அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!

மே இரண்டாம் ஞாயிறு – உலக அன்னையர் தினம்

மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதே போன்று ஒலிக்கும் சொற்களைக் கொண்டிருப்பதையோ காண முடியும்.

இவ்வளவு ஏன், ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகளும் கூட ‘ம்’ என்று ஒலிக்கும் சத்தங்களை எழுப்புவதைக் காண்கிறோம். அவ்வாறு எளிதாகச் சொல்ல முடிகிற, உச்சரிப்பில் பெரும்பாலும் முதலிடம் பிடிக்கிற ஒரு எழுத்தைக் கொண்டு உருவான ‘அம்மா’ என்ற வார்த்தை தாயைக் குறிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

தாயும் சேயும்!

’தாய்ப் பாசத்தை பிழியறானே’ என்று சினிமாவில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் பலர் கேலி செய்யப்படுவதுண்டு. ஆனாலும், இவ்வுலகில் மிகப்பெரும்பான்மையான அளவில் தாயையும் அவரது பாசத்தையும் போற்றுபவர்களே இருக்கின்றனர்.

இது நம்பிக்கை அடிப்படையிலான கூற்று என்றாலும், இதனை மறுக்க எவரும் முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. மனநலம் சிதைந்த அல்லது உலக வாழ்க்கையில் பற்று அற்ற அல்லது யதார்த்த வாழ்வை நரகமாக மட்டுமே எண்ணுகிறவர்களுக்கே தாயின் அருமை புரியாது.

ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்து சேர்வதற்கான காரணகர்த்தாவாக மட்டுமல்லாமல், அதன் முதல் உறவாகவும் திகழ்வது தாய் மட்டுமே. உண்மையைச் சொன்னால், கருவாய் வழியாக வெளிவருவதற்கு வெகுசில மாதங்களுக்கு முன்னர் சிந்திப்பதற்கான ஆற்றலை அக்கரு பெறும்போதே அவ்வுறவு மலர்ந்து விடுகிறது.

அதன்பின் தாய் தரும் பாலும் அவரது வியர்வை வாசமும் இந்த உலகின்மீது அக்குழந்தையின் பற்றை எல்லையற்றதாக்குகிறது. பிறந்த குழந்தையை விட, அதனைப் பெற்றெடுத்தவளின் மீதான சுற்றத்தினரின் அக்கறையும் பெருமையும் மிக அதிகம். அதனாலேயே, ‘தாயும் சேயும் நலமா’ என்ற விசாரணையில் அவரது பெயரே முன் நிற்கிறது.

இன்றைய தாய்மார்கள்!

’அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ என்ற சொற்றொடர், இன்றைய சூழலில் தாய்மார்களுக்கு மிகவும் பொருந்தும். குழந்தைகளை வளர்ப்பதே பெற்றோரின் கடமை என்றெண்ணும் ஒரு தலைமுறை, வளர்ந்தபின் அவர்கள் முதியோர் இல்லத்தில் வாழ்வதை வருத்தம் சிறிதுமில்லாமல் கடந்து செல்கிறது.

அவர்களில் பெரும்பாலானோர் இப்போதும் தமது குழந்தைகளும் அவர்தம் குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திப்பவர்களாக இருக்கின்றனர்.

ஏனென்றால், தமக்குப் பின் வருபவர்கள் தம்மைப் போல கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணமே இவ்வுலகில் மனித இனத்தை தொடர்ந்து தழைக்கச் செய்கிறது. அந்த பெற்றோரில் ஒருவரான தாயின் கடமைகளை ஒரு எல்லைக்குள் அடக்கவே முடியாது.

நவீன யுகத்தில் வெறுமனே வீடு, கணவர், குழந்தைகள் என்று மட்டுமே பெண்களால் இருக்க முடிவதில்லை. அதையும் தாண்டி பொருளீட்ட வேண்டிய கட்டாயம், பெண்களை வீடு, வெளிப்புறம் என்று இருவேறு உலகங்களில் வாழச் செய்திருக்கிறது.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு உலகங்களில் ஒரு தாயாகத் தொடர்வதென்பது இன்றைய பெண்களுக்கு கடுமையான சவால். ஆதலால், முந்தைய தலைமுறையைக் காட்டிலும் இன்றைய தலைமுறை தாய்மார்களைக் கொண்டாடுவதன் அவசியம் பல்கிப் பெருகியிருக்கிறது.

தாயே.. தெய்வமே..!

என்னதான் தாயைத் தெய்வமாகக் கொண்டாடினாலும், அவரை நம்மில் ஒருவராக சக மனுஷியாக பார்ப்பதுதான் இன்றைய முக்கியத் தேவை. காரணம், தாயைப் புனிதப்படுத்துவதை விட அவரைப் புரிந்து கொள்வதே இன்றைய சூழலுக்கு அவசியமான ஒன்று.

குழந்தைகளைக் கவனிப்பது மட்டுமே தாயின் பணியல்ல; அம்மா என்பதைத் தாண்டி ஒரு பெண்ணுக்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. அதனைப் புரிந்து கொண்டால், அந்த தாயின் உலகம் மிக இலகுவானதாக மாறும்.

எந்நேரமும் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே..’ என்று பாடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தாய் செய்யும் வீட்டு வேலைகளை முடிந்தவரை பகிரலாம். அவர் சொல்லும் வார்த்தைகளை கவனத்துடன் கேட்கலாம். தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் சீரியல்களில் தன்னைப் புதைத்துக்கொண்டு அக்கதாபாத்திரங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் நம் தாய்களிடம், ‘உங்கள் மனதில் இருப்பவற்றைக் கொட்டுங்கள்’ என்று அவர்களது காலடியில் அமர்ந்து கதைகள் கேட்கலாம்.

உழைத்துச் சோர்ந்த கால்களைப் பிடித்து ஆசுவாசப்படுத்தி, அவரது மனதில் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் இல்லாமல் ஆக்கலாம். தந்தைக்கும் தாய்க்கும் சமமான முக்கியத்துவம் தந்து வீட்டுக்குள் சமத்துவத்தை அமல்படுத்தலாம். தாய் காட்டும் பழமையான உலகத்தை கையிலெடுத்து, அவற்றில் நவீனத்திற்கும் நமக்கும் தேவையானவற்றை மட்டும் பின்பற்றலாம்.

இவை எல்லாவற்றையும் விட, தாயைக் கொண்டாடுகிறேன் என்பதை வார்த்தைகளாகச் சொல்லாமல் வாழ்க்கையில் அதனைச் செயல்படுத்திக் காட்டலாம். அப்போது, ஆண்டின் அத்தனை நாட்களிலும் அவரைக் கொண்டாடும் பேறு கிட்டும்.

அப்படி ஒரு தாய் உள்ளம் குளிர்ந்தால், நம் முன் விரியும் உலகம் எந்நேரமும் ஊட்டியாகவும் கொடைக்கானலாகவும் காட்சியளிக்கும். வாருங்கள், நம் வாழ்வை வசந்தமாக்க அன்னையைக் கொண்டாடுவோம்.

வாழ்வின் இடிபாடுகளுக்கு மத்தியில் மனம் அயர்வுறும்போது, தாயின் நினைவுகள் நம்மை புத்துலகுக்கு கை பிடித்து செல்லும். ஒருவரது மனம் இயல்பான சூழலைப் பேணும் திறம் படைத்ததாக இருக்க, உறவும் நட்பும் இணக்கமானதாக இருக்க, வேண்டும்.

அதற்கான வாசல் தாய் மீதான பற்றில் அமைந்திருக்கிறது. அந்த பற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்புதான் அன்னையர் தினம்.

ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் ஞாயிறு ‘அன்னையர் தினமாக’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்று போல் என்றும் நம் அன்னையரைக் கொண்டாடுவோம், அவர்தம் உள்ள மகிழ்ச்சியால் இந்த உலகை அழகாக்குவோம்!

Comments (0)
Add Comment