லண்டனில் சாரல்நாடனின் நூல் வெளியீடு!

சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவல் வெளியீடு, லண்டனில் அண்மையில் விம்பத்தின் ஆதரவில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

விமர்சகர் மு.நித்தியானந்தனிடமிருந்து இந்நாவலின் சிறப்புப் பிரதியை ‘நூலகம்’ வலைத்தளத்தின் நிறுவனர் இ.பத்மநாப ஐயர் பெற்றுக்கொண்டார்.

‘கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சை’, மு.சிவலிங்கத்தின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ ஆகிய சிறந்த மலையக நூல் வரிசையில் சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ நாவலும் வந்து சேர்கிறது.

வீரகேசரியில் வெளிவந்த இத்தொடர் நாவலை நூலாக வெளியிடும் முயற்சியில் சாரல்நாடன் அவர்கள் முன்னுரையினையையும் எழுதித் தயார்நிலையில் இருந்தபோது, அவர் சுகவீனமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்தமை துரதிர்ஷ்டமானது.

அவர் மறைந்து எட்டு ஆண்டுகளின் பின், அவரது நாவல் பிரதியைப் பேணி வைத்திருந்த திருமதி. புஷ்பா சாரல்நாடன் அவர்களுக்கும், நூலை பதிப்பித்து நூலாக வெளிக்கொண்டுவந்த திரு.எச்.எச்.விக்ரமசிங்க அவர்களுக்கும் மலையகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றினால் நாடு முடங்கிப்போன நிலையில், நிலைமைகள் சீராகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியபின் லண்டனில் விம்பம் நடத்தும் முதல் விழாவில், சாரல்நாடனின் நாவல் வெளியிடப்பெறுவது மகிழ்ச்சியான நல்ல ஆரம்பமாகும்’ என்று நாவல் வெளியீட்டினை நெறிப்படுத்திய திருமதி. மீனாள் நித்தியானந்தன் தெரிவித்தார்.

‘தொழிற்சங்கத்தைக் கட்டி எழுப்பும் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் உண்மைச் சம்பவத்தை வைத்து சாரல்நாடன் எழுதிய இந்நாவல் சமூக, வர்க்க, இன ரீதியில் ஒடுக்கப்பட்ட மலையைக் சமூகத்தின் போராட்ட வரலாற்றைப் பேசுகிறது.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கோரிக்கையை முதல்பட்சமாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனில் அது மலையக மக்களின் கோரிக்கையேயாகும்.

இந்நாவலுக்கு மு.நித்தியானந்தன் எழுதியுள்ள முன்னுரை இந்நாவலுக்குள் நுழைவதற்கான சிறந்த ஆய்வுக் கையேடாகத் திகழ்கிறது.

நாற்பது பக்கங்கள் கொண்ட இந்த முன்னுரை இந்நூலின் கனதியைக் கூட்டியுள்ளது.

ஒரு சிறந்த கலைப்படத்தைத் தயாரிப்பதற்கான சிறந்த கதையினை, சம்பவங்களை, போராட்ட நிகழ்வுகளைக் கொண்ட நாவலாக சித்திரிப்பதில் சாரல்நாடன் வெற்றி கண்டிருக்கிறார்’ என்று இந்நாவல் பற்றிய விமர்சன உரையாற்றிய திரு. கோகுலரூபன் இந்த வெளியீட்டரங்கில் தெரிவித்தார்.

‘வானம் சிவந்த நாட்கள்’ ஒரு நாவல் என்பதனைவிட நெடுங்கதை என்பதே பொருத்தமாக இருக்கும்.

மலையகத்தில் தொழிற்சங்கத்தின் உருவாக்கம் நடைபெற்ற காலத்தில் துரைத் தனத்தின் கொடுமையை எதிர்த்து போப் துரையின் கொலையில் முடிந்த ஒரு போராட்ட யுகத்தை சாரல்நாடன் இந்த நாவலில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாற்பதுகளில் மலையகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது போலீசார் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக எவ்வாறு நடந்து கொண்டிருந்தனர் என்பதற்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் தோரதெனிய அளிக்கும் சாட்சியத்தை இந்நூல் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

ஒரு படைப்பாளியின் மறைவிற்குப்பின் அவரது ஆக்கங்களை கவனமாகப் பேணிப் பாதுகாக்காமையால் பல படைப்புகளை நாம் இழந்திருக்கிறோம்.

மஹாகவியின் மறைவிற்குப்பின் அவரது துணைவியார் பத்மாசினி அவர்கள், கணவரின் அனைத்து எழுத்துகளையும் பேணி ப்பாதுகாத்தமை பாராட்டவேண்டிய செயற்பாடாகும்.

அதே போன்று புஷ்பா சாரல்நாடன் அவர்களும் தனது கணவரின் எழுத்துகளைப் பாதுகாத்து நூலாகும் முயற்சியில் ஈடுபாடுகாட்டியதற்கும், அவருக்குக் கைகொடுத்து உதவி இந்நூலைப் பதிப்பித்த விக்ரமசிங்க அவர்களின் அயராத செயற்பாட்டிற்கும் இலக்கிய உலகம் நன்றிகூறுகிறது’ என்று ‘பனிமலர்’ ஆசிரியர் நா.சபேசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

‘மலையகத்தின் தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றை மிகக்கச்சிதமாக, அலுப்புத் தட்டாமல், இலகுவான மொழியில் நாவலாக வடிப்பதில் சாரல்நாடன் வெற்றி கண்டிருக்கிறார்.

தொழிற்சங்கத் தலைமையை ஹிட்லரின் தலைமையோடு ஒப்பிட்டும், துரைமார்களின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி அதிகார வர்க்கம் பொய்ப்பிரசாரம் நடத்திய வேளையில், தொழிலாளர் வர்க்கம் அந்த அடக்குமுறையை எதிர்த்து மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் நியாயமானவையேயாகும்.

போப் துரை கொலை வழக்கின் தீர்ப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீராசாமி, வேலாயுதம் ஆகிய போராளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இரண்டு படுகொலைகளுக்குச் சமமானதாகும்.

இந்தப்போராளிகளின் போராட்ட ஆக்ரோஷத்தை ஓவியர் கே.கே.ராஜா மிக அற்புதமாக இந்நாவலின் முகப்பு ஓவியத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வெறும் தொழிற்சங்கப் போராட்டம் என்ற எல்லைக்குள் இல்லாமல், அரசியல் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தையே தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்கவேண்டும்’ என்று பெண்ணியச் செயற்பாட்டாளர் பாரதி சிவராஜா தெரிவித்தார்.

தகவல்: எச்.எச்.விக்கிரமசிங்க, கொழும்பு

Comments (0)
Add Comment