இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான கடமையாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.
அதன்படி, இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர். 30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, 30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள மசூதிகளில் இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் விடிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து இறைவனை தொழுது, புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தொழுகைக்குப் பிறகு, தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, தொழுகை சிறப்பாக நடந்தது.
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.