பிறமொழிக் கவிதைகளை ஏன் மொழிபெயர்க்கவேண்டும்?

நூல் அறிமுகம்:

சிங்கப்பூரில் வசிக்கும் மஹேஷ்குமார், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்டவர்.

ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம், மாரத்தான் ஓட்டம், தன்னார்வ தொண்டூழியம் என பல திசைகளில் தன் சிறகுகளை விரித்துவருகிறார்.

ஆங்கிலத்திலும் கவிதை எழுதிவருகிற நூலாசிரியர், உலகப் புகழ்பெற்ற பன்மொழிக் கவிஞர்களின் மிகச்சிறந்த கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்தி, உருது, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள ‘வண்ணம் தேடும் சொற்கள்’ நூலின் முன்னுரையில் ஏன் தமிழில் கவிதைகளை மொழிபெயர்க்கவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார்:

“பல காலமாக எத்தனையோ முறைகள் எத்தனையோ பேர் கேட்டுவிட்ட பலவிதங்களில் பதிலளிக்கப்பட்டுவிட்ட அதே கேள்விதான்.

எதற்காக பிறமொழி இலக்கியங்களை – குறிப்பாக கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டும்? இதற்கான என் உடனடி பதில் ரசனை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “என்னால் இயன்றவரை அம்மொழிகளில் எனக்குள் நெருக்கம் அனுமதித்த அளவில் மூல கவிதைகளில் கருத்தும் அழகும் மாறுபடாமல் மொழிபெயர்க்க முயற்சி செய்திருக்கிறேன்.

ஏதேனும் பிழைகளோ, பொருட்சிதைவோ இருந்தால் அது என் வாசிப்பின் புரிதலின் குறைபாடாகவே இருக்கும் சாத்தியம் அதிகம்” என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுகிறார்.

பாலிவுட் உலகில் பிரபலமான திரைப்பாடல் ஆசிரியராக இருக்கிற குல்சாரின் கவிதை முதல் கவிதையாக இடம்பெற்றிருக்கிறது.

புரிதல்!
– குல்சார்

கிழிசலைக் கொஞ்சம்
தைத்துவிட்டுத்தான்
பாருங்களேன்
மீண்டும் புதிதாகத் தெரியும்
வாழ்க்கைதான்

இன்று நிழலிடம் கேட்டேவிட்டேன்
என்னுடனேயே ஏன் வருகிறாய்?
அதுவும் முறுவலித்தபடி சொன்னது
வேறு யார் இருக்கிறார்… என்னுடனே

எவ்வளவுதான் பற்றிக்கொண்டாலும்
வழுக்கவே சொல்கிறது
இது காலம் ஐயா
மாறவே செய்கிறது

எதுவும் நிலையாக
இருப்பதில்லை
எதுவுமே…
ஏதாவது நிலையாக
இருக்கிறது என்றால்
அது நானேதான்
நொடிக்கு நொடி
மாறிக்கொண்டே இருக்கிறேன்

உங்களுக்குப் பிறகு
நானும் உணர்கிறேன்
வாழ்வது நமக்கு கடினமும் இல்லை
இறப்பது ஒரு புதிராகவும் இல்லை

ஆமாம்… எல்லாம் தெரிகிறது
ஆனால் எங்கே புரிகிறது?

பீகாரைச் சேர்ந்த ராம்தாரி சிங் தின்கர் கவிதை வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் நம்மூர் பாரதியைப் போல் தேசப்பற்றை வளர்க்கும் வீர ரசம் சொட்டும் கவிதைகளை எழுதியவர்.

காற்றோட்டம்!
– ராம்தாரி சிங் தின்கர்

நான்தான் சாளரம்
என் வழியேதான்
உலகிலுள்ள ஒவ்வொன்றும் வெளியே பார்க்கிறது

ஆனால்
என்னைத் தீண்டியபடி செல்லும்
வாழ்க்கையின் முன்புதான்
இவ்வுலகம் தலைகுனிந்து நிற்கிறது
என்னிடம் அல்ல

நடப்பவை… வெகு தொலைவில்
நடக்க இருப்பவை… வெகு அருகில்

யாரை எதை அறியேன்? யாரை எதை அறிவேன்?
மற்றவர்களும் மற்றவைகளும்
சரி… கவிஞன்? அவன் அவனே அல்ல

வண்ணம் தேடும் சொற்கள்:
மஹேஷ்குமார்
வெளியீடு: சிராங்கூன் டைம்ஸ்,
சிங்கப்பூர்.
விலை: ரூ.100

***

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment