பிரபல இயக்குநர் ஜேடி- (ஜெர்ரி) பூமணியுடன் பணியாற்றிய நாட்களை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிலிருந்து…
“நான் பாலுமகேந்திரா சாரிடம் வேலை பார்க்கும்போது வேலை இல்லாத நாட்களில் வேறு சில பணிகளில் ஈடுபடுவதுண்டு. அப்படித்தான் பூமணி சார் கூப்பிட்டார் என்று அவரது project ல் வேலை செய்ததும்.
பூமணி சாருக்கு தூர்தர்ஷனில் அவரது ‘கிராமத்து சலங்கை ‘என்ற script க்கு approval கிடைத்திருந்தது. அதை Media artist அருண் வீரப்பன் தயாரித்தார். அதை ஷூட் பண்ண பூமணி சாருடன் ஒளிப்பதிவாளர் சுந்தர்ஜியும் நானும் ஒரு சின்ன குழுவோடு கோவில்பட்டி போனோம்.
மொத்தமே 10 பேர் தான். (இப்போது எடுக்கும் legend படத்திற்கு தவிர்க்கவே முடியாமல் தினமும் குறைந்தது 160 லிருந்து 200 பேர்!).
கோவில்பட்டியில் ஒரு சின்ன லாட்ஜில் தங்கி, சுற்றியுள்ள நிறைய கிராமங்களில் படம் பிடித்தோம். மொத்தம் 10 எபிஸோடு. மண்ணின் மாறா கலைகள் பற்றி. பூமணி சார் documentaries சாக இருந்தாலும் ஒரு கதையைப்போல எழுதியிருந்தார்.
விளாத்திகுளம் ராஜலட்சுமியின் வில்லுப்பாட்டு பற்றி ஒன்று, தெருக்கூத்து பற்றி, நாதஸ்வர கலைஞர்கள் பற்றி, மொலைப்பாரி பாடல் பாடும் பெண்கள் பற்றி என்று நிறைய மனிதர்களை, வாழ்வை, கலையைப் படம்பிடித்தோம்.
கோவில்பட்டியின் வெயிலில் வெட்கை மிருந்த இரவுகளில், புழுதியில், தீப்பெட்டி தொழிற்சாலைகளில், கோவில் திருவிழாக்களில், எந்த ஒப்பனை பூசிய மனிதர்களுமின்றி, எந்த ஆடம்பரமுமின்றி அந்த படப்பிடிப்புகள் நடந்தன.
ஒரு பாதுகாப்பான கண்ணாடி பெட்டிக்குள், கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது வளர்ந்த எனக்கு, அந்த மனிதர்களில் துயர்மிகு வாழ்வியல் பல கதவுகளைத் திறந்தது. அதோடு பூமணி சாரின் அனுபவங்களும், கதைகளும் எனக்கு புதிய உலகமாக இருந்தது.
டி.டி-2 சேனலில் இரவு 10.30-க்கு அந்த வாழ்வியலை பேசிய கதைகள் எந்த கவனமும் பெறாது காற்றில் கரைந்துபோயிற்று.
கிட்டத்தட்ட அதே காலத்தில் ஜெரி பெங்களூருவில் திரு. கிளாடியஸ் குலோத்துங்களோடு பணி புரிந்துகொண்டிருந்தான். அவர் ஒரு பன்முகத்தன்மைகொண்ட dynamic personality. அவர்கள் அப்போது தேசிய அளவில் ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
குழந்தைத் தொழொலாளர்கள் பற்றி அவர்கள் செய்த டாக்குமெண்டரியில் ஜெரியின் பங்கு முக்கியமானது. பெங்களூர் சுற்றியுள்ள கிராமங்களில் ஊதுபத்தி உருட்டும் குழைந்தைகள் பற்றி,
பாம்பே காமாட்டி புரா சிகப்பு விளக்குப் பகுதியில் சீரழிக்கப்படும் சிறு பெண்கள் பற்றி, கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கந்தகத்தோடு வாழும் குழைந்தைகள் பற்றி வலிமிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்தனர் அப்போது” என்று இயக்குநர் ஜேடி பதிவிட்டுள்ளார்.
பா. மகிழ்மதி