பால்யத்திலிருந்த அம்மாவின் வாசனை!

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான லதா அருணாசலம், சமீபத்தில் மறைந்த தன் தாயின் நினைவுகள் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அம்மாவின் வாசனை பற்றி சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு…

”நாம் பழகும் மனிதர்களின் பல பண்புகள் நமக்குப் பிடித்திருப்பதைப் போலவே அவர்களுடைய சில வாசனைகளும் நமக்குப் பிடித்து விடும்.

பஷீரின் ‘மதிலுகள்’ வாசித்த பிறகு என்னையறியாமல் சில வாசனைகளைப் பழகுபவர்களிடம் உணர்வேன் அல்லது நான் அவர்களுடன் சில வாசனைகளைப் பொருத்திப் பார்ப்பேன்.

சித்ராவை நினைத்தால் செண்பக மலரின் வாசம், உஷாவுடன் பன்னீர் ரோஜா மணம், தென்றலுடன் துளசியும் விபூதியும் கலந்த ஒரு மணம், பாலாவை நினைத்தால் தென்காசியின் ஈர வாசம், ரம்யாவுடன் காஃபி வாசம், தீபுவுடன் ஊரின் வேர்வாசம் என….

இவை உதாரணங்களே, இவை போன்று பல நேரங்களில் பலரின் வாசங்கள் என் மனதோடு பழகியிருக்கின்றன.

அம்மாவின் பதினாறாம் நாள் காரியம் முடித்து ஏறத்தாழ இரண்டு மாதம் கழித்து இன்றுதான் மீண்டும் வீட்டுக்குப் போனேன்.

அம்மா படுத்திருக்கும் பின் கூடத்தில்  திறந்திருக்கும் கம்பி வலை சன்னல்கள் வழியாக வெயில் சூட்டுடன் வெறுமையும் சேர்ந்து பெய்து கொண்டிருந்தது.

வெளியே இருக்கும் மாதுளை மரத்திலிருந்து எந்நேரமும் கீச்சிட்டுக் கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகள், சலசலக்காமல் அமைதியாக இருந்த தென்னங்கீற்றுகள், அவர் படுத்திருந்த கட்டில், முடங்கிப் போன அவரது தொலைபேசி எண்,

பரணில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவருடைய உறுதுணையான தொலைக்காட்சிப் பெட்டி, அதனுள் ஊடாடும் எண்ணற்ற கதைமாந்தர்கள் என அனைத்துடனும் அவருக்கிருந்த உறவு முடிந்து விட்டிருந்தது.

அதனோடு அந்தக் கூடத்தில் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் மெல்லிய வாசமும் மறைந்து விட்டிருந்தது. குளித்து முடித்தவுடன் உடலெங்கும் அவருக்குப் பூசி விடப்படும் பவுடர், புதிய டயப்பரிலிருந்து எழும் இனம் புரியாத மருத்துவ வாசம், டெட்டாலில் அலசப்பட்ட ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளின் வாசம்,

அனைத்தையும் மீறி லேசாக எழும் உறுத்தாத மூத்திர வாடை, பழங்கதைகளாக விரியும் அம்மாவின் பால்யத்தின் வாசம், கொஞ்சம் சோகத்தின் கொஞ்சம் இயலாமையின் வாசம்.. இருந்தும் அவரது குரலில் வீசும் உற்சாகத்தின் வாசனையே அதிகம்.

இப்போது இவையேதுமின்றி அற்புதமான பெருங்கதையாடலுக்குப் பின் நிலவும் நிசப்தத்தைப் போல அமைதியைப் போர்த்திக் கொண்டிருக்கிறது வீடு.

இனிமேல் இருந்திருந்தால் கஷ்டப்பட்டிருப்பார். இதை விட மேலான இடத்திற்குச் சென்று விட்டார் என்று எல்லோர் மனமும் தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்கிறது.

போதாமைகளை, ஏக்கங்களை, குற்ற உணர்வுகளை, துயர உணர்வுகளின் அடர்த்தியைக் கரைத்துக் கரைத்துக் காலம் நம்மை ஏதோ ஒரு வகையில் மன்னித்தே விடுகிறது.

நாமும் நினைவுகளோடு பொருதாமல் இயல்புடன் இருக்க மனதோடு சமாதானம் செய்து கொள்கிறோம்.

ஆனாலும் அம்மாவின் புடவையில் வாசத்தைத் தேடுவது சிசுவின் பிறப்பிலிருந்தே ஒட்டி வந்து விடுகிறதல்லவா? தொட்டில் பழக்கம் மறப்பதில்லை என்பது உண்மைதான்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment