மக்கள் கைதட்டலால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்!

– சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். நாயகியாகப் பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக  சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை சேர்த்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் படம் மே 13 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சென்னையில் ‘டான்’ படத்தின் ட்ரெயிலர் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘டான்’ படம் வெற்றியடைந்தால், முன்னணி நடிகர்களும் அறிமுக இயக்குநர்களுடன் சேர்ந்து நடிக்க முன்வருவார்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர்,  “உழைப்பவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. ஒரு படம் வெற்றியடைந்தால்தான், தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து படங்களில் முதலீடு செய்ய முடியும். ‘டாக்டர்’ படத்தின் வெற்றியைக் கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி.

இந்தப் படம் வெற்றியடைந்தால் அறிமுக இயக்குநர்களைக் கொண்டு படம் எடுக்க நம்பிக்கை கொடுக்கும்.

நான் ரசித்த எனக்குப் பிடித்த அத்தனை பேரையும் இந்தப் படத்தில் இணைத்துள்ளனர். சமுத்திரக்கனி எனர்ஜி கொடுப்பார். கல்லூரி நாட்களில் எஸ்.ஜே.சூர்யா குரலில் பேசி நண்பர்களிடம் மிமிக்ரி செய்வேன். அதன் மூலமே கல்லூரிகளில் அடையாளப்பட்டுள்ளேன்.

இந்தப் படத்தில் அவருடனே நடித்துள்ளேன். இந்தப் படத்தில் எனக்குப் பாடல் இருப்பதால், ஜோடி இருப்பதால் நாயகன் எனப் பார்க்கலாம். ஆனால் இந்தப் படத்தில் இருப்பவர்கள் அனைவருமே நாயகர்கள்தான்.

பிரியங்கா மோகனிடம் எந்த சீனையும் கொடுக்கலாம். அவருக்குத் தமிழ் நன்கு புரியும் என்பதால் இயக்குநருக்குப் பிரச்சனை ஏற்படவில்லை.

நல்ல கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கவந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. சிவாங்கி கேமராவுக்கு முன்னாடி ஒரு மாதிரி பின்னாடி ஒரு மாதிரி இல்லை. எப்போதும் ஒரே மாதிரிதான்.

சிபி கடுமையாக உழைக்கிறார். நீங்கள் கடுமையாக உழைத்ததால்தான், அந்த நம்பிக்கையில்தான் நான் இங்கு நிற்கிறேன். உழைப்பவர்களை மக்கள் என்றும் கைவிட்டதே இல்லை.

எனக்கு ஸ்பாட்டில் எதாவது பஞ்ச் போடத் தோன்றும். இந்தப் படத்தில்தான் எந்த வசனத்தையும் போட முடியவில்லை.

ஆனால் முனீஸ்காந்த் மட்டும் இறுதிவரை வசனத்தைச் சேர்க்க முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

அண்ணாமலை படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து பத்து மாடு வாங்க போறேன். படத்தில் வருவதுபோல பால் விற்க போறேன், ஸ்வீட் கடை வைக்க போறேன் சொன்னேன்.

அப்பாவைப் பார்த்தபோது ஐ.பி.எஸ் ஆகவேண்டும் என நினைத்தேன். இறுதியில் மிமிக்ரி செய்தேன். உங்கள் கைதட்டலைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்று சிவகார்த்திகேயன் சுவாரசியமாகப் பேசினார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment