தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது.
அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயலால் தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் மழைத் தூறல் போட ஆரம்பித்தது.
அதிகாலையில் ஒரு சில இடங்களில் கன மழையும், பல பகுதிகளில் லேசாகவும் பெய்தது. விட்டு விட்டு தூறலாக பெய்த மழை காலை 6 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென கன மழையாக பெய்தது.
எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி, கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு, அண்ணாநகர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மேலும் புழல், மதுரவாயல், குன்றத்தூர், மடிப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும் லேசாக மழை பெய்தது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதியிலும் மழை தூறியது.
கோடை வெயிலின் வெப்பம் சென்னை வாசிகளை வீடுகளில் முடக்கி வைத்திருந்த நிலையில் திடீர் மழை குளிர வைத்துள்ளது. குளிர்ந்த காற்றும், மழை தூறலும் இருந்ததால் வெப்பம் தணிந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 மாதமாக வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு கோடை மழை சற்று ஆறுதலாக இருந்தது.
பகல் நேரத்தில் வீசிய அனல் காற்றில் இருந்தும் வெப்ப அலையில் இருந்தும் மக்கள் விடுபட்டனர். தொடர்ந்து மழை தூறிக் கொண்டே இருந்ததோடு வானம் இருண்டும் காணப்பட்டது.
அவ்வப்போது மழை லேசாக தூறிக் கொண்டும், மேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் இருந்தன.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து இன்று தப்பினார்கள்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது விட்டரில் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவீட்டில் கூறி இருப்பதாவது:-
சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
வரும் 13-ம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும். நிலக்காற்று வலுபெறும். இதனால் வெப்பம் அதிகமாகும். எனவே அடுத்த இரு நாட்களுக்கு மழையை சென்னை மக்கள் கொண்டாடுங்கள் .
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 7.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 30 மி.மீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக அடையாற்றில் 10 மிமீ மழையும் பெய்துள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.