சினிமாவில் வருடந்தோறும் பல கதாநாயகிகள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்து பல வருடங்களுக்கு திரையுலகில் இளவரசிகளாக வலம் வருகிறார்கள்.
அழகும் திறமையும் இருந்தாலும் கூட, அறிமுகமாகும் முதல் படமே ரசிகர்களை கவரும் விதமாக, ரிலீசுக்கு முன்பே பேசப்படும் படமாக அமைவது என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது.
ஆனால், அறிமுக நாயகி நியாவுக்கு அழகு, திறமையுடன் கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்து முதல் படத்திலேயே கை கூடி வந்துள்ளது.
இல்லையென்றால் மலையாள திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரான வினயன் டைரக்சனில் அதிலும் அவர் தற்போது வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்டு இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை விட இன்னொரு சிறப்பான அறிமுகம் வேறு கிடைத்துவிடுமா என்ன?
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் இயக்குனர் வினயன்.
தமிழில் ‘சேது’ படம் மூலமாக நடிகர் விக்ரம் ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைத்தபோது, ‘காசி’ என்கிற படத்தின் மூலம் அவருக்குள் இருந்த கூடுதல் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் வினயன் தான்.
அப்படிப்பட்ட இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவது நடிகையாக நியாவுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு என்கிற பெயரில் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகனாக பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகர் சிஜு வில்சன் என்பவர் நடிக்கிறார்.
முதல் படமே வரலாற்றுப் படம் என்பதால் ஆரம்பத்தில் நியா சற்று பயந்தாலும் நியாவின் தயக்கத்தை போக்கி அவரை அற்புதமாக நடிக்க வைத்துள்ளாராம் வினயன்.
வினயனின் முந்தைய படத்திலேயே நியாவுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்து சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் அவரது அடுத்த படத்தில் கதாநாயகியாகி விட்டார்.
படப்பிடிப்பில் தினந்தோறும் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று சிலாகிக்கிறார் நியா.
இது தவிர தற்போது பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் ஜோடியாக இன்னொரு மலையாள படத்திலும் நடித்துள்ளார் மியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன.
மலையாளத்தில் நடித்து வந்த சமயத்திலேயே தமிழிலும் நடிக்கும் வாய்ப்பு நியாவை தேடிவந்து தற்போது இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார் நியா.
கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த நியா செவிலியர் பணி மீது உள்ள மதிப்பால். நர்சிங் படிப்பை முடித்தார்.
ஆனால் மாடலிங் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். மாடலிங் அவரை அப்படியே சினிமாவிற்குள் அழைத்து வந்துவிட்டது.
கதாநாயகி என்றாலும் கூட நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கிறார் நியா.