருணாகரன் எனும் பனையேறி அண்ணா பதநீர் குறையும் காலங்களில் பனங்காய்களில் இருந்து சீவிவிட்டு பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சுவார்கள் அது இன்னும் ருசியானதாக இருக்கும்.

இன்னும் பதினைந்து நாள் கழித்துவாருங்கள் என்று சொல்லிவிட்டு அப்போது இறக்கிய பதநீர் குடிக்க கொடுத்தார்கள். அத்தனை குளிர்ச்சி ருசி வயிறும் மனசும் நிறைய குடித்து முடித்தோம்.

அவர்களுடன் காடு முழுக்க சுற்றி அலைந்தோம், ஒவ்வொரு ஊரிலும் பனை ஏறுவது மாறிக் கொண்டே இருக்கிறது.

அதற்கு பயன்படுத்தும் பொருட்கள், பாளை சீவும் கத்தி, ஏணி, சுண்ணாம்பு சேர்க்கும் அளவு, பதநீர் காய்ச்சும் பாத்திரம், தரையில் அமைந்து இருக்கும் மண் அடுப்பு,

கொஞ்சம் சந்தேகக்  கண்கொண்டு துவக்கத்தில் பேசினாலும் பின் கருப்பட்டி காய்ச்சும் அத்தனை முறைகளையும் விளக்கிச் சொல்லிய பாட்டி.

உண்மையில் அவர்களை விட்டுவர மனம் இல்லை.  பின் கருப்பட்டி எடுத்து வந்து காட்டினார்கள். பாற்கடலில் இருந்து வந்த அமுதம் போலவே என் கண்ணிற்கு பட்டது.

பெரிய வட்டு ஒன்றே அரை கிலோவுக்குக்கூட இருக்கும். வாசனையும் ருசியும் ஆளை மயக்குகின்றது.

உற்பத்தி செய்த கருப்பட்டியை அருகில் இருக்கும் சொசைட்டியில் மொத்தமாக விற்பனைக்குக் கொடுத்துவிடுகிறார்கள்.

அவர்களின் அப்பா அந்தப் பகுதியில் மிகவும் அறியப்பட்ட பனைமரத்துக்காரர்.

இந்த கருணாகரன் அய்யாவும் வெளியூர் சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் இந்த பனை தொழிலுக்கு வந்த கதையை சொல்லி கொண்டு இருந்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் விளையும் கருப்பட்டி வாங்கிக்கொண்டு போய் தூத்துக்குடி, திருச்செந்தூர் கலப்படம் செய்யும் பாக்டரியில் கொடுத்து போலி கருப்பட்டி செய்கிறார்கள்.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் உடன்குடி  பகுதியில் தூத்துக்குடி கலெக்டர் அவர்களின் ஆணையின்படி மூன்று கலப்பட ஆலைகள் மூடி  சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறுதல் தகவல் சொன்னது கன்னிராஜபுரத்தில் இருந்து எங்களுக்கு கருப்பட்டி கொடுக்கும் மாரி அண்ணன்தான்.

மேலும் கலப்பட கருப்பட்டி உற்பத்தி செய்வோருக்கு லட்ச ரூபாய் அபராதம் என்று எச்சரித்துள்ளார்கள்.

இதுமாதிரி முன்னாடியே பல முறை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவர்களின் மனசாட்சிதான் முக்கியம்னே, அது மட்டும்தான் ஒரே தீர்வு என்று சொன்னார்.

-தொகுப்பு: பா.மகிழ்மதி

Comments (0)
Add Comment