சமரசமற்ற விமர்சனத்தை முன்வைக்கும் எழுத்தாளர் மணா!

பத்திரிகையாளர் மணாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா!

***

மே 5 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பத்திரிகையாளர் மணா எழுதிய பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.

டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவரான முனைவர் குமார் ராஜேந்திரன் தலைமையில் நடந்த விழாவில், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும், இந்தியப் பொதுவுடமைக்கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரனும் கலந்து கொண்டார்கள்.

மணா பதிப்பாசிரியராகப் பதிப்பித்த ‘முள்ளிவாய்க்கால் – குருதி தோய்ந்த குறிப்புகள்’ என்ற நூலை வெளியிட்டுப் பேசினார் தொல்.திருமாவளவன்.

‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப்போராட்ட வரலாற்று நூலை வெளியிட்டுப் பேசினார் சி.மகேந்திரன்.

தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முன்னணி ஊடகவியலாளர்களான சன் நியூஸ் செய்தியாசிரியர் குணசேகரன், புதிய தலைமுறை கார்த்திகேயன், கல்கி ப்ரியன், அருஞ்சொல் ஆசிரியர் சமஸ், வழக்கறிஞர் சுமதி,

சுந்தரபுத்தன், சத்தியம் டிவி அரவிந்தாக்சன், அறம் ஆசிரியர் சாவித்திரி கண்ணன், இயக்குநர் ராசி அழகப்பன், ஜீவா டுடே ஜீவசகாப்தன்,

கேட்டலிஸ்ட் ராம்குமார் சிங்காரம், நியூ புக்லேண்ட்ஸ் சீனிவாசன், டிபிஜி பாலாஜி போன்றவர்கள் நூல்களை வெளியிட்டும், பெற்றுக் கொண்டும் பேசினார்கள்.

‘பரிதி’ பதிப்பகம் எட்டு நூல்களும், டிஸ்கவரி புக் பேலஸ் இரண்டு நூல்களும்  நேர்த்தியாக பதிப்பித்திருந்தன.

தொல். திருமாவளவனும், சி.மகேந்திரன் இருவரும், ஒரு பத்திரிகையாளராக மணாவின் நேர்மறையான அணுகுமுறை, தொடர் முயற்சி, கடும் உழைப்பு மற்றும் அவரது நேர்மையான எழுத்தின் சாத்தியங்களைப் பற்றி மனந்திறந்து பாராட்டினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து பேசிய சாவித்திரி கண்ணனின் வார்தைகளிலிருது சில…

“மணாவை எழுத்து ராட்சஷன் என்றால், மிகையல்ல! அவரைப் போல எழுதிக் குவித்தவர்கள் இதழியலில் சம காலத்தில் வேறு யாரும் எனக்கு தெரிந்த வரை இல்லை.

ஓய்வு, ஒழிச்சலற்ற உழைப்பாளி. தன் சமகால முக்கிய ஆளுமைகள் அனைவரையும் அவர் நேர்காணல் செய்துள்ளார்.

எனக்கும், அவருக்கும் பெரிய முரண் என்னவென்றால், அவர் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவ்வாக மட்டுமே பார்ப்பார்! நான் இரு பக்கங்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்ப்பேன். அதுவும் தவறுகள் கண்டால், அதை சுட்டிக் காட்டாமல் எனக்கு நிம்மதி ஏற்படாது!

பொது சமூகத்திற்கே எதிரி என்று மனதில் பட்டுவிட்டால் அப்படிப்பட்ட அந்தச் சிலரிடம் இருந்து நான் வலிந்து விலகி நிற்பேன். ஆனால், அவர் அனைவரையும் அரவணைத்து செல்பவர். அதன் வெளிப்பாடு தான் அவர் பலராலும் விரும்பப்படுகிறார்.

அசாதாரண சகிப்புத் தன்மை மணாவிற்கு உண்டு. அது அளவுக்கு மீறியது. மனதிற்குள்ளே போட்டு மருகிக் கொள்வார்.

ஆனால், பிறர் மனம் புண்பட பேச மாட்டார்! இந்த சுபாவம் தான் அவரது ப்ளஸ் பாயிண்ட் மற்றும் மைனஸ் பாயிண்டும் கூட!

இந்த நிகழ்வை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த கே.எஸ்.இராதாகிருஷ்ணன், குமார் ராஜேந்திரன் ஆகியோரையும், நிகழ்ச்சியை தொகுத்து அளித்த பேராசிரியர் அபிதா சபாபதியையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

நீண்ட நாள் நண்பர்கள் ராசி அழகப்பன், சுந்தர புத்தன், பிரியன், பரிசல் செந்தில் நாதன், புதிய தலைமுறை கார்த்திகேயன், சன் தொலைக்காட்சி குணசேகரன், தம்பி ஜீவ சகாப்தன், ஹமீது, புதிய நண்பர்கள் அரவிந்தாக்ஷன், பதிப்பாளர் பரிதி,

ஓவியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரிடம் பேசி அளவளாவியது மன நிறைவை தந்தது! மணாவின் குடும்பத்தாரையும் பார்த்து பேசியது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று தனது பேச்சை நிறைவு செய்தார்.

இந்த விழாவை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் அபிதா சபாபதி தொகுத்து வழங்க, பதிப்பாளரான இளம்பரிதி நன்றியுரைக் கூறினார்.

நூலாசியர் மணா ஏற்புரை வழங்கினார்.

விழாவில் வெளியிடப்பட்ட நூல்களின் பட்டியலும், அந்த நூல்களின் சாரம்சமும்

  1. முள்ளிவாய்க்கால் குருதி தோய்ந்த குறிப்புகள்: – இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பெரும் இன அழிப்பை இலங்கை அரசு அந்நாட்டு ராணுவத்துணையோடு 12 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியபோது உருவான வலியை, ஈழத்தமிழர்களும் சரி உலகளாவிய தமிழர்களும் சரி எளிதில் மறந்து விட முடியாது.
    அப்போதைய இன அழிப்பிற்கான ஒரு வரலாற்று ரீதியான சாட்சியங்களை முன் வைக்கின்ற இந்த நூலின் தலைப்பில் குருதி தோய்ந்த குறிப்புகள் என்கின்ற சொற்கள் இடம்பெற்றிருப்பதே இந்த நூலின் வீரியத்தை எடுத்துக் காட்டுகிறது.
  1. உயிருக்கு நேர்: – கீழடி அகழாய்வில் மட்டுமல்ல, தொன்மத்திலும் மூத்த மொழியான தமிழை தங்கள் உயிருக்கு நிகராக நேசித்தவர்கள் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள். வெவ்வெறு கட்டங்களாக தமிழ் மொழியைக் காப்பதற்கான தீவிரமான போராட்டங்கள் 1930-லிருந்தே நடந்திருக்கின்றன. இந்த எழுச்சியான போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த நூல்.

  2. ஊடகம் யாருக்கானது?: – தமிழ் ஊடகங்களில் சுமார் 43 ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான மணாவின் சொந்த ஊடக அனுபவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் இன்றைக்கு ஊடகத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான ஒரு முன்மாதிரியான நூலாகவும் இந்த நூல் இருக்கும்.
  3. சாதி என்பது குரூரமான யதார்த்தம்:தமிழக பண்பாட்டு அசைவுகள் உட்பட பல்வேறு முக்கியமான நூல்களை எழுதியிருக்கும் ஆய்வாளரான தொ.பரமசிவன் அவர்களுடனான நேர்காணலும், தொ.பரமசிவன் எழுதிய சில கட்டுரைகளும் அடங்கிய இந்த நூல் எளிய மொழியில் தமிழகத்தின் ஏற்றமும் இறக்கமுமான சமூக அவலங்களைச் சொல்கிறது.
  4. ஓவிய நிழல்கள்: – இலங்கையில் பெரும் இன அழிப்பு நடந்தபோது தமிழகத்திலுள்ள முக்கியமான நவீன ஓவியர்கள் கோடுகளாலும் வர்ணங்களாலும் நிகழ்த்திய எதிர்வினையே இந்த ஓவியத் தொகுப்பு.
  5. ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்: – தமிழக அரசியல் பண்பாடு மற்றும் கள ஆய்வில் முன்னணியில் உள்ள 30 ஆளுமைகளுடனான விரிவான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூல். பல இதழ்களில் பத்திரிகையாளர் மணா எடுத்து பதிவு செய்த இந்த நூல் ஒரு கால கட்டத்தின் சாட்சியம்.

  6. தமிழர்கள் எதில் குறைந்து போய் விட்டார்கள்: – தமிழர்களுக்கு என்று நீண்ட நெடிய பண்பாட்டு ரீதியான தொல் மரபும் வாழ்வியலும் நிறைந்திருந்தாலும் இன்றைக்கு அதே தமிழர்கள் எப்படிப்பட்ட சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இத்தகைய அந்நியமாதல் நிகழ்ந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நூல்.
  7. மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்: – இலக்கியம், அரசியல், ஊடகத்துறை மற்றும் பண்பாடு சார்ந்த பல ஆளுமைகள் மறைந்தபோது எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இப்படி 30 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
  8. ஒசாமஅசா: – பத்திரிகை, நாடகம், திரைப்படம், அரசியல் என்று பல்வேறு தளங்களில் தான் சந்தித்த அனுபவங்களை சோ அவர்கள் சொல்ல, அதைப் பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளரான மணா.
    பிரபல வார இதழில் வெளிவந்தபோது பெரும் பாராட்டைப்பெற்றது இந்த சோவின் விரிவான அனுபவங்கள். தமிழக அரசியல் குறித்த விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான பாடம்.

    10.ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு உலகம்: – தமிழ் இலக்கிய உலகில் தனக்கான தனித்தன்மையுடன் சிறுகதை, நாவல், திரைப்படம், பயணக்கட்டுரை என்று பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன் என்கிற எழுத்தாளரைப் பற்றியும் சக மனிதராக அவருடன் பல எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய அனுபவங்களையும் அவருடைய மிக அபூர்வமான புகைப்படங்களையும் ஒரு சேர தொகுத்திருக்கிறது இந்த நூல்.

                           

Comments (0)
Add Comment