இலங்கையில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆளும் கட்சி எம்.பி. பலியானார். பல நகரங்களிலும் வன்முறை பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் 7 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.
இன்று காலை இலங்கை பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பாதுகாப்பான இடத்தில் ராஜபக்சே குடும்பத்தினருடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.