கல்விக்கான மேடைகளில் பெண்கள் அதிகமாக இடம்பெறுவது எப்போது?

கல்வியாளர் உமா

பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதிய புத்தகம் சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் அரங்கில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு – எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்ற இந்த நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது.

நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்புகள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி, அண்ணாமலை பல்கலைக்கழக மதச்சார்பற்ற பொறியாளர் அமைப்பு மற்றும் பாரதி புத்தகாலயம்.

புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் மேனாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள். அவர் கல்வி மட்டுமல்ல நீதித்துறையும் எமர்ஜென்சி காலகட்டத்தில் மத்திய அரசிற்கு சென்றுவிட்டது.

அது இன்னும் யாரும் அறியவில்லை என்ற கருத்தை பகிர்ந்து, நாம் கல்வியை மட்டும் மாநிலப் பட்டியலுக்கு கேட்பதைவிட எல்லாவற்றையும் கொடுங்கள் என்று கேட்கவும் அதற்காக புரிந்து போராடவும் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த, அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்த புத்தக கருத்துகளுக்கு ஒப்பிட்டு நடைமுறை பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்து பேசினார்.

அதோடு மத்திய அரசிற்கு, மாநில அளவில் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் மீது உரிமை ஏன்? நாம் செலவழிக்கிறோம் கல்விக்காக, இவர்கள் ஏன் உரிமை கோருகிறார்கள் என்பதோடு மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட நீதிமன்றங்களில் கூட எதிர்காலத்தில் வடநாட்டவர்கள் வந்து பணியாற்றலாம் என்ற கருத்தையும் நம்மிடம் கூறும் பொழுது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அதற்கான அரசியலமைமைப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், எமர்ஜென்சி காலகட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு உரிமைகளெல்லாம் எத்தகைய நிலையில் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் தெளிவாகப் புலப்படுத்தினார்.

சரத்துக்களைக் குறிப்பிட்டு ஆதாரங்களுடன் பேசினார். மற்ற பேச்சாளர்கள் நால்வருமே அவரவர் கோணத்தில் புத்தகத்தையும் தேசிய கல்வி கொள்கை ஏன் வேண்டாம் என்பதையும் இப்போதைய கல்விச்சூழல் எப்படி இருக்கிறது என்பதையும் அலசி ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு மிகத் தெளிவாக கொடுத்தனர்.

பேராசிரியர் ஜவகர் நேசன், தனது ஏற்புரையில் கர்ஜனை செய்தார் என்று கூறலாம். உண்மையான கல்வி எது அதைவிடுத்து நாம் எங்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம்?, மக்கள் முடிவு செய்ய வேண்டியது எல்லாம் ஆட்சியாளர்கள் ஏன் செய்கிறார்கள்? கல்வியை அரசியல் வயப்படுத்துவது சரியா? அது எத்தகைய விளைவுகளை கொடுக்கும் என்று பல கோணங்களில் நமக்கு விவரித்தார்.

ஜெர்மனியும் இத்தாலியும் முசோலினி ஹிட்லர் தங்களின் பிடியில் மக்களை எடுத்துச் செல்வதற்காக தேசியவாதமாக மாற்ற கல்வியை எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தினர் என்பதனை முன்வைத்து, இந்தியாவிலும் அத்தகைய சூழல் உருவாகிவிட்டது என்பதை நமக்கு உணர்த்தினார்.

தேசப்பற்றுக்கும், தேசத்தின் மீது வெறி ஏற்படுவதற்கும் உள்ள இடைவெளியை படிநிலைகளாக வகுப்பு எடுப்பது போல எடுத்தார் ஜவஹர் அவர்கள். ஆகவே நாம் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது மட்டுமல்ல எப்படிப்பட்ட கல்வி இங்கு தேவை என்பதனை பற்றி சிந்திக்க இப்போதாவது துவங்க வேண்டும்.

கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கல்வி தளத்தில் பணியாற்றுவோர் கல்வித் தளத்தின் மீது ஆர்வமாக செயல்படுவோர் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்கள் இவர்கள் எல்லோரும் இணைந்து,

எதிர்காலத்தில் நாம் முழுமையாக அடிமைச் சமுதாயமாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் இப்போதைய கல்வி முறையைக் கட்டாயமாக கேள்விக்கு உட்படுத்தி மாற்றங்களை கொண்டு வருவது மிக முக்கியம் என்பதனை இந்த நூல் வெளியீடு நமக்கு உணர்த்தியது.

நிகழ்வின் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் யாரையுமே நாம் குறைத்து மதிப்பிட முடியாது எல்லோரும் மிகத் தகுதி வாய்ந்தவர்கள் மிகவும் ஏராளமான வருடங்கள் பணியாற்றி இந்த சமூகத்திற்காக தங்கள் உழைப்பைக் கொடுத்து அக்கறை கொண்டவர்கள் . அவற்றில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அங்கு பெண்களின் இடம் என்பது மிகவும் சொற்பமாக, ஏன் கூட்டத்தில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு அமைப்பு ரீதியான நபராக தான் நான் அந்த இடத்தில் பிரதிநிதித்துவம் பெற்றேன்.

மற்றபடி பேசுவதற்கும் மற்ற முன்னிலை வகித்தவர்கள் இடத்திலும் எந்த பெண்களுமே இல்லை அது மிகவும் எனக்கு வருத்தமாக இருந்தது கீழிருந்து மேடையை பார்க்கும்போது வருத்தமாக இருந்தது.

அதே அளவு மேடையில் நான் அமர்ந்து எதிரில் அமர்ந்திருந்த ஜன கூட்டத்தை பார்க்கும் பொழுது முக்கியமான நபர்கள் கட்சி சார்ந்தவர்கள் அரசியல் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஊடகத்தில் இருந்துவந்தவர்கள் என்று ஏராளமான மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இருந்தாலும் பெண்களில் மிக மிக குறைவான எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

ஏனென்றால் இன்று கல்வித் தளத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே ஆசிரியர்களாக பேராசிரியர்களாக மற்ற எல்லா இடங்களிலும் பெண்களே அதிக சதவீதத்தில் இருக்கும்போது கல்வி என்பது சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு காரணி என்கிற போதும் அவர்கள் இதில் ஈடுபட வேண்டும் அல்லவா, அவர்களுக்கு இது குறித்த புரிதல் வர வேண்டும் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை.

முன்னேறிய மாநிலங்களில் இந்திய அளவில் நம்மளுடைய தமிழகம் பெண் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்று எல்லோரும் பறை சாற்றுகிறார்கள். ஆனால் இதுபோன்ற கல்விக்கான கூட்டங்களில் பெண்களின் இடம் என்னவாக இருக்கிறது என்பது நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

-பா.மகிழ்மதி

Comments (0)
Add Comment