மாணவர்களிடையே முளைத்திருக்கும் சாதிய வன்மங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

பழையன கழிதல் என்று கழித்து விட முடியாது தான்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது பெரும்பாலும் வகுப்பில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனின் சாதியோ, அல்லது ஆசிரியரின் சாதியோ தெரிந்து கொண்டதில்லை. தெரிந்து கொள்ள விரும்பியதும் இல்லை.
இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

அதற்கு முன்பு திராவிட இயக்கம் தழைப்பதற்கு முன்பு வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய குருகுலத்தில் சாதி வேறுபாடு பார்த்து உணவு பரிமாறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பெரியார் வரை போய்த்தட்டிக் கேட்டுப் பெரும் பிரச்சினை ஆகியும், சம்பந்தி என்பதை வ.வே.சு. ஐயர் ஒப்புக் கொள்ளவே இல்லை.

இது மாதிரி பல கல்விக்கூடங்களில் பாகுபாடுகள் இருந்தன என்றாலும், திராவிட இயக்கங்கள் எழுச்சி பெற்ற பிறகு, சாதியப் பெயரோடு ஒட்டுவது நின்ற பிறகு பள்ளிகளில் சாதிய உணர்வின் தாக்கமும் குறைந்தது.

சாதி என்பது தேவையான அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இந்தக் காலகட்டத்தில் இல்லை.

இவ்வளவுக்கும் மதம் அல்லது சாதியத் தலைவர்கள் பள்ளிகளை நடத்தியும் கூட, அங்கு சாதியப் பாரபட்சங்கள் இல்லை.

ஆனால் தற்போது சமச்சீரான மனநிலை இருக்க வேண்டிய பள்ளிகளில் சாதியப் பாரபட்சமும், வன்மமும் துளிர்த்துக் கொண்டிருக்கின்றன.

தனியாகத் தங்களைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளக் கையில் வண்ணக் கயிறுகளை அணிகிறார்கள் மாணவர்கள்; மாணவிகளும் இதே மாதிரி.

இந்தக் கயிறுகள் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது சில ஆண்டுகளாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி நிர்வாகங்கள் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதை ஒட்டி மாணவர்களுக்குள் மோதல்களும் நடந்திருக்கின்றன. கல்லூரிகளிலும் இதே மனநிலை களையைப் போல வளர்ந்திருக்கிறது. அங்கும் மோதல்கள் நடந்து செய்திகளாகித் தலை குனிய வைத்திருக்கின்றன.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்லும் போது கைகளில் ஆயுதங்களை ஏந்திய காட்சிகளைப் பார்த்திருக்கிறோம்.
இப்போதும் அவை நடந்து கொண்டு தானிருக்கின்றன.

சமீபத்தில் தென் தமிழகத்தில் பள்ளியில் நடந்த சாதிய மோதல்கள் ஒரு மாணவனின் உயிரைப் போக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு மோதியிருக்கிறார்கள் மாணவர்கள்.

பள்ளிகளில் படிக்கிற மாணவர்களிடம் இந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்தது யார்? இளம் வயதிலேயே அவர்களைக் குற்றவாளிகள் ஆக்கியது யார்? அதிலும் கொரோனாக் காலத்தில் – கொரோனாத் தொற்றை விட, அபாயகரமாக வளர்ந்து தழைத்திருக்கிறது சாதியம்!

தன்னுடைய பெயரோடு சாதியப் பெயரை இணைப்பது கேவலம் என்றிருந்த நிலை மாறி, பெண்களும் கூடச் சாதிய ஒட்டைத் தங்கள் பெயருடன் இணைத்துப் போட்டுக் கொள்வதைப் பெருமையாக நினைக்கும் அளவுக்கு இருக்கிறது தற்போதைய சூழ்நிலை.

திராவிட இயக்கங்கள் தழைத்த மண் தான். எத்தனையோ தலைவர்கள் சாதியப் பாகுபாட்டினால் வரும் கேடுகளைப் பற்றிப் பேசியாயிற்று. திரைப்படங்களும் கூட எடுத்தாயிற்று.

ஆனாலும் இன்னமும் சாதிய உணர்வும், தற்பெருமையும், மாணவர்கள் மத்தியில் பெருகியிருக்கிறது என்றால், யாரைத் தனித்துக் குற்றம் சாட்டுவது? மாணவர்களையா? பெற்றோர்களையா? ஆசிரியர்களையா? வெளியே உள்ள சமூகச் சூழலையா?
எப்படிக் களைவது இந்தப் பெருந்தொற்றை?

சென்னை மாதிரியான பெரு நகரத்தில் வழக்கமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டபோது, மனதில் முள்ளைப் போலக் குத்தியது.

காய்ச்சலுக்கான வைத்தியத்திற்காக அவரிடம் வந்திருந்த பதினைந்து வயதான ஒரு மாணவன், ஊசியைச் செலுத்துவதற்கு முன்பு அவரிடம் தர்மசங்கடமான அந்தக் கேள்வியை மெதுவாகக் கேட்டிருக்கிறான்.

“நீங்க என்ன சாதி டாக்டர்?”

*
-யூகி

Comments (0)
Add Comment