தமிழகத்தில் கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து, உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் நாளை துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 28-ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக வேலுாரில், 42 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.
இது 108 டிகிரி பாரன்ஹீட். திருத்தணி, 41; மதுரை விமான நிலையம், திருச்சி, தஞ்சாவூர், கரூர் பரமத்தி, 40; ஈரோடு, சென்னை மீனம்பாக்கம், 39; கடலுார், சேலம், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை நகரம், சென்னை நுங்கம்பாக்கம், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.
அதாவது நேற்றைய நிலவரப்படி 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனாலும், வெப்பச் சலனம் காரணமாகவும், தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பு அளவிலிருந்து, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில், வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.