தெவிட்டாத கேரளப் பயண அனுபவங்கள்!

நூல் வாசிப்பு:

விருத்தாசலத்தில் பிறந்த கவிஞர் திலகா என்கிற திருமதி திலகவதி, சென்னை தொலைபேசியின் மொபைல் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பணிபுரிகிறார்.

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையிலும் தமிழ் மீதான தீராத தாகத்தால் அவ்வப்போது எழுதும் கவிதைகளை இணையதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் இருந்து பணி மாற்றலாகி திருவனந்தபுரத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

அந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு தலைப்பிலும் மிக சுவையாகவும் சுருக்கமாகவும் எழுதியுள்ளார்.

தாய் இணையதள வாசகர்களுக்காக நூலாசிரியர் திலகா எழுதிய பயணக் கட்டுரைகள்.

ஆலப்புழாவும் படகு வீடும்

கேரளத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஆலப்புழையும் ஒன்று. இங்கு சுற்றுலா வருபவர்களை அதிகம் கவர்வது ஆலப்புழையில் இயங்கிவரும் படகு இல்லப் பயணம்.

படகை வீடுபோல அமைத்து, அதில் அனைத்து வசதிகளையும் உருவாக்கியிருப்பார்கள். படகில் பயணிகளை அழைத்துக்கொண்டு நீரில் பயணிக்கவைத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பது ஒருவகையான சுற்றுலா உத்தி.

பொதுமக்கள் மட்டுமில்லாமல், அலுவலகங்களில் நடைபெறும் கான்பரன்ஸ், மீட்டிங் போன்றவற்றையும் இப்படகில் நடத்துவது இங்கு வழக்கமான ஒன்று.

படகுவீட்டில் படுக்கையறை, சமையலறை மற்றும் கழிப்பிட வசதிகளும் இருக்கும். இதில் பயணிப்பது சொல்லமுடியாத மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

படகின் பால்கனியில் மற்றும் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்து நீர்ப்பரப்பையும் அதன் கரையோர நிலப்பரப்பையும் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

நீர்நிலையின் இருபுறங்களிலும் உள்ள கரைகளில் வீடு, மாதாகோயில் என அழகிய கிராமங்கள் அமைந்திருக்கும். அங்கு உள்ளவர்கள் வெளியே வந்துசெல்ல ஒவ்வொரு வீட்டிலும் படகு வைத்திருக்கிறார்கள்.

படகில் பயணிக்கும்போது வீசுகின்ற சில்லென்ற காற்றும் அருகே அமைந்திருக்கும் மரங்களடர்ந்த நிலப்பரப்பும், அல்லி படர்ந்த நீர்ப்பரப்பும் ஒருவித சுகத்தை நமக்குள் விளைவிக்கும்.

பயணம் முடியம் தருவாயிலும் நமக்குத் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

இத்தகைய உணர்வை உணர்த்தும் நான் எழுதிய கவிதை.

பரந்த நீர்ப்பரப்பில்

விரிந்த அல்லிச் செடிகளினூடே!

அடர்ந்த மரங்களுக்கிடையே

நகர்ந்த படகுக்குள்ளே!

மறந்த கவலைகளோடே

துறந்த முனிவர்கள்போலே!

பறக்கும் பறவையாக

விரிக்கும் சிறகைக்கொண்டே!

மிதமான வேகத்தில்

மிதந்து செல்ல!

பயணம் முடிந்த பின்பும் பயணிக்கத் துடிக்கும்

படகு இல்லப் பயணம் பரவசமளிக்கும் பயணம்!

பூவாறு

கேரளத்தின் மிக அழகான ஊர்களின் பூவாறும் ஒன்று. தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. பூவாறின் சிறப்பே ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள ஒரு குட்டித் தீவே.

இந்த தீவுக்கு படகில்தான் செல்லமுடியும். படகில் செல்லும் அந்த வழியைப் பார்த்தால், நமக்கு தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரத்தின் நினைவு வரும்.

முதன்முதலில் நான் பூவாறு சென்றது எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுடன்தான். அதுவொரு ஞாயிற்றுக்கிழமை.

காலையில் ஒரு ஒன்பதரை மணியளவில் வாடைகைக் காரில் அவர்களை அங்குள்ள விடுதியில் இருந்து அழைத்துக்கொண்டு பூவாறு புறப்பட்டோம்.

போகின்ற வழிய கோவளம் கடற்கரை சென்று கடற்மணற்பரப்பில் சிறிது நேரம் நின்று மகிழ்ந்தோம். பிறகு அதனருகில் உள்ள கலங்கரை விளக்கத்திற்குச் சென்றோம்.

அப்போது அங்கு லிப்ட் வசதி எதுவும் செய்துத்தரப்படவில்லை. அனைவரும் படிக்கட்டில் நடந்து உள்ளே தளத்தை அடைந்தோம். அங்கிருந்து உச்சிக்குச் செல்ல ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே ஏறக்கூடிய இரும்பு ஏணி இருக்கிறது.

அதில் ஏறி உச்சிக்குச் செல்ல அங்குள்ள ஊழியர்கள் உதவி செய்கிறார்கள். ஒருவழியாக ஏணியில் ஊறி உச்சியை அடைந்தோம்.

உச்சியில் இருந்து கடற்பரப்பையும், உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களையும் பார்த்து ரசிப்பது மறக்கமுடியாத அனுபவமாக மனதில் தங்கிவிடும்.

அதனைப் பார்த்துமுடித்துவிட்டு வருகின்ற வழியில் உள்ள ஒரு மீன் காட்சியகம் சென்றோம். கண்ணாடித் தொட்டிக்குள் கண்கவர் வண்ண மீன்களை வளர்த்து வருகிறார்கள்.

நீருக்குள் நீந்தி விளையாடும் மீன்களின் அழகே தனிதான்.

கண்களுக்கு புத்துணர்வைத் தரும் காட்சியகம். இதுவரை கண்டிருந்த மீன் காட்சியகங்களில் அதுவே மிகவும் பிடித்த ஒன்றாய் தோன்றியது.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு சிறிதுநேரப் பயணத்திற்குப் பின் அங்கிருந்த ஒரு துறைமுகத்திற்குச் சென்றோம். கடற்கரையில் நிறைய மீன்பிடிப் படகுகளைக் காணமுடிந்தது.

பின்னர் அங்கிருந்து பூவாறு போகும் வழியில் உள்ள ஒரு சிவன்கோவில் சென்று தரிசனம் செய்தோம். அந்தக் கோயில் பிரதான சாலையில் இருந்து பிரிந்து வலதுபுறச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் அமைந்திருந்தது.

அங்கே உலவிய காற்றும் அமைதியும் மனதிற்கு உற்சாகத்தையும் திருப்தியையும் அளித்தன. சில நிமிட நேரங்கள் அங்கேயே அமர்ந்திருந்தோம். ஏகாந்தமான மனநிலை.

மதியம் 1.30 மணியளவில் பூவாறு சென்றடைந்தோம். அங்கிருந்து உணவகத்தில் ரெப்ரஷ் செய்துகொண்டு உணவருந்தினோம். அங்கு தங்குமிட வசதிகள் இருந்தன. அதன் அமைப்பே எழில்மிகுந்ததாக இருந்ததை ரசித்தோம்.

அவரவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்து திருப்தியுடன் சாப்பிட்டோம். சாப்பிட்டக் களைப்பில் அப்படியே கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தோம். மதியம் 3 மணிக்கு படகுசவாரி.

படகில் பயணிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. படகில் ஏறியவுடன் அருகிலுள்ள சிறு தீவிற்குச் செல்லப்போகிறோம் என்றார்கள். பயணத்தைத் தொடங்கினோம்.

வழிநெடுகிலும் இருபுறமும் மரங்களடர்ந்து காணப்பட்டது. அது பார்ப்பதற்கு நம்மூர் பிச்சாவரம் போன்றே காட்சியளித்தது. பயணத்தில் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியையும் புத்துணைர்வையும் உணரமுடிந்தது.

சிறிது நேரத்தில் ஆறு கடலில் கடக்கும் அந்த அழகிய மணற்பரப்புப் பிரதேசம் வந்திருந்தது.

அதுவொரு சிறு அளவிலான மணற்பரப்பே. அங்கு இறங்கிச் சென்று கடல் அலையில் கால் நனைத்து சிறுபிள்ளைகளைப் போல குதூகலமாக விளையாடினோம். அந்தத் தீவில் ஒருசில கடைகளும் இருந்தன.

திலகா

அவற்றில் தின்பண்டங்கள், இளநீர் போன்றவை விற்கப்பட்டன. கடலில் கால்நனைக்கும்போது எல்லோரும் சேர்ந்து நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

புகைப்படக்காரர் உடனே அதன் பிரதியையும் எங்களிடம் வழங்கினார். மகிழ்ச்சியாக இருந்தது. சில மணித்துளி நேரம் தீவில் செலவிட்டோம்.

படகில் கரைக்குத் திரும்பிய நாங்கள், வழியில் வேலியிள் உள்ள சுற்றுலாதலத்தையும் பார்த்துவிட்டு முழுமையான ஒருநாள் பயண அனுபவங்களுடன் வீட்டுக்கு வரும்போது மாலை மணி 7.30.

பூவாறுப் பயணம்

புத்துணர்ச்சியூட்டும் பயணம்!

கோவளம் கடற்கரையும்

கலங்கரை விளக்கமும்

காலத்துக்கும் நினைவில் நிற்கும்!

விழிஞம் துறைமுகமும்

விழிகளைக் கவர்ந்த மீன்காட்சியகமும்

விலகாமல் நிலைத்திருக்கும்!

***

அழகிய அனந்தபுரி (பயண அனுபவம்):
திலகா
வெளியீடு: நந்தினி பதிப்பகம்,
பி27, கோல்டன் ஜூப்ளி அடுக்ககம்,
அண்ணா பிரதான சாலை,
கே.கே.நகர், சென்னை – 78
விலை ரூ. 50

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment